படத்துக்கு 'ஏ'- அதிருப்தியில் தயாரிப்பாளர்- ஜுன் 21-ல் ரிலீஸ் ஆகுமா?
படம் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை 21-ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டாலும், இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.
அஜீத், பார்வதி ஓமணக் குட்டன், புருனா அப்துல்லா நடித்துள்ள படம் பில்லா 2. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சக்ரி டோலெட்டி இயக்கியுள்ளார்.
இன் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தை, தமிழகத்தில் வெளியிடுகிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.
இந்தப் படம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டாலும், படத்தை எப்போது வெளியிடுவார்கள் என்பதில் உறுதியான அறிவிப்பு இன்னும் வந்தபாடில்லை.
படம் சென்சாரான பிறகுதான் 'ரிலீஸ் தேதி அறிவிப்பு' என தயாரிப்பாளர் சொன்னாலும், பில்லா 2-வெளியாகும் அரங்குகளில் ஜூன் 21-ம் தேதிக்கு முன்பதிவுக்கான ஆயத்தங்கள் ஆரம்பமாகிவிட்டன.
இந்த நிலையில் பில்லா 2 படம் நேற்று சென்சாருக்கு போட்டுக் காட்டப்பட்டது. படத்தில் வன்முறை, ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் இருப்பதால், ஏராளமான இடங்களில் கட் கொடுத்துவிட்டார்களாம் சென்சார் உறுப்பினர்கள். மேலும் படத்தை வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்ற வகையில் ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.
இதனால் தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். அவர் கூறுகையில், "இந்தப் படத்துக்கு தாறு மாறாக கட் கொடுத்துள்ளனர் தணிக்கைக் குழுவினர். இன்றுதான் சான்றிதழ் கிடைக்கும். அதன் பிறகுதான் மேற்கொண்டு என்ன செய்வது என்று அறிவிக்கவிருக்கிறோம். படத்தில் ஏகப்பட்ட காட்சிகள் வெட்டப்பட்டதில் எனக்கு உடன்பாடில்லை," என்றார்.
இதனால் படம் எப்போது வெளியாகும் என்ற உறுதியான தகவல் தெரியாமல் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் குழப்பத்தில் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக