அதிமுக அரசின் அராஜகப் போக்கைக் கண்டித்து ஜூலை 4ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம்- திமுக!
அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அடுத்தடுத்து திமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், திமுக பிரமுகர்கள் மீது சரமாரியாக நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகள் பாய்ந்தவண்ணம் உள்ளன. கைதாவதும், ஜாமீனில் வெளியே வருவதும், பிறகு மீண்டும் கைதாவதுமாக உள்ளனர் திமுகவினர்.
இதில் மதுரை மாநகர திமுக செயலாளர் தளபதியை அடுத்தடுத்து கைது செய்து வருகின்றனர் போலீஸார்ர். மூத்த தலைவரான வீரபாண்டி ஆறுமுகம் மீண்டும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வழக்குகள் பாய்ந்து வருவதால் திமுகவினர் கடும் கொந்தளிப்படைந்துள்ளனர். நமது எதிர்ப்பை அதிமுக அரசுக்கு காட்டியாக வேண்டும் என்ற முனைப்புடன் அவர் உள்ளனர்.
இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதியும், பொறுமைக்கு எல்லை உண்டு என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது.
இக்கூட்டத்தில் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அதிமுக அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் மிகப் பெரிய போராட்டம் ஒன்றை நடத்தும் முடிவை திமுக எடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியதால் அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பெரும் திரளாக கூடினர்.
கூட்டம் மாலை வரை தொடர்ந்து நடந்தது. கூட்டத்தில் பேசிய பலரும் அதிமுக அரசைக் கடுமையாக கண்டித்துப் பேசியதாக கூறப்படுகிறது. வழக்கமாக நிதானமான வேகத்துடன் பேசும் மு.க.ஸ்டாலின் கூட இன்று சற்று கடுமையாக பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறை நிரப்பும் போராட்டம்
கூட்டத்தின் இறுதியில், அதிமுக அரசின் அராஜகப் போக்கைக் கண்டித்து ஜூலை 4ம் தேதி மாநிலம் தழுவிய மாபெரும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவது என்றும், அதில் பெருமளவில் திமுகவினர் கலந்து கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குண்டாஸ் சட்டத்திற்குக் கடும் கண்டனம்
இதேபோல முன்னாள் அமைச்சர்களையும் திமுக தலைவர்களையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யும் நடவடிக்கைக்கும் திமுக செயற்குழுவில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அறப் போர் விளக்கக் கூட்டங்கள்
செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஜூலை 4ம் தேதி போராட்டத்திற்கு முன்பாக, மாவட்டத் தலைநகரங்களிலும், பெருநகரங்களிலும் அறப் போர் விளக்கக் கூட்டங்கள் நடத்தவும் செயற்குழு முடிவெடுத்துள்ளது.
வழக்கம் போல அழகிரி வரவில்லை
இன்றைய கூட்டத்தில் மு.க.அழகிரி வழக்கம் போல கலந்து கொள்ளவில்லை. சமீப காலமாக முக்கிய கூட்டங்களில் பங்கேற்காமல் புறக்கணிப்பதை ஒரு வழக்கமாக்கிக் கொண்டுள்ளார் கட்சியின் முக்கியப் பதவியை எதிர்நோக்கி போராடி வரும் மு.க.அழகிரி. இதனால் திமுகவின் முன்னணித் தலைவர்கள் கடும் அதிருப்தியுடன் உள்ளனர். ஆனால் கருணாநிதியின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக அவர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்த முடியாத நிலையில் திமுகவினர் உள்ளனர்.
இன்றைய கூட்டத்து்கும் அழகிரி வரவில்லை. மாறாக, மதுரை அருகே உள்ள தனது பண்ணை வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக