புதன், 27 ஜூன், 2012

3 எதிர்மறை விமர்சனங்கள் மூலம் குழியில் தள்ளப்பட்ட ஒரு நல்ல திரைப்படம்.

தமிழ் சினிமாவின் சாபக்கேடுகளில் ஒன்று நல்ல படம் வருவதில்லை என எல்லோரும் எப்போதும் குற்றம் சாட்டிக்கொண்டே இருப்பது. நல்ல படங்கள் வந்தால் அதை வரவேற்பதில் காட்டும் அக்கறையைவிட அதை குப்பை எனச் சொல்வதற்கென ஒரு கூட்டம் உருவாகிவந்திருக்கிறது 

மூன்று ( ௩ ) சினிமா வெளிவந்தபோது அதைப் பற்றி வந்த வியாபார ரீதியான எதிர்மறை விமர்சனங்களை பார்த்தும், ஐஸ்வர்யா திரைப்படத்தின் இயக்குனர் என்பதாலும் அதைப் பார்க்காமல் தவிர்த்து வந்தேன். பொதுவாக தனிப்பட்ட ஆட்கள் மீது திட்டமிட்டு பரப்பப்படும் அல்லது தன்னை உயரத்தில் வைத்துக்கொண்டு அதாகப்பட்டது காசு கொடுத்து படம் பார்க்கும் ஒரே தகுதியே சினிமாத்துறையில் இருப்பவர்களைப் பற்றி எந்தவித கருத்தும் சொல்லும் உரிமையில் அவர்களை கேவலப்படுத்துவது. ஒரு படம் சிறந்த படமா இல்லை சராசரிப் படமா எனத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக அப்படத்தின் வருமானத்தை கொண்டு அளவிடுவதும் தொடர்ச்சியாக நாம் செய்துவரும் தவறுகள். ஐஸ்வர்யாவுக்கு நடந்ததுகூட Charecter assasination தான்.
மூன்று ( 3) படத்துக்கு வந்த திரைப்பட விமர்சனங்களைவிட அப்படத்தினால் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஏற்பட்ட மன உழைச்சலும், அந்தப் படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்திற்காக அவரை தயாரிப்பாளர்கள் நெருக்கியதாக சொல்லப்படும் விஷயங்களே பரபரப்பை நம்பிச் செயல்படும் பத்திரிக்கைகளுக்கும் நமக்கும் போதுமானதாக இருந்தது.
தனுஷ் :-
இந்தப் படத்தில் தனுஷுக்கு கிடைத்திருக்கும் வேடம் சாதாரணமானதுதான். ஆனால் எவ்வளவு இயல்பாகச் செய்ய முடியுமோ அவ்வளவு இயல்பாக அந்த "ராம்" ஆகவே மாறிவிடுகிறார். கொஞ்சல் ஆகட்டும், வருத்தங்களை காண்பிப்பதில் ஆகட்டும், மனநிலை பிறழ்ந்தது எனத் தெரிந்தவுடன் அவர்காட்டும் முக பாவங்களாகட்டும், கலக்குகிறார். குறையென அவர் பாத்திரத்தில் சொல்வதற்கு எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. தான் ஒரு மசாலா நடிகன் இல்லை என ஒவ்வொரு படத்திலும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். அடுத்த கமல், ரஜினி என்றேல்லாம் சொல்லி அவரைக் கேவலப்படுத்தக் கூடாது. தனுஷ் தமிழ் திரையுலகின் ஒரு தனி நாயகனாக வலம் வரும் காலம் தொலைவில் இல்லை. மூன்று படம் அவரது திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களில் ஒன்று. மிகச் சிறப்பான காட்சிஎனில் " நான் பைத்தியமாடா? எனக் கேட்டு அவர் காண்பிக்கும் முக பாவங்கள். மிக்கிய முக்கியமாக ஹீரோயிசம் ஏதுமின்றி நடித்தது.

ஸ்ருதி :-

நிச்சயமாக இப்படி ஒரு நடிப்பை இந்தப் பெண்ணிடம் எதிர்பார்க்கவே இல்லை. கண்களின் அழகை எல்லாம் வர்ணிக்க முடியாது. அவ்வளவு அழகு. சிறு வயது ஸ்ருதியின் நடிப்பும், விடலைக் காதலை மிக இயல்பாக நடித்துச் செல்வதிலும் மிளிர்கிறார். அப்படியே தனுஷுடனான திருமணத்திற்குப் பிறகும். காதல் பொங்க வாழ்வதிலும், தனுஷிடம் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி அறிந்தும் அதைப்பற்றி முழுதும் தெரியாமல் தவிப்பதிலும் கலக்குகிறார். வழக்கமாக கிண்டலாகச் சொல்லப்படும் கெமிஸ்ட்ரி தனுஷுக்கும் ஸ்ருதிக்கும் இடையில் கச்சிதமாக பொருந்துகிறது. உண்மையில் காதலித்து கைப்பிடித்து மகிழ்வுடன் வாழ்வோருக்கு இந்தப்படம் அவர்கள் வாழ்க்கையை மீண்டும் திரையில் பார்க்கும் அனுபவத்தைத் தரும். கண்கள் கலங்குவதிலும், அழும்போதும் நம் மனதை இனம்புரியாத சோகம் கவ்விக்கொள்கிறது. ஸ்ருதியின் அழுகை நிச்சயம் சினிமாத்தனம் இல்லை. மனதை பிசையும் கஷ்டத்தை நினைத்து அழும் மிகச் சோகமான அழுகை. படம் பார்த்து வெகுநேரம் வரை அவரது அழுகை மனதைவிட்டு அகலவே இல்லை. அடுத்து கலக்கப்போகும் நடிகைகளில் இவருக்கும் மிக முக்கிய இடம் இருக்கிறது. அவரது அழகு, உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தும் கண்கள், மிக முக்கியமாக இயல்பான நடிப்பு அவரை தமிழ் சினிமாவின் உச்சங்களை நோக்கி அழைத்துச் செல்லும். மசாலாப் படங்களில்கூட தனது சிறப்பான நடிப்பால் கலக்கப்போகிறார் என்பது மட்டும் நிச்சயம்.

ஐஸ்வர்யா :-

வாய்ச்சவடால்கள் இல்லாமல் அழுத்தமான திரைப்படத்தின் மூலம் தானும் ஒரு சிறந்த பெண் இயக்குனர்தான் என சொல்லாமல் சொல்கிறார். அமர்க்களமான ஆரம்பம். ரஜினி தனது மகளைப் பற்றி பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இயல்பான திரைக்கதையும், சீரான ஓட்டமும், நடிகர்களின் தேர்வும், காட்சிகளின் கோர்வையும் என ஒவ்வொன்றிலும் சிறப்பாக செய்திருக்கிறார். அருமையான இயக்கம். வணிக லாபங்களுக்காக குத்துப்பாட்டோ, தேவையற்ற சண்டைகளோ இன்றி ஒரு நிறைவான படத்தை அளித்திருக்கிறார். வழக்கமாக முதல் படத்தில் எல்லோரும் கலக்குவதுதான் , அடுத்தடுத்த படங்களிலும் இதே போல சிறப்பாகச் செய்வதில்தான் வெற்றி இருக்கிறது. இந்தப்படத்திற்கு ஸ்ருதியை தேர்ந்தெடுத்தது அவரது புத்திசாலித்தனம்.

கதை :-

இரு விடலைக் குழந்தைகள் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். நாயகனுக்கு மனப்பிறழ்வு நோய் இருப்பது திருமணத்திற்குப் பிறகு நண்பன் மூலம் தெரிய வருகிறது. அதை தனது காதல் மனைவி அறிந்தால் மிக வருத்தபடுவாள் எனச் சொல்லாமல் மறைத்து மனப்பிறழ்வின் உச்சத்தில் தற்கொலை செய்துகொள்கிறான் நாயகன். ஏன் தனது கணவன் தற்கொலை செய்துகொண்டான் என்பதை நண்பன் மூலம் அறிய வருகிறாள். அதுதான் மொத்தக் கதையும். நாயகி காதலுடன் வாழ்ந்த காலங்கள் அவளது பிளாஷ்பேக்கிலும், நாயகனின் நண்பன் நாயகன் ஏன் இறந்தான் எனச் சொல்லும் பாகம் என இரு பாகங்களாக கதை சொல்லப்படுகிறது.

ரோகினி, பிரபு மற்றும் பலரும் நடித்துள்ளனர். வொய் திஸ் கொலைவெறி பாடலும் இந்தப் படத்தில்தான். அது மட்டும்தான் மசாலா ஐட்டம். மற்றபடி இது ஒரு முழுமையான திரைப்படம் .

குறைகள் :-

இவ்வளவு பெரிய வியாதியில் அவதிப்படும் தனது மகன் குறித்து பெற்றோர்களுக்கு கூட தெரியவில்லை என்பது.
தனுஷ் ஸ்ருதிக்கு பாரில் வைத்து தாலிகட்டுவதாக காட்டி இருக்க வேண்டாம். ஆரம்பத்துலையே இந்த முற்போக்கு ஆகாது.
கல்யாணம் செய்துகொள்ளப்போகிறேன் என்றதும் நாயகனின் அப்பா ( பிரபு) உடனே சரி எனச் சொல்வதும். ( நமக்கெல்லாம் இப்படி ஒரு அப்பா இருந்தா?)
மிக அழகான ஒரு திரைப்படம் பார்த்த ஒரு திருப்தி. குறிப்பாய் உச்சத்தில் இருந்தா பாலுமகேந்திரா எடுத்த படம் பார்த்த உணர்வு.

எதிர்மறை விமர்சனங்கள் மூலம் குழியில் தள்ளப்பட்ட ஒரு நல்ல திரைப்படம்.
- ஜெயக்குமார்
http://jeyakumar-srinivasan.blogspot.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக