வியாழன், 21 ஜூன், 2012

மோடியால் தான் 2004 தேர்தலில் பாஜக தோற்றது: நிதிஷ்குமார்

பாட்னா: குஜராத் கலவரத்தையடுத்து நரேந்திர மோடியை முதல்வர் பதவியில் இருந்து நீக்காததால் தான் 2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி தோல்வியடைந்தது. இப்போது நரேந்திர மோடியையே பிரதமர் பதவிக்கான வேட்பாளராக பாஜக அறிவித்தால், பிகாரில் எங்கள் ஆட்சி கவிழ்ந்தாலும் பரவாயில்லை என்று பாஜக கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார்-சரத் யாதவ் கூட்டுத் தலைமையில் உள்ள ஐக்கிய ஜனதா தளம்.
பிகாரில் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதே பிரச்சாரத்துக்கு நரேந்திர மோடி வரக் கூடாது என்று தடை போட்டார் நிதிஷ். அதை பாஜகவும் வேறு வழியின்றி ஏற்றது.

இந் நிலையில் இப்போது ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் விவகாரத்தில் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் விவகாரத்தை இழுத்துவிட்டு பாஜகவை கலங்கடித்து வருகிறார் பிகார் முதல்வர் நிதிஷ் குமார்.
நிருபர்களிடம் பேசிய அவர், குஜராத் கலவரத்தை நரேந்திர மோடி கையாண்ட விதத்தை பிரதமராக இருந்த வாஜ்பாய் ஏற்கவில்லை. மோடியை தொடர்பு கொண்டு மாநிலத்தில் ராஜ தர்மத்தை நிலை நிறுத்துமாறு உத்தரவிட்டார். மேலும் அவர் பதவி நீக்கவும் விரும்பினார். ஆனால், மோடியை பதவி நீக்காததால் தான் 2004ம் ஆண்டு தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. இதை அந்தக் கட்சி மறக்கக் கூடாது என்றார்.
நிதிஷ்குமாரின் வலதுகரமான ஐக்கிய ஜனதா தளத் தலைவர் திவாரி கூறுகையில், பிகாரில் பாஜக கூட்டணியுடன் தான் ஆட்சியில் உள்ளோம். ஆனால் மதசார்பின்மையை காப்பதற்காக ஆட்சியை இழக்க வேண்டிய நிலை வந்தால் அதற்கும் நாங்கள் தயார் என்றார்.
அதே போல ஐக்கிய ஜனதா தள பொதுச் செயலாளர் நீரஜ் குமார் கூறுகையில், எந்த நாளில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவிக்கிறதோ அந்த நாள் தான் நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் கடைசி நாளாக இருக்கும் என்றார்.
பிகார் ஐக்கிய ஜனதா தள அமைச்சரான பீம் சிங் கூறுகையில், நரேந்திர மோடியை நிதிஷ் குமார் எதிர்த்தவுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் களத்தில் குதித்து நரேந்திர மோடியை ஆதரிக்கிறார், நிதிஷ் குமாரை திட்டுகிறார். இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றும் ஆர்எஸ்எஸ்சின் கனவு என்றுமே பலிக்கப் போவதில்லை. பாஜகவில் மதவாத கொள்கைகள் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் தான் 20 கட்சிகள் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி சுருங்கி இப்போது வெறும் 4 கட்சிகளுடன் உள்ளது என்றார்.
இந் நிலையில் பிகார் பாஜக அமைச்சரான கிரிராஜ் சிங் கூறுகையில், என்னை அமைச்சராக்கியது பாஜக தான். நிதிஷ்குமார் அல்ல. முடிந்தால் அவர் என்னை பதவியிலிருந்து நீக்கிப் பார்க்கட்டும். ஜனாதிபதி தேர்தல் குறித்து எல்லோரும் விவாதிக்கும்போது எங்கள் முதல்வர் மட்டும் பிரதமர் வேட்பாளர் குறித்து பேசுவது ஏன்?.. இது அரசியல் சந்தர்ப்பவாதம் இல்லையா? என்றார்.
இவ்வாறாக இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்க ஆரம்பித்துள்ளதைப் பார்த்தால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் நிதிஷ்குமார் பாஜகவை கழற்றிவிடப் போவது மட்டும் நிச்சயம் என்று தெரிகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக