வெள்ளி, 1 ஜூன், 2012

நீதிபதி சஸ்பெண்ட்! சுரங்க ஊழல் ஜாமீன் 5 கோடி லஞ்சம்

 Hc Suspends Cbi Court Judge சுரங்க ஊழல்': ஜாமீன் பெற நீதிபதிக்கு ரூ. 5 கோடி லஞ்சம் தந்த ஜனார்த்தன ரெட்டி-நீதிபதி சஸ்பெண்ட்!

ஹைதராபாத்:  சுரங்க ஊழலில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்க, சிபிஐ சிறப்பு நீதிபதி பட்டாபி ராமா ராவ் ரூ.5 கோடி லஞ்சம் வாங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து நீதிபதி பட்டாபி ராமா ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரது மகனின் வங்கி லாக்கரில் சிபிஐ நடத்திய சோதனையில் ரூ.2 கோடியை கைப்பற்றப்பட்டுள்ளது. மீதி ரூ. 3 கோடியை அவர் எங்கே பதுக்கினார் என்ற விசாரணை நடக்கிறது.
முன்னாள் கர்நாடக அமைச்சரான ஜனார்த்தன ரெட்டி மீதான ஓபுலாபுரம் சுரங்க முறைகேடு வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீலட்சுமிக்கு ஜாமீனை பட்டாபி ராம ராவ் நிராகரித்திருந்தார். ஆனால் வழக்கின் முதன்மை முற்றவாளியாக ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் கொடுத்திருந்தார். இந்த விசித்திரத்தை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.

ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதில் ஊழல் முறைகேடு நடந்திருப்பதும் தெரியவந்தது.

இதில் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது மகனின் வங்கி லாக்கரில் இருந்து ரூ. 2 கோடி மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் நேற்றிரவு பட்டாபி ராம ராவை அதிரடியாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.

சில வாரங்களுக்கு முன்புதான் சி.பி.ஐ. நீதிபதியாக பட்டாபி ராம ராவ் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குறுகிய காலத்தில் அவர் ஓபுலாபுரம் சுரங்க முறைகேடு வழக்கு போன்ற ஒன்றிரண்டு வழக்குகளை மட்டுமே நடத்தினார்.

அதற்குள் அவருக்கே லஞ்சம் தந்து அவரையும் மாட்டிவிட்டுவிட்டார் ஜனார்தன ரெட்டி. உரிய அனுமதியின்றி ஹைதராபாத் நகரை விட்டு பட்டாபி ராம ராவ் எங்கும் வெளியே செல்லக் கூடாது என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டாபிராம ராவுக்குப் பதில் சி.பி.ஐ. நீதிபதியாக புல்லையா நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக ஜனார்தன ரெட்டியின் வழக்கு இன்னொரு சிபிஐ நீதிமன்ற நீதிபதியான நாகமூர்த்தி சர்மா முன் விசாரணைக்கு வந்தது. அவர் விடுமுறையில் சென்றதால் வழக்கை அவருக்குப் பதில் விசாரித்த பட்டாபி ராம ராவ், ஜாமீன் தந்துவிட்டார். இதற்காக ரூ. 5 கோடியை லஞ்சமாக வாங்கியுள்ளார்.

ஓபுலாபுரம் சுரங்க ஊழல் வழக்கில் பணம் கொடுத்து ஜாமீன் பெற்றாலும் ஜனார்த்தன ரெட்டி, மற்றொரு வழக்கில் ஜாமீன் கிடைக்காமல் தற்போது பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக