வெள்ளி, 4 மே, 2012

MIG 21 பறக்கும் சவப்பெட்டி'!!40 ஆண்டுகளில் 171 பைலட்டுகளை உயிர்ப்பலி


 India Lost Half Its Mig Jets 40 Years 153411

டெல்லி: கடந்த 1980ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 872 மிக் போர் விமானங்களை இந்தியா வாங்கியுள்ளது. இதில் விபத்துக்களில் மட்டும் 482 விமானங்கள் நொறுங்கிப் போய் விட்டன. இந்த விபத்துக்களில் 171 விமானிகள் உயிரிழந்துள்ளனர். 39 பொதுமக்களும் இறந்துள்ளனர்.
இந்தத் தகவலை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.
மிக் போர் விமானங்கள் நொறுங்கியதை விட 171 விமானிகள் உயிரிழந்ததுதான் உண்மையிலேயே மிகப் பெரிய இழப்பாகும்.
காரணம், ஒவ்வொரு விமானியையும் உருவாக்க பல லட்சம் பணத்தை நமது அரசு செலவிடுகிறது. இப்படி பெரும் பொருட் செலவில் மிகத் திறமை வாய்ந்த விமானிகளாக உருவாகும் வீரர்கள், உயிரிழக்கும்போது நாட்டுக்குத்தான் மிகப் பெரிய நஷ்டமாக அது அமைகிறது. இந்திய விமானிகள் மிகத் திறமையானவர்கள் என்பதால் அந்தத் திறமையும் கூட இழக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மிக் போர் விமானங்கள்தான் இந்திய விமானப்படையில் உள்ள மிகப் பழமையான போர் வி்மானங்களாகும். பறக்கும் சவப்பெட்டி என்று கூட இதற்குச் செல்லப் பெயர் உண்டு. அந்த அளவுக்கு அதிக அளவில் விபத்துக்குள்ளாகும் போர் விமானம் இது. மனிதத் தவறுகள், தொழில்நுட்பக் கோளாறுகள் என பல காரணங்களால் விபத்துக்களில் சிக்குகின்றன மிக் விமானங்கள்.

கடந்த 2003ம் ஆண்டு இந்த போர் விமானத்துக்கு எதிராக, விபத்தில் சிக்கி உயிரிழந்த ஒரு விமானியின் மனைவி எதிர்ப்புக் குரல் கொடுத்தார். பலரது உயிர்களைப் பழிவாங்கும் இந்த போர்விமானங்களை நமது விமானப்படையிலிருந்து ஒழிக்க வேண்டும் என்று அவர் ஆவேசமாக கூறினார். பின்னர் இந்த எதிர்ப்புக் குரலை வைத்துத்தான் ஆமிர்கான் 2006ம் ஆண்டு ரங் தே பசந்தி படத்தை எடுத்தார் என்பது நினைவிருக்கலாம்.

ஆனால் மிக் விமானங்கள் நம்மில் 2 தலைமுறைக்கு முன்பிருந்தே இந்தியாவுடன் இணக்கமாக இருந்து வரும் ஒன்றாகும். 1966ம் ஆண்டுதான் முதல் முறையாக மிக் போர் விமானங்களை இந்தியா வாங்கியது. முதலில் வாங்கப்பட்டது மிக் 21 போர்விமானமாகும். அதைத் தொடர்ந்து அடுத்த 20 ஆண்டுகளில் மிக் 25, மிக் 27, மிக் 29 என வரிசையாக இந்திய விமானப்படையை நிரப்ப ஆரம்பித்தன மிக் வரிசை விமானங்கள்.

மிக் விமானங்களை கிட்டத்தட்ட 50 நாடுகளில் உள்ளன. ஆனால் இந்தியாவில்தான் விபத்துக்கள் அதிகம் நடைபெறுகிறது என்பது வியப்புக்குரிய ஒன்றாகும். இதுதான் மிக் ரக விமானங்களுக்கு எதிரான அதிருப்தியை ஏற்படுத்த முக்கியக் காரணமாகியுள்ளது.

2014ம் ஆண்டு முதல் மிக் விமானங்களை படிப்படியாக குறைக்கப் போகிறது இந்தியா. இந்த விமானங்களுக்குப் பதில் பிரான்சின் டஸ்ஸால்ட் நிறுவன தயாரிப்பான ரபேல் போர்விமானம் வரப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 123 டஸ்ஸால்ட் ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கவுள்ளது. இதற்காக வரலாறு காணாத வகையில், 12 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தமும் விரைவில் கையெழுத்திடப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக