புதன், 20 ஜூன், 2012

நான் செய்த 4 'தவறுகள்': ராசா

 I Did Four Mistakes Says Raja
2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் நான் 4 தவறுகளைச் செய்துள்ளேன் என்று முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா கூறினார்.
2-ஜி வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ராசா தனது சொந்த ஊரான பெரம்பலூருக்கு முதன்முறையாக வந்தார். அவருக்கு திமுக தொண்டர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள திமுக பிரமுகர்களை அவர்களது இல்லங்களுக்கே சென்று ராசா சந்தித்தார்.
செந்துறைப் பகுதியில் தொண்டர்களிடையே பேசிய அவர், இந்தப் பகுதி சுயமரியாதை தீரர்கள் வாழ்ந்த பூமி. வழக்கு நிலுவையில் உள்ளதால் அதிகம் பேசக் கூடாது. 3 முறை என்னை மக்களவை உறுப்பினராக்கிய பூமி இது. இந்த மாவட்ட மக்கள் காட்டும் அன்பு என்னைத் திக்குமுக்காட வைத்துள்ளது.
இவ்வளவு வழக்குகள் தொடர்ந்தும், ஒரு தவறும் செய்யவில்லை என ராசா பேசுகிறாரே எனப் பத்திரிகைகள் எழுதுகின்றன.
உலகத்தில் எதைப் பெற விரும்பினாலும், மற்றொன்றை இழந்துதான் பெற முடியும். நாற்காலிக்காக ஒரு மரத்தை இழக்கிறோம். ஒரு பவுன் நகை தயாரிக்கும்போது, ஒரு கிராம் சேதாரம் ஏற்படும்.
இந்தியாவில் தற்போது சாதாரண மனிதன் கையிலும் செல்போன் இருக்கிறது. அதற்காக நான் 15 மாதம் சிறையில் இருந்துள்ளேன். நான் செய்தது 4 தவறுகள்.
முதல் தவறு ஸ்பெக்ட்ரம் பிரச்சனை இவ்வளவுதான் என வெளிப்படையாகக் கூறியது. 2-வது தவறு ஒரு ரூபாய் என்றிருந்த செல்போன் கட்டணத்தை 30 பைசாவாகக் குறைத்தது.
3-வது தவறு நான் பதவியேற்றபோது 100 கோடி இந்திய மக்கள் தொகையில், 30 கோடி பேரே செல்போனை பயன்படுத்தினர். சிலரின் ஆதிக்கத்தில் இருந்த இந்தத் துறையை மீட்டு, பதவியை விட்டு இறங்கும்போது, 90 கோடி பேர் செல்போனை பயன்படுத்தினர். இதை நான் சொல்லவில்லை, நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியது.

4-வது தவறு இந்தியக் குடிமகன் சராசரியாக மாதம் ரூ. 310 செல்போன் கட்டணமாகச் செலுத்தி வந்ததை ரூ. 100 ஆகக் குறைத்தது.
இந்தக் 'குற்றங்களை' தவிர, வேறு எதையும் நான் செய்யவில்லை. வழக்குகளில் இருந்து விரைவில் விடுபட்டு உங்களைச் சந்திப்பேன். எப்படி ஒரு பறவை எங்குச் சென்றாலும், கூடு வந்து சேருவதைப் போல அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை மறக்க மாட்டேன் என்றார் ராசா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக