வெள்ளி, 25 மே, 2012

New Law For ரீ-மேக் ரீ-மிக்ஸ் re release

நடிகர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் ஆகியோருக்கு 2012ஆம் ஆண்டு நல்ல காலம் பிறந்திருக்கிறது. படைப்புரிமை சட்டத் திருத்தம்-2012 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முழுமனதாக நிறைவேறியுள்ளது. 
 திரைப்படத் துறையினரின் நலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு நிறைவேற்றப்பட்டிருக்கும் சட்டத் திருத்தம் இது. இதில் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரே விஷயம், இந்த நடிகர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் தங்கள் படைப்புக்கு உரிமையாளர்கள் ஆகிவிடுகிறார்கள் என்பதுதான்.
 திரைத்துறையில் ஒரு நடிகர் நடிக்கவும், பாடலாசிரியர் பாட்டு எழுதித் தரவும், இசையமைப்பாளர் இசை அமைத்துக் கொடுக்கவும் அவர்கள் கேட்கும் தொகை தயாரிப்பாளரால் அளிக்கப்பட்டுவிடுவதால், அது தொடர்பாக எந்த உரிமையும் படைப்பாளிகள் அல்லது நடிகர்களுக்கு இல்லை என்பதுதான் படைப்புரிமைச் சட்டம் 1957-ன்படி நடைமுறையாக இருந்தது. இப்போதைய சட்டம் இந்த நடைமுறையில் சிறு திருத்தம் கொண்டுவந்திருக்கிறது. திரைப்படத் தயாரிப்பாளர் அந்த திரைப்படத்துக்கு மட்டுமே உரிமை படைத்தவர். அதே திரைப்படம், வானொலியில், தனியார் அல்லது அரசு தொலைக்காட்சியில், இணையதளத்தில், குறுந்தகடுகள் மூலமாக கேபிள் டி.வி.க்களில், சிறு பகுதியாக அல்லது முழுமையாக அல்லது பாடல் மட்டும் என எந்த வகையில் வெளியானாலும், அதற்கான உரிமத்தொகை (ராயல்டி) பெறுவதற்கு இந்தக் காட்சி, பாடல் அல்லது இசைக்குச் சொந்தக்காரர்கள் உரிமை பெற்றவர் ஆகிவிடுகின்றனர்.  இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், ஒரு கலைஞன் அல்லது கவிஞன், இசைஞன் காலத்தால் கைவிடப்பட்டாலும், அவன் படைப்பு உயிர்ப்புடன் இருக்கும்வரை அக் கலைஞனுக்கு உரிமத் தொகை மிகச்சிறிய அளவாக இருந்தாலும் கிடைத்துக்கொண்டே இருக்கும். அந்தச் சிறந்த கலைஞன் வறுமையில் சாகமாட்டான். திரைப்படத் துறையில் பணியாற்றியவர்களால் எழுத்துலக படைப்பாளிகள் போல, உரிமத்தொகை பெற முடியாமல் இருந்துவந்த நிலைமை இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது.  திரைப்படங்களைப் பொருத்தவரை, அதன் தயாரிப்பாளர் மட்டுமே உரிமை படைத்தவர் என்பதால், அந்தத் திரைப்படம் எத்தனை முறை, எத்தனை தியேட்டர்களில் ஓடினாலும் அவருக்குத்தான் லாபம். அந்தப் படத்தை சில ஆண்டுகள் கழித்து ரீ-பிரிண்ட் போட்டு ஓட்டினாலும் அவருக்கே அந்த லாபம் முழுவதும்.  உதாரணமாக, "கர்ணன்' படத்தை டிஜிட்டலாக மாற்றினாலும் அதன் உரிமை அதன் தயாரிப்பாளருக்கே சொந்தம். அல்லது தயாரிப்பாளரிடமிருந்து உலக விநியோக உரிமையை முழுவதுமாகப் பெற்ற விநியோகஸ்தருக்குச் சொந்தம். இதுதான் இன்று வரை உள்ள நிலைமை. இனி அப்படியல்ல. ஒரு படத்தை டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றினாலும், கருப்பு - வெள்ளைப் படத்தை வண்ணமாக மாற்றினாலும், இணைய தளத்தில் வெளியிட்டாலும், அதாவது, திரைக்கு வெளியே எந்த வடிவம் கொண்டாலும், மாற்றம் பெற்றாலும், அதில் தொடர்புடைய கலைஞர்கள் உரிமத்தொகை பெறும் தகுதியுடைவர்கள் ஆகிறார்கள்.  வானொலி, தூர்தர்ஷனில் ஒலி, ஒளிபரப்பாகும் திரைப்பாடல்கள், ஒலிச் சித்திரம், திரைப்படம், நகைச்சுவைத் துணுக்குகள் குறித்து அகில இந்திய வானொலி நிலையம், தூர்தர்ஷன் ஆகியன கணக்கு வைத்திருக்கின்றன. இவை பயன்படுத்தப்பட்ட மணித்துளிகளுக்கேற்ப, அதன் தயாரிப்பாளர்களுக்குக் காப்பிரைட் போர்டு நிர்ணயிக்கும் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அரசின் இந்த இரு நிறுவனங்களும் பாராட்டுக்குரியவை.  தனியார் தொலைக்காட்சிகள் ஆதிக்கம் பெருகிய பின்னர், படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் தனியார் தொலைக்காட்சிகளே வாங்கி, அப்படத்தின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் - பாடல், நகைச்சுவைக் காட்சி அல்லது முழு திரைப்படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும், தங்கள் துணை சேனல்களிலும் ஒளிபரப்பும் புதிய வணிக முறை தோன்றியது.  ஒரு படத்தின் தயாரிப்புச் செலவு ரூ.80 கோடி என்றாலும், அந்தப் படத்தை ரூ.100 கோடிக்கு வாங்கி, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது அவர்களுக்கு விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் பல கோடி ரூபாய். இரண்டு ஒளிபரப்பில் இந்த ரூ.100 கோடியை மீட்டுவிட முடியும். ஆகவே, ஒரு படத்தின் பல காட்சிகளை, பாடலை பலமுறை ஒளிபரப்பி, விளம்பரங்கள் மூலம் பல மடங்கு லாபம் சம்பாதிக்கத் தனியார் தொலைக்காட்சிகளால் முடிந்தது.  தற்போது இந்தச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்திருப்பதன் மூலம், அத்தகைய தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் தாங்களே அந்தப் படத்துக்கு உரிமை பெற்றவர்களாக இருந்தாலும்கூட, அதைத் திரையரங்கு அல்லாத வேறு வடிவத்தில் பயன்படுத்துவதால், நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் ஆகியோருக்கு உரிமத் தொகை தந்தே ஆக வேண்டும்.  இவ்வாறு திரை அல்லாத வேறு வடிவத்தில் பயன்படுத்தப்படும்போது, அதன் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு ஏற்ப, அதில் தொடர்புடைய கலைஞர்களுக்கும் தரப்பட வேண்டிய உரிமத் தொகையை காப்பிரைட் போர்டு நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நிர்ணயம் செய்யும்போது, தொலைக்காட்சிகளைப் பொருத்தவரை, அக்காட்சிகள் இடம்பெறும் ஸ்லாட்-ன் மொத்த விளம்பர வருவாயையும் கணக்கில்கொண்டு அதற்கேற்ப உரிமத்தொகையை (ராயல்டி) நிர்ணயிக்க வகை செய்தால், கலைஞர்களுக்கு ஓரளவு நியாயமான உரிமத்தொகை கிடைக்கும்.  படங்களை ரீ-மேக் செய்யும்போதும், பாடல்களை ரீ-மிக்ஸ் செய்யும்போதும்கூட தொடர்புடைய கலைஞர்கள், பாடலாசிரியர்கள், நடிகர்களின் அனுமதி பெறவும் உரிமத்தொகை தரவும் வேண்டும் என்கின்றது சட்டம். திரைத்துறையினரை மனதில் கொண்டே இந்தச் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு திரைப்படத்திற்குப் பெயர் வைப்பதிலிருந்து புதிய கதை கருவைத் தேடிப்பிடித்துப் படமாக்குவது வரை, கற்பனை வறட்சி ஏற்பட்டிருக்கிறது. புதிய கதையைப் படமாக்கும் துணிவு இல்லாத போக்கு தலைதூக்கி இருக்கிறது. இந்த நிலையில் இப்படி ஒரு சட்டம் வந்திருப்பது சுயசிந்தனையாளர்களின் திறமைக்குத் தரப்படும் மரியாதை. இருப்பினும் திரைத்துறையினரின் ஒற்றுமை மட்டுமே இந்தச் சட்டத்தை வலுவாக்கும் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக