வியாழன், 21 ஜூன், 2012

உலகின் தொடரும் மர்மங்கள் -1 பிரி ரெயிஸ் வரை படம்


 - (Piri Reis Map)
1929 ஆம் ஆண்டில் சில வரலாற்று ஆய்வாளர்கள் துருக்கி அரச மாளிகையில் மான் தோலில் வரையப்பட்ட ஒரு வரை படத்தைக் கண்டெடுத்தனர்.அந்த வரை படத்தை ஆய்வு செய்ததில் அது ஒரு உண்மையான ஆவணம் என்பதும் துருக்கிய ஆட்டமோன் மன்னரது கடல் படையில் உயரதிகாரியாக (அட்மிரலாக) இருந்த பிரி ரெயிஸ் என்பவரால் 1513 ஆம் வருடம் வரையப்பட்ட வரை படத்தின் பகுதி என்பதும் தெரிந்தது.


பிரி ரெயிஸ் வரைபடக்கலையில் (கார்டோக்ராஃபி) பேரார்வம் கொண்டிருந்தார். தனது ஆர்வத்தூண்டலினாலும், தனது கடல் அனுபத்தில் கிடைத்த தகவல்கள், வரைபடத் துண்டுகள், நூலகத்தில் கிடைத்த வரைபடங்கள் குறிப்புகள் இவற்றைக் கொண்டு அவர் ஒரு வரை படத்தை தொகுத்தார், துருக்கி படையில் அவருடைய உயரிய அந்தஸ்துள்ள பதவியினால் புகழ் பெற்ற கான்ஸ்டான்டிநோபிலில் இருந்த அரச வம்சத்து நூலகத்திலிருந்த ஆவணங்களை அணுகிப் பார்வையிட வாய்ப்பு அவருக்கு இருந்ததும் இந்த வரை படத்தை சித்தரிப்பதில் அவருக்கு மிக்க உறுதுணையாகி விட்டது.

தென் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையையும், ஆப்பிரிக்காவின் வடக்குக் கடற்கரையையும் இன்னும் சில பகுதிகளையும் அந்த வரைபடத்தில் அவர் சித்தரித்திருந்தார். இத்தனைக்கும் அவர் தென் அமெரிக்கக் கடற்கரைக்குச் சென்றதோ அதைக் கண்ணால் கண்டதோ இல்லை. அவருடைய வரை படத்தில் காணப்படும் பல்வேறு குறிப்புக்களிலேயே பிரி ரெயிஸ் தன்னுடைய வரைபடம் பல்வேறு மூல வரைபடங்களிலிருந்து தொகுத்தெழுதப்பட்ட ஒன்றே என்றும் அவற்றில் சில மூல வரைபடங்கள் கி.மு 400 முதலாக அல்லது அதற்கும் முன்னால் எழுதப்பட்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு மூல வரைபடங்கள், குறிப்புகள் ,செய்திகள் இவற்றின் மூலமே தொகுத்தளிக்கப்பட்ட வரைபடத்தில், கண்ணால் காணாத இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ள துல்லியம் ஆச்சரியப்பட வைக்கும் ஒன்றாக இருக்கிறது.

கண்டெடுக்கப்பட்ட பிறகு மிகவும் விவாதத்துக்குள்ளான பிரி ரெயிஸின் வரைபடம் ஆப்பிரிக்காவின் மேற்குக்கடற்கரையையும், தென் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையையும் மற்றும் அண்டார்டிகாவின் வடக்குக் கடற்கரையையும் ??!! சித்தரிப்பதாக சில வரைபட வல்லுனர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் கருதுகிறார்கள். இதில் ஆச்சரியம் என்ன என்கிறீர்களா.. இந்த வரைபட காலத்தில் அண்டார்டிகா என்ற கண்டம் கண்டு பிடிக்கப் படவே இல்லை. வரைபட காலத்துக்கு சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே அண்டார்டிகா என்ற கண்டம் கண்டறியப்பட்டது. அதோடல்லாமல் அண்டார்டிகாவின் கடற்கரைப் பகுதியானது கிட்டத்தட்ட 1000 அடி கனமான பனியின் கீழ் மறைந்திருக்கிறது. அந்தப் பகுதியை யாராவது பார்த்திருந்து வரைபடத்தில் குறிக்க வேண்டுமானால், அது அந்தப் பகுதியில் பனியில்லாத காலமான கடைசி ice age காலத்திற்கு முற்பட்ட காலமாக இருந்திருக்க வேண்டும். அதாவது கிட்டத்தட்ட 6000 வருடங்களுக்கு முன்னால்.

நமக்குத் தெரிந்த வரலாற்றில் மனித நாகரீகம் தொடங்கியதே சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் தான். அப்படியானால் அதற்கும் முன்னால் நாகரீக வளர்ச்சியடைந்த, வரைபடங்களைத் துல்லியமாக கணிக்கக்கூடிய ஒரு சமூகம் இருந்ததா என்ற கேள்வி எழுந்து அதிர வைக்கிறது. அப்படி இருந்திருந்தால் எந்தச் சுவடும் இல்லாமல் எப்படி அழிந்திருக்கக் கூடும் என்ற கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை. அதோடல்லாமல் இந்த மூல வரைபடங்களை வரைந்தவர்களுக்கு உலகம் உருண்டை வடிவமானது என்ற அறிவும் இருந்திருக்கிறது. வரைபட இயலில் சிறந்த ஆய்வாளரான அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்லிங்டன் மலோரி என்பவர் கோள கோணவியல் திரிகோண கணிதம் (spherical Trigonometry) நன்கு அறிந்தவர்களால் இந்த வரைபடங்கள் வரையப்பட்டிருக்கிறதென்றும், ஆகாய விமானத்தில் பறந்து ஏரியல் சர்வேயில் பார்த்திருந்தால் மட்டுமே இவ்வளவு துல்லியமாக வரைய இயலும் என்றும் கூறியிருப்பது இன்னும் திகைப்பில் ஆழ்த்துகிறது.

மறுபக்கத்தில் இது அந்தக் காலத்தில் கிடைத்த மூல வரைபடங்கள், கடலோடுபவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் கொண்டு பிரி ரெயிஸினால் தொகுக்கப்பட்ட சாதாரண வரைபடமே அன்றி அசாதாரணமாக ஒன்றும் இல்லை என்று வாதிடுவோரும் உண்டு. பிரி ரெயிஸின் வரை படம் மிகத் துல்லியமானதல்ல.. தென் அமெரிக்காவின் கடற்கரையை (துல்லியமின்மை காரணமாக) வளைத்துக் காட்டப்பட்டிருக்கிறபடியால் அது அண்டார்டிகா கண்டத்தின் வட பகுதியைக் காட்டுவது போல் தோன்றுகிறதேயன்றி, அது அண்டார்டிகா கண்டத்தைக் காட்டவே இல்லை. மேலும் இது ஒரு ஆச்சரியகரமான வரைபடம் என்று வாதிடுபவர்கள் கேப்குட் என்ற அமெரிக்க அறிவியலாளரின் வாதத்தை மட்டுமே எடுத்து வைக்கிறார்களே அன்றி ஆய்வுகள் மேற்கொண்டு நிரூபணம் செய்யப்படவில்லை என்றும் எதிர் வாதிடுகின்றனர்.



எது எப்படியோ, சாதாரணமாக தொகுக்கப்பட்ட வரைபடமா அல்லது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த மனித இனத்துக்கு மிகவும் மேம்பட்ட அறிவியல் ஞானம் இருந்ததா என்ற கேள்விகளுக்கு விடையில்லாமல் இன்றும் அவிழ்க்க முடியாத ஒரு மர்ம முடிச்சாகவே நீடிக்கிறது பிரி ரெயிசின் வரைபடம்.

அடுத்த மண்டே அன்று மர்மங்கள் தொடரும்...

-ச. சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக