வியாழன், 31 மே, 2012

DMK:மனக் கசப்புடன் காங்கிரஸ் கூட்டணியில் நீடிப்போம்


 Karunanidhi Rolls Back Pull Out Threat
பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அண்ணா அறிவாலயத்தில் நிருபகளுக்கு அவர் அளித்த பேட்டி:
கேள்வி: மத்திய அரசை விட்டு வெளியேற தயங்க மாட்டோம் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்களே..
பதில்: நான் எங்கே அப்படிச் சொன்னேன். மத்திய அரசை விட்டு வெளியேறுவோம் என்று என்னுடைய பேச்சில் எங்கேயாவது இருக்கிறதா? என்னிடம் பேச்சு `ஆடியோ' செய்யப்பட்டதே இருக்கிறது.

கடந்த காலத்தில் பாஜகவோடு கூட்டணியிலே இருந்து கொண்டு, வி.பி. சிங் பிரதமராக இருந்த போதும் அந்தக் கூட்டணியிலே இருந்து கொண்டு, எந்த இடத்தில் இருந்தாலும் என்று சொல்லி எங்களுடைய கொள்கைகளில் ஒத்துவராத சூழ்நிலையில் நாங்கள் வெளியேற நேர்ந்தது என்று கடந்த காலத்தைத் தான் சொல்லியிருக்கிறேன். இப்போது வெளியேறுவோம் என்று சொல்லவில்லை. நீங்கள் நல்ல எதிர் காலத்தை உருவாக்க வேண்டிய பத்திரிகையாளர்கள். நீங்களாவது இவ்வாறு யூகம் செய்து கொண்டு கேட்பது விஷமத்தனமான காரியமாகும்.

கேள்வி: பெட்ரோல் விலை உயர்வைக் குறைக்காவிட்டால் நீங்கள் கூட்டணியிலிருந்து வெளியே வந்து விடுவீர்களா?

பதில்: நீங்கள் எல்லாம் விரும்புவதைப் போல அப்படி ஒரு நிபந்தனையை நாங்கள் வைக்க முடியாது. குறைக்காவிட்டால் கூட்டணியை விட்டு வெளியேறி விடுவோம் என்று கூற முடியாது.

ஏனென்றால், திடீரென்று கூட்டணியை விட்டு வெளியே வந்தால், மத்தியில் வரவிருக்கின்ற ஆட்சி பிற்போக்கான ஆட்சியாக மாறி விடலாம். மதவாத சார்புடைய ஆட்சியாக வரலாம். அதையும் நாங்கள் யோசிக்க வேண்டியிருக்கிறது. அதை மாத்திரம் காட்டி மக்களுக்குத் தேவையான காரியங்களில் மத்திய அரசும் இடையூறு செய்யக் கூடாது.

எனக்கு இப்போது வந்துள்ள தகவல்களின்படி, பிரதமர் இதைப் பற்றி யோசிப்பதாக நான் கேள்விப்படுகிறேன். மக்களுடைய கிளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று பிரதமர் யோசிப்பதாக தகவல் வந்துள்ளது. அந்த யோசனை நல்ல முறையிலே விளைவுகளைத் தருமேயானால் மகிழ்ச்சி அடைவேன்.

கேள்வி: பெட்ரோல் விலையைக் குறைக்கப் போவதாக மத்திய அரசிடமிருந்து உங்களுக்கு கூட்டணி என்ற முறையில் தகவல் வந்திருக்கிறதா?

பதில்: யூகமான தகவல் தான். வரும் என்று எதிர்பார்க்கிறேன். பெட்ரோலைப் பொறுத்தவரையில் மத்திய அரசிடமிருந்து நல்ல செய்தி வரக் கூடும் என்று நினைக்கிறேன்.

கேள்வி: பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டால் மத்திய அரசை விட்டு வெளியேறிவிடுவோம் என்று நீங்கள் பேசியதைப் பற்றி?

பதில்: மறுபடியும் அதையே கேட்கிறீர்கள். இப்போது இருக்கிற மத்திய அரசு இதற்கு முன்பு நான் சொன்ன அரசுகளைப் போல அல்ல. நாங்கள் இப்போது சொல்வதையெல்லாம் எண்ணிப் பார்க்கும். இந்தக் கிளர்ச்சிகளையெல்லாம் மதிக்கக் கூடிய அரசு தான் இப்போதுள்ள மத்திய அரசு. மாநில அரசு தான் மதிக்காத அரசு. அது மாத்திரமல்ல. விரைவிலே குடியரசு தலைவர் தேர்தல் வரவுள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் ஒரு நெருக்கடியை மத்திய அரசுக்குக் கொடுக்கக்கூடிய காரியங்களை நாங்கள் உருவாக்க மாட்டோம். தி.மு.கழகம் கசப்போடு, இந்தக் கூட்டணியிலே நீடிக்கும். அவ்வளவு தான்.

கேள்வி:
இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தானே?

பதில்: மத்திய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் அல்ல. பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் என்றார் கருணாநிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக