Viruvirupu,
முதல்வர் ஜெயலலிதாவின் ‘மீண்ட’ தோழி சசிகலாவின் கணவர் நடராஜன், தாம்
இறக்கப்பட்ட குளத்தில் மீன் படிக்காமல் விடுவதில்லை என்று முடிவே செய்து
விட்டார் போலிருக்கிறது. அவசர அவசரமாக காவல்துறைக்கு எதிராக வழக்கு ஒன்றை
தாக்கல் செய்துள்ளார்.
“என்னை போலியான என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக் கொல்ல போலீஸார் திட்டமிட்டுள்ளனர்” என்பதே அதிரவைக்கும் அவரது குற்றச்சாட்டு.தமிழக காவல்துறைக்கு எதிராக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மத்திய மண்டல ஐ.ஜி. அலெக்சாண்டர் மோன், சரக டிஐஜி அமல்ராஜ் மற்றும் 13 காவல்துறை அதிகாரிகள் மீது அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தஞ்சைப் பகுதியில் திடீர் திடீரென சிலர் கொடுத்த புகார்களால் நில அபகரிப்பு, மற்றும் மிரட்டல் வழக்குகளில் கைதான நடராஜன், தற்போது ஜாமீனில் விடப்பட்டு வெளியே உள்ளார். ஒவ்வொரு வழக்காக அவருக்கு ஜாமீன் கிடைத்த போதிலும் தஞ்சை போலீஸ், அட்சய பாத்திரம்போல வேறு சில புகார்களையும் ரெடி செய்து வைத்திருந்தது.
“வேண்டாம், விட்டுவிடுங்கள்” என்று வரவேண்டிய இடத்தில் இருந்து தகவல் வந்ததால், ஆளை வெளியே விட்டார்கள். அவரது மற்றைய உறவினர்களான திவாகரன், ராவணன்போல, “கையது மெய்யது பொத்திப் பதுங்குவார்” என்று நினைத்திருந்த போது, திருச்சியில் அரசுக்கு எதிராக பிரஸ்-மீட் வைத்துவிட்டுச் சென்றார் நடராஜன்.
அப்போதே விவகாரம் சூடு பிடித்து விட்டது.
அதன்பின் என்ன நடந்ததோ, யார் மிரட்டினார்களோ, தெரியவில்லை. இன்று காலை எழும்பூர் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு வந்து நீதிபதி நசீர் முகம்மதுவிடம் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
“என்னை போலி என்கவுண்ட்டர் மூலம் கொலை செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே நான் விசாரணைக் கைதியாக இருந்தபோது, திருச்சி சிறைக்கு என்னை வேனில் கொண்டு செல்லும் வழியில் ஆள்நடமாட்டம் இல்லாத காட்டில் 3 மணி நேரம் நிறுத்தி வைத்து என்கவுண்டர் நடத்த திட்டமிட்டனர். ஏனோ, அப்போது என்கவுண்டர் செய்யவில்லை.
மீண்டும் அவர்கள் என்னை என்கவுண்டர் செய்யலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே நான் மனுவில் குறிப்பிட்டு குற்றம் சாட்டியுள்ள போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று தமது மனுவில் கோரியுள்ளார் நடராஜன்.
நாளை மறுதினம் (புதன்கிழமை), நடராஜனின் மனு விசாரணைக்கு வரவுள்ளது.
நடப்பதைப் பார்த்தால், இவரது விஷயத்தில் என்கவுண்டர் திட்டமிடப்பட்டதோ, இல்லையோ, நடராஜன் கவுண்டர்-அட்டாக் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அநேகமாக, தமக்கு முக்கிய மிரட்டல் ஒன்று வர இருப்பதை ஊகித்துக் கொண்டு, அதற்கு முன்னரே அவசர அவசரமாக இந்த மனுவை தாக்கல் செய்திருப்பார் என ஊகிக்கலாம். அது மிரட்டலாகவும் இருக்கலாம். அதைவிட சற்று ‘பெரிய விஷயமாகவும்’ இருக்கலாம். எப்படியோ, நடராஜனுக்கு தகவல் முன்கூட்டியே கிடைத்து விட்டது!
அசையாத திரைக்குப் பின்னால், நிச்சயம் புயல் அடிக்கிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக