புதன், 27 ஜூன், 2012

அண்ணா மேம்பாலத்திலிருந்து பஸ் தலைகுப்புற கவிழ்ந்தது-38 பேர் படுகாயம்!

 Metro Bus Slipped From Anna Flyover
சென்னை, அண்ணா மேம்பாலத்திலிருந்து மாநகர போக்குவரத்துக்கழக பஸ் இன்று பிற்பகல் தலை குப்புறக் கவிழ்ந்து விழுந்தது. இதில் 38 பயணிகள் காயமடைந்தனர். இவர்களில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அண்ணா சாலையில் ஜெமினி அருகே உள்ளது அண்ணா மேம்பாலம். சென்னையின் மிக முக்கிய அடையாளங்களில் இந்த மேம்பாலமும் ஒன்று. எப்போதும் போக்குவரத்து அதிகமாக உள்ள பகுதி இது.
இன்று பிற்பகல் இந்த மேம்பாலத்தின் வழியே 17 எம் என்ற பேருந்து பிராட்வேயிலிருந்து வடபழனிக்கு சென்று கொண்டிருந்தது. பாலத்தின் மீதுஅது சென்று கொண்டிருந்தபோது வடபழனி செல்ல இடதுபுறமாக பஸ்சைத் திருப்பியுள்ளார் டிரைவர். அப்போது திடீரென கட்டுப்பாடு இழந்து தாறுமாறாக ஓடி தடுப்புச் சுவரை இடித்துக் கொண்டு கீழே விழுந்தது.
பஸ் மேலிருந்து தலைகுப்புற விழுந்ததால் பஸ்சில் இரு்ந்தவர்கள் அலறித் துடித்தனர். பஸ் மேலிருந்து விழுவதைப் பார்த்த கீழே சென்று கொண்டிருந்தவர்கள் ஸ்தம்பித்துப் போய் நின்றனர்.

இதனால் அந்தப் பகுதியே பரபரப்பாகியது. விபத்தை நேரில் திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புத் துறையினர் விரைந்துவந்து பேருந்தையும் பயணிகளையும் மீட்கும் முயற்சியில் இறங்கினர்.
இதில் 38 பயணிகள் காயமடைந்தனர். இவர்களில் பலருக்கும் காயம் பலமாக இருந்தது. காயமடைந்த அனைவரும் அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 7 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
போக்குவரத்து ஸ்தம்பிப்பு
இந்த விபத்து காரணமாக அண்ணா சாலையே போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்துப் போய் விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக