திங்கள், 7 மே, 2012

சீதனம் அனுகூலமானதாம்! - Jaffna university எஸ்.சந்திரசேகரம்

newsசீதனம் அனுகூலமானதாம்

யாழ்.பல்கலைக்கழகத்தின் பொருளியல் விரிவுரையாளர் எஸ்.சந்திரசேகரம்

யாழ். மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு சீதனம் அனுகூலமானதே! - பொருளியல் விரிவுரையாளர்
தற்போதும் காணப்டும் சீதன நடை முறைகள் யாழ்ப்பாண மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு அனுகூலமானது என யாழ்.பல்கலைக்கழகத்தின் பொருளியல் விரிவுரையாளர் எஸ்.சந்திரசேகரம் தெரிவித்துள்ளார். 
நிலா முற்றம் எனும் சமூக அமைப்பின் ஏற்பட்டில் "தேசிய வாழ்வியல் முன்னேற்றத்திற்கு சீதனம் அனுகூலமானதா?" என்ற தலைப்பிலான பகிரங்க பொது மன்றம் ஒன்று நேற்று மாலை நீராவியடியில் இடம் பெற்றது. இங்கு கருத்துரை வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
விரிவுரையாளர் எஸ்.சந்திரசேகரம் மேலும் கூறியதாவது, பொருளாதார வளர்ச்சிக்கு முதலீடு அவசியம். இந்த முதலீடானது சேமிப்பினால் உருவாக்கப்படுகின்றது. சேமிப்பை தூண்டவென சீனா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் சிறந்த பொருளாதார கொள்கையினைக் கடைப்பிடிக்கின்றன. இதனால், இங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மொத்த முதலீட்டின் பங்கு 40 சதவீதம் என்ற அளவில் உயர்வாக உள்ளது.
இதுவே இலங்கையில், மொத்த முதலீடு 27 - 28 சதவீதம், மொத்த உள்நாட்டுச் சேமிப்பு 17 - 18 சதவீதம் என மிகக் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றன. இதற்கு, இலங்கையில் அரச மற்றும் பொருளாதார உறுதியானது தொடர்ந்து நிலை பெறாமல் இருப்பதோடு, உள்நாட்டு சேமிப்பினை தூண்டக் கூடியதாக பொருத்தமான பேரினப் பொருளாதாரக் கொள்கை முன் வைக்கப்படாமையே காரணம். 
எது எவ்வாறாயினும், வடகிழக்கில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகங்களிடையே பண்டு தொட்டு காணப்பட்டு வரும் சீதன நடைமுறைகள், வலிந்து நுகர்வை கட்டுப்படுத்தி சேமிப்பினை தூண்டுவதாக உள்ளன. இவ்வாறு சேர்க்கப்படும் சீதனச் சொத்துக்கள் பொருத்தமான காலத்தில் முதலீடு செய்கின்ற போது பிரதேச பொருளாதார வளர்ச்சி உந்தப்படுவதற்கு நல்ல அனுகூலமாவே உள்ளது. 
எனினும், யாழ்ப்பாண மக்கள் தமது சீதனங்கள் மூலம் திரட்டிய சேமிப்பினை உற்பத்தியில் முதலீடு செய்வற்கு இன்னும் காலம் கணியவில்லை! என தெரிவித்த பொருளியல் விரிவுரையாளர் எஸ். சந்திரசேகரம், அடிக்க அடிக்க எழுந்து நிற்கும் சமூகமாக இலங்கைத் தமிழர் காணப்படுவதற்கு அவர்களின் சீதனம் என்ற சேமிப்புக் கலாச்சார பழக்க வழக்கங்களும் ஒரு காரணம் என அவர் மேலும் தெரிவித்தார். 
இந்தக் கருத்தரங்கில் இருபாலாரும் பங்குபற்றியதுடன் 'சீதனம் அவசியம் தானா?' என்பது தொடர்பாக கடும் போட்டி வாதப் பிரதி வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக