புதன், 30 மே, 2012

France, US,UK சிரியா தூதர்களை வெளியேற உத்தரவு

பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் மூன்று ஐரோப்பிய நாடுகள், தத்தமது நாடுகளில் இருந்து சிரியா நாட்டு தூதர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளன.
கடந்த வார இறுதியில் ஹாமா பகுதிக்கு அருகே ஹவுலா என்ற இடத்தில், பெண்கள், குழந்தைகள் உட்பட 100 பேர் கொல்லப்பட்டதன் எதிரொலியாகவே தூதர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது சிரியா நாட்டு ராணுவம் என்பதில் ரகசியம் ஏதுமில்லை. ஆனால், அந்தத் தாக்குதலை தமது ராணுவம் நடத்தவில்லை என்று சூடமதெ்து சத்தியம் செய்யாத குறையாக தெரிவித்துள்ள சிரியா நாட்டு ஜனாதிபதி பஷார் அல்-அசாத், “அந்தத் தாக்குதல் தீவிரவாதிகளின் கைங்கார்யமாக இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம்” என்கிறார்.

இவர் ‘சந்தேகப்படுவதை’, யாரும் நம்ப தயாராக இல்லை.
பிரான்ஸ் ஜனாதிபதி François Hollande, சிரிய தூதரை தமது நாட்டில் இருந்து வெளியேற்றிய முதலாவது ஐரோப்பிய தலைவர் என்ற பெயரை பெறுகிறார். “இது நாம் தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவல்ல. நமது நட்பு நாடுகளின் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர் எடுக்கப்பட்ட முடிவு” என்று அவர் அறிவித்துள்ளார்.
இந்த முடிவை பிரான்ஸ் எடுக்குமுன், பிரிட்டன் மற்றும் ஜேர்மனியுடன் ஆலோசிக்கப்பட்டதாக ஐரோப்பிய மீடியா செய்திகள் தெரிவிக்கின்றன. சிரியா நாட்டு தூதரை வெளியேற்றுவது என்று பிரான்ஸ் தமது அறிவிப்பை வெளியிட்ட சிறிது நேரத்தில், ஜேர்மனியின் அறிவிப்பு வெளியாகியது. அதைத் தொடர்ந்து, ஸ்பெயின், இத்தாலி ஆகிய இரு நாடுகளும் தமது நாடுகளில் உள்ள சிரியா நாட்டு தூதர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டனர்.
ஏதோ காரணத்துக்காக பிரிட்டன் தாமதம் செய்தே தமது முடிவை அறிவித்தது. ஆஸ்திரேலியாவும், சிரியா நாட்டு தூதரை வெளியேறுமாறு உத்தரவிட்டது. அதன் பின்னரே அமெரிக்க அறிவிப்பு வெளியானது.
அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான கனடா, சிரிய தூதரை வெளியேற்றும் முடிவை ஏன் இன்னமும் எடுக்கவில்லை என்பது புரியவில்லை. அதேபோல, ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 அங்கத்துவ நாடுகளில், மீதி நாடுகளும் இந்த முடிவை ஏன் எடுக்கவில்லை என்ற விளக்கம் கொடுக்கப்படவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக