ஐதராபாத் :சுரங்க ஊழலில் சிறையில் அடைக்கப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்க ரூ.5 கோடி லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பட்டாபி ராமராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடியாக கைது செய்தனர். இவரது வீட்டில் ரூ.3 கோடி ரொக்க பணம் கைப்பற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ளது ஒபுலாபுரம் சுரங்க நிறுவனம். இது கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமானது.
இந்த நிறுவனம் பற்றி பல்வேறு புகார்கள் வந்ததை அடுத்து, சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜனார்த்தன ரெட்டியை சிபிஐ கைது செய்தது. அவரது ஜாமீன் மனுவை சிபிஐ கோர்ட் தள்ளுபடி செய்தது. இதை ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்களிலும் ஜனார்த்தன ரெட்டி ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதையடுத்து ஜாமீன் கேட்டு சிபிஐ கோர்ட்டில் ஜனார்த்தன ரெட்டி மீண்டும் மனு தாக்கல் செய்தார். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் 12,ம் தேதி ஐதராபாத் சிபிஐ கோர்ட் நீதிபதி பட்டாபி ராமராவ் திடீரென ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இது சிபிஐ வட்டாரத்தில் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்
தியது.
அதன்பின் சிபிஐ அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். நீதிபதி பட்டாபி ராமராவ், இவரது உறவினர்களின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்தனர். அப்போது பட்டாபி ராமராவின் மகன் வங்கி கணக்கில் ரூ.3 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின்நடத்திய விசாரணையில், ஜனார்த்தன ரெட்டியை ஜாமீனில்விட ரூ.10 கோடி பேரம் பேசியதும் இடைத்தரகர்கள் ரூ.5 கோடியை எடுத்து கொண்டு ரூ.5 கோடியை பட்டாபிக்கு கொடுத்திருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து ஆந்திர ஐகோர்ட் தலைமை நீதிபதி மதன் பி.லோகுரிடம் சிபிஐ புகார் மனு அளித்தது. நீதிபதி பட்டாபி ராமராவை சஸ்பெண்ட் செய்து தலைமை நீதிபதி கடந்த 1ம் தேதி அதிரடியாக உத்தரவிட்டார். இதுகுறித்து ஐகோர்ட் தனியாக விசாரணை நடத்தியது. ÔÔஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்காமல், ஐதராபாத்தை விட்டு பட்டாபி ராமராவ் வெளியூர் செல்ல கூடாதுÕÕ என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை மீண்டும் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரூ.3 கோடி ரொக்க பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த நீதிபதி பட்டாபி ராமராவை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்து அழைத்து சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக