சனி, 5 மே, 2012

நித்தி வசியத்தில் ஆதீனம்! அம்பலமாகும் அந்தரங்கங்கள்'


மதுரை ஆதீனப் பரபரப்புகள் நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம் விசுவரூபம் எடுத்தபடியே இருக்கிறது.
ஞாயிற்றுக் கிழமை காலை மதுரை ஆதீன கர்த்தராக நித்தி முடிசூட்டப்பட்டதையும் அப்போது நிகழ்ந்த களேபரங்களையும் "நித்தி வசியத்தில் ஆதீனம்! அம்பலமாகும் அந்தரங்கங்கள்' என்ற தலைப்பில் கடந்த நக்கீரன் இதழில் அட்டைப்படக் கட்டுரையாகத் தந்திருந்தோம்..
இந்த நிலையில் தமிழகத்தில் இருக்கும் ஆதீன கர்த்தர்களும் மடாதிபதிகளும் மயிலாடுதுறை தருமை ஆதீன மடத்தில் கூடி "விதிமுறைகளை மீறி மதுரை ஆதீனகர்த்தராக நித்தி நியமிக்கப்பட்டிருக்கிறார். இதை 10 நாட்களுக்குள் மதுரை ஆதீனம் வாபஸ் பெறாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்'’ என ரெட் சிக்னல் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை மே 2-ந் தேதி காலை 10 மணிக்கு அவசர அவசரமாக ஆதீன மடத்துக்கு அழைத்தார் நித்தி. அவருடன் மதுரை ஆதீனமும் ஜெகஜோதி யாய்க் காட்சியளித்தார்.
அப்போது ஆதீனம் ‘""நான் ஆதீனத்தை நியமிக்க யாரையும் கேட்கவேண்டியதில் லை. சிவபெருமானின் உத்தரவுபடிதான் இவரை நியமித்தேன். என்னைக்கேட்க எந்த ஆதீனத்துக்கும் உரிமை யில்லை'' என மேலுலகத்தில் இருந்து கடிதம் வந்ததைப்போல் திருவாய் மலர்ந்தார். அடுத்து தங்களுக்கு எதிராகக் குரல்கொடுத்த ஆதீனங்களுக்கு இப்படி கவுன்டர் கொடுக்க ஆரம்பித்தார் நித்தி..
‘""தருமபுர ஆதீனமும் திருப்பனந்தாள் ஆதீனமும் என்னிடம் தன்னிலை விளக்கம் கேட்காமலே அவதூறு பரப்பி இருக்காங்க. என்னிடம் விளக்கம் கேட்டு, அது அவங்களுக்கு திருப்தி அளிக்கலைன்னா நானே ஆதீனப் பொறுப்பை ராஜினாமா செய்திருப்பேன். கொலைக் குற்றவாளிக்குக் கூட பேச வாய்ப்பு வழங்கப்படுது. அது எனக்கு வழங்கப்படாமலே என்னைக் கொலைக் குற்றவாளி ஆக்கிவிட்டார்கள். மதுரை ஆதீனமாக சைவ வேளாளர் குலத்தை சேர்ந்தவர்கள்தான் வரமுடியும். நானும் அதே வகுப்பை சேர்ந்தவன்தான்'' என்று சொல்லும் போதே மதுரை ஆதீனம் இடைமறித்து.....
""ம்ஹூம். ஏற்கனவே தொண்டை மண்டல முதலியார் வகுப்பைச் சேர்ந்த 7 பேர் இங்கு ஆதீனங்களாக இருந்திருக்கிறார்கள். நித்தியும் அதே முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர்தான்'' என்றார் வேகமாக.
இதன்பின் நித்தி ""என் மீதான தாக்குதல் இந்து மதத்தின் மீதான தாக்குதல். நான் இந்து மதத்திற்கும் சைவ சமயத்திற் கும் அரும்பணி ஆற்றிவருகிறேன். 10 ஆயிரம் மணி நேரம் ஆன்மிகம் பற்றி பேசி இருக்கிறேன். இதற்காக அடுத்த ஆண்டு கின்னஸில் இடம்பெறப்போகிறேன்'' என செம்மாந்த புன்னகையைக் கசிய விட்டுவிட்டு ""என்மீது புகார் சொன்ன ஆதீனங்கள் எல்லாம் அவங்க சொத்துக்களையும் மடத்தையும் விட்டுட்டு வரட்டும்; நானும் வர்றேன். நான் வெளியே வந்த ஒரே மாதத்தில் என்னால் ஒரு புதிய பீடத்தை உருவாக்க முடியும். மற்றவர்களால் முடியுமா? ஆதீனக் கூட்டத்தில் எனக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை 10 நாட்களில் வாபஸ் பெறவேண்டும். இல்லையேல் என் பக்தர்கள் தருமபுர ஆதீனத்தின் முன் உண்ணாவிரதம் இருப்பார்கள். ஆதீனமாக இருப்பவர்கள் தலைமுடி வைத்திருக்கக்கூடாது என்கிறார்கள். ஆதீனமே, உங்களுக்கு இந்த முடிதான் டிரேட் மார்க் என்று சொல்லிவிட்டார். அப்புறமென்ன''’ என்றார் மந்தகாசப் புன்னகையோடு.
இதற்கிடையே தருமபுர ஆதீனத்தின் சார்பில் அதன் மேலாளர் குருசாமி தேசிகர், மதுரை உயர்நீதி மன்றத்தில் 2-ந் தேதி ஒரு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதில் "நித்தியின் கஸ்டடியில் ஆதீனம் இருக்கிறார். அவர் சுயநினைவு இல்லாமல் இருக்கிறார் என்று தெரிகிறது. எனவே அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவேண்டும்' என்று குறிப் பிட்டிருந்தார்.
இதேபோல் இந்து மக்கள் கட்சி சோலைக் கண்ணனும் ‘"ஆதீனத்தை மயக்கத்திலும் போதையிலும் மூழ்கடித்து வைத்திருக்கிறார் நித்தி. அவரை நித்தி யின் பிடியில் இருந்து மீட்பதோடு ஜூன் 5-ந் தேதி ஆதீனத்தில் நடக்க இருக்கும் கனகாபிஷேக நிகழ்ச்சிக்கும் தடைவிதிக்கவேண்டும்' என்று ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த இரண்டு மனுவும் விசாரணைக்கு வந்தபோது, ஆதீனம் சார்பில் ஒரு மனுவை நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய ஆதீன ஆட்கள் வந்தனர். அவர்களது மனுவில் "என்னை யாரும் சிறைவைக்கவில்லை. என்னை போதையிலோ மயக்கத்திலோ யாரும் ஆழ்த்தவில்லை. நான் நித்தியின் கட்டுப்பாட்டிலும் இல்லை; என்னை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது. நான் கோர்ட்டிற்கு வரமாட்டேன். தேவைப்பட்டால் மடத்திற்கு வந்து நீதிபதிகள் என்னை சந்திக்கலாம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நீதியரசர்கள் சத்யநாராயணா, ஹரி பரந்தாமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்சோ, இரண்டு மனுக்களின் மீதான விசாரணையையும் 4-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த நிலையில் ஆதீனத்தில் இருந்து ஆதீனத்துக்கு சேவை செய்துவந்த கஸ்தூரியைத் துரத்தியடித்துவிட்டார்கள். வைஷ்ணவியை திடீரென்று காணவில்லை என்று பரபரப்பான டாக் அடிபட, மடத்தில் இருப் பவர்களோடு நெருங்கிய தொடர் பில் இருக்கும் இந்து மக்கள் கட்சி சோலைக்கண்ணனிடமே இது குறித்துக் கேட்டோம். அவரோ ""உண்மைதான். எனக்கும் தகவல் வந்தது. நித்திக்கு முடி சூட்டப்பட்ட ஞாயிற்றுக்கிழமை இரவே, நித்தி ஆட்கள் கஸ்தூரியை வலுக்கட்டாயமாக வாடகைக் காரில் ஏற்றி, அவங்க சொந்த ஊரான கச்சனத்துக்கு அனுப்பி யிருக்காங்க.
மறுநாள் இரவு ராஜபாளையத்தை சேர்ந்த ராமராஜன் என்பவருக்கு வைஷ்ணவி போன் பண்ணி, "மடத்தின் நிலைமை சரியில்லை. ஆதீனத்தை துப்பாக்கி முனையில் நித்தி கும்பல் இயக்கிக்கிட்டிருக்கு. ஆதீனத்தின் உயிருக்கு ஆபத்து'ன்னு சொன்ன தாவும் எனக்குத் தகவல். இதற் கிடையே நித்தி கும்பலுக்கு பயந்து வைஷ்ணவி தப்பி ஓடிவிட்டார். வைஷ்ணவி காணாமல் போன தகவல் சர்ச்சையைக் கிளப்பியதால், உயிருக்கு பயந்து தப்பி ஓடிய வைஷ்ணவியை, மறுபடியும் தேடிப்பிடித்து மடத்துக்கு கொண்டுவந்துட்டாங்களாம். மறுபடியும் நித்தி தரப்பின் கஸ்டடிக்கே வந்துவிட்ட வைஷ்ணவிக்கிட்ட பேசினாலும் பிரயோஜனம் இல்லை. அவர் நித்தி சொல்றதைத்தான் இனி கிளிப் பிள்ளைபோல் சொல்வார்'' என்றார் எரிச்சலாய்.
நாம் முதலில் அந்த ராஜபாளையம் ராமராஜனை தேடிப்பிடித்து ""வைஷ்ணவி உங்களுடன் பேசியது உண்மையா?'' என்றோம்.
ராமராஜனோ ""ஆதீனத்திடம் மிக நெருக்கமாக நட்பு பாராட்டியவர்களில் நானும் ஒருவன். அடிக்கடி மடத்துக்குப் போவேன். அந்த வகையில் வைஷ்ணவியையும் கஸ்தூரியையும் எனக்குத் தெரியும். திங்கட்கிழமை என்னிடம் பேசியது வைஷ்ணவி அல்ல. அவருடைய தங்கை கஸ்தூரி. அவர் என் லைனுக்கு வந்து, "நித்தி கும்பல் ஆதீனத்தைக் கத்தி முனையிலும் துப்பாக்கி முனையிலும் மிரட்டி வச்சிருக்காங்க. என் அக்கா வைஷ்ணவியை விட்டு ஆதீனம் பிரியவே மாட்டார். அப்படிப்பட்ட அக்காவை கொஞ்சநாள் பிடதி ஆசிரமத்தில் போய் இருன்னு ஆதீனம் சொல்றாராம். அதனால் அக்கா ரொம்ப பயந்துபோய் இருக்கா. வெளியில் போன்னு அங்க அதிகமா டார்ச்சர் கொடுத்ததால் அக்கா, வெளியில் போயிருக்காங்க'ன்னு சொன்னதோட, ஆதீனம் சுயநினைவை அடிக்கடி இழந்துடறார்ன்னும் அவரை நித்தி கும்பல் ஆட்டிப் படைக்குதுன்னும் ஆதீனத்தின் உயிருக்கும் தன் அக்கா வைஷ்ணவி உயிருக்கும் ஆபத்துன்னும் கஸ்தூரி பதட்டமாச் சொன்னாங்க. தானும் மடத்தை விட்டுட்டு சொந்த ஊருக்குப் போய்ட்டதாவும் சொன்னாங்க. எனக்கு இந்த நித்தியைப் பத்தி நல்லா தெரியும். அவரை ஆதீனம் மடத்துக்கு கூப்பிட்டதை ஜீரணிக்க முடியலை. 2-ந் தேதி இரவு 7.40-க்கு ஆதீனத்தைத் தொடர்புகொண்டேன். ஒரு அயோக்கியனை ஆதீனமா முடிசூட்டலாமா? மறு அறிவிப்பை வெளியிடுங்க. நடந்ததை ஒரு விபத்தா நினைப்போம்ன்னு சொன்னேன். அதுக்கு ஆதீனம், "நான் இப்ப எதையும் சொல்லும் நிலையில் இல்லை'ன்னு போனை கட்பண்ணிட்டார்'' என்றார் கவலையாய்.
அடுத்து வைஷ்ணவியை, 3-ந் தேதி அவரது 9095331739 என்ற எண்ணில் பிடித்தோம். தயக்கத்தோடு பேச ஆரம்பித்த அவர் ""சார் என்னை நித்தி ஆட்கள் கடத்தியதாவோ, இல்லை கொல்லப் போறாங்கன்னோ செய்தியைப் போட்றாதீங்க'' என்றார். "உங்களைப் பத்தியும் நீங்க மடத்துக்கு வந்தது பற்றியும் நித்தி பற்றியும் சொல்லுங்க' என்றோம்.
வைஷ்ணவியோ ""எனக்கு சொந்த ஊர் கச்சனம். அங்க இருக்கும் கோயிலுக்கு அடிக்கடி என் தங்கையோடு போவேன். அப்படி ஒருநாள் போகும் போது அங்கவந்த ஆதீனத்தைப் பார்த்தோம். அவருக்கு என்னை ரொம்ப பிடிச்சிப்போச்சு. அதனால் ஆதீனத்துக்கு சேவை செய்ய மடத்துக்கு வந்தேன்.. என் தங்கை கஸ்தூரியும் அடிக் கடி மடத்துக்கு வந்து போவா. நித்யானந்தாவை ஆதீன மாத்தான் அழைத்தார். அவர் ஞானமுள்ளவர். எதிரிகளைக் கூட வசப்படுத்தும் வித்தை தெரிந்தவர். அவர் மீது கற் பழிப்பு புகாரெல்லாம் இருக் குன்னு பலரும் சொல்றாங்க. வேணும்னா பாருங்க அவரைக் குறை சொல்லும் அத்தனை பேரையுமே அவர் வசப் படுத்திடுவார். அவர் மீதான கற்பழிப்பு உள்ளிட்ட வழக்கில் தீர்ப்பு அவருக்கு பாதகமா வந்தா அவர், அவரோட ஆதீன பொறுப்பை விட்டுட்டுப் போயிடுவார்'' என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, அவரை ஒரு ஆண் இடைமறித்து,’""யார்க்கிட்ட பேசிக்கிட்டு இருக்கே. பத்திரி கைக்காரங்ககிட்ட எதுவும் பேசாதே'' என்று அவரிடமிருந்த செல்போனைப் பிடுங்கிக்கொண்டார்..
இந்த நிலையில் கஸ்தூரி, ஆதீனத்தின் நகை பணத்தோடு ஓடி விட்டார் என்றும் நித்தி தரப்புதான் துரத்தியடித்தது என்றும் விதவித சர்ச்சை எழுந்ததால் கஸ்தூரியைத் தேடி 3-ந் தேதி காலை திருவாரூர் அருகே இருக்கும் கச்சனம் கிராமத் துக்கு சென்றோம்.
ஆதீனத்தின் நவீன கெஸ்ட் ஹவுஸுக்கு எதிரில் கோயிலுக்கு சொந்தமான குவாட்டர்ஸில் அவரது வீடு இருந்தது. புது பெயிண்ட்டோடு அந்த வீடு மட்டும் ஃப்ரெஷ்ஷாக இருந்தது. வீட்டுக் கதவைத் திறந்த பெண்ணைப் பார்த்து ""நீங்கதான் கஸ்தூரியா?'' என்றோம்.
""அய்யோ நான் அவ அம்மா. என் பேரு கமலா'' என்று நாணப்பட்டார். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் ‘""கஸ்தூரி திருவாரூர் ரஃபியம்மாள் கல்லூரியில் எம்.எஸ்.சி., ஐ..டி. படிக்கிறா. எங்களுக்குப் பிடிக்காதவங்க அதிகம். அவங்கதான் உங்கள மாதிரி பத்திரிகைகளுக்கு எங்களைப் பத்தி தப்பு தப்பா செய்தி கொடுக்கறாங்க'' என்றார்.
""உங்களைப் பிடிக்காதவங்க யாரு?'' என்றோம்.
கமலாவோ ‘""இந்த ஊருக்கே எங்களைப் பிடிக்காது. ஏப்ரல் 1-ந் தேதி ஆதீனம், இங்க பிறந்த நாளைக் கொண்டாடினார். கஸ்தூரி காசில்தான் கேக்கெல்லாம் வாங்கி வெட்டினாங்க. ஒரே விழாக்கோலமா இருந்தது. அப்ப எங்க ஊர்க்காரரான கலிய பெருமாள், ஆதீனத்துக்கிட்டபோய், "ஊருக்கொரு பொண்டாட்டி வச்சிருக்கும் நீ, எங்க ஊர்ல மூணு பொண்டாட்டியை செட் பண்ணிட்டியா'ன்னு பிரச்சினை பண்ணிட்டார். பிரச்சினை பெரிதாக போலீஸே வந்துடுச்சி'' என்றார். நாம் கேமராவை எடுப்பதைப் பார்த்த அவர் ""இப்ப நான் ஃபிரெஷ்ஷா இல்லை. இப்ப எடுக்காதீங்க'' என்றவர் பிறகு படத்துக்கு ஒத்துக்கொண்டார்.
கல்லூரியில் இருந்து வந்த கஸ்தூரியிடம், ஆதீனத் தொடர்பு பற்றியும் நித்தியோடு ஆதீனத்தின் தொடர்புகள் குறித்தும் கேட்டோம். முழுதாக விவரிக்க ஆரம்பித்தார்....
""இந்த கச்சனம் கிராமமே மதுரை ஆதீனத்துக்கு சொந்தமானதுதான். நானும் எங்க அக்கா வைஷ்ணவியும் சின்ன வயசில் இருந்தே கோயிலுக்குப் போவோம். அப்ப இங்க ஆதீனம் வரும்போதெல்லாம் எங்கக்கிட்ட பிரியமா பேசுவார். என்ஜினியரிங் படித்த எங்க அக்காவை ரெண்டரை வருசத்துக்கு முன்ன ஆதீனம் மடத்துக்கு கூப்பிட்டார். அங்க கணக்குப்பிள்ளை வேலை. அவளுக்கு சமைச்சிப்போட ஒரு சமையல்காரப் பெண் இருந்தார். அவர் இடையில் போய்ட்டார். நானும் அடிக்கடி லீவ் விடும் போதெல்லாம் மடத்துக்குப் போவேன். எப்பவும் எங்கக்கூடதான் ஆதீனம் இருப்பார். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, ஆதீனத்துக்கிட்ட, நாமும் ஆதீனத்தின் சார்பா ஒரு டிரஸ்ட்டை ஆரம்பிச்சா என்னன்னு கேட்டேன். உடனே சின்னவ சொல்லிட்டா, செஞ்சிட வேண்டியதுதான்னு. உடனே, மதுரை ஆதீன அறக்கட்டளை என்ற பெயரில் டிரஸ்ட்டைத் தொடங்கிட்டார். இதுக்கு ஆதீனம் தலைவர். எங்க அக்கா வைஷ் ணவியும் ஈரோடு குருசாமியும் செய லாளர்கள். இந்த நிலை யில் அடிக்கடி நித்யா னந்தா ஆதீன மடத்துக்கு வர ஆரம்பிச்சார். அவர் வரும் போதெல்லாம் 50, 100 பேர் கூடவே வருவாங்க. அவங்களைக் கண்டா ஆதீன ஆட்கள் மிரளுவாங்க. எனக்குத் தெரிஞ்சே நாலஞ்சி தடவை நித்தி வந்திருக்கார்.
இந்த நிலையில் பத்து நாளைக்கு முன்னாடி ஆதீனத்தை தனது பெங்களூரு ஆசிரமத்துக்கு கூப்பிட்டார் நித்தி. உடனே ஆதீனம், என்னையும் வைஷ்ணவியையும் அழைச்சிக்கிட்டுப் போனார். நாங்க மூணுபேர் மட்டும்தான் போனோம். அங்க இருக்கும் போது ஏதோ மீட்டிங்குன்னு சொன்னாங்க. அப்ப நித்தியின் ரெண்டு பெண் சீடர்கள், ஆதீனத்தை ஒரு அறைக்குக் கூட்டிட்டுப் போனாங்க. நாங்களும் வர்றோம்ன்னு நாங்க எழுந்திரிச்சதும், நீங்க இங்கேயே இருங்கன்னு, எங்களைப் பிடிச்சி உட்காரவச்சிட்டு, ஆதீனத்தின் கையைப்பிடித்து அழைச்சிக்கிட்டுப்போனாங்க. அப்பவே நிலைமை சரியில்லைன்னு தோணுச்சு. திரும்பி வந்த ஆதீனம், "நித்தியை மதுரை ஆதீனமா ஆக்கலாம்ன்னு நினைக்கிறேன்' என்று எங்களிடம் சொன்னார். எங்களுக்கு பகீர்ன்னு ஆயிடிச்சி. "அவசரப்படாதீங்க. இது பத்தி நாலுவருசம் கழிச்சி யோசிக்கலாம். இப்ப நாம ஆரம்பிச்ச டிரஸ்ட்டை வளர்க்கலாம்'ன்னு சொன்னோம்.
"இங்க மடம் எப்படி இருக்கு பார்த்தீங்களா? எங்க பார்த்தாலும் சந்தோசம் வழியுது. இவங்கள மாதிரி நாமும் மாறவேண்டாமா?'ன்னு ஆதீனம் கேட்டார். நாம் நாமளாவே இருப்போம்ன்னு சொன்னோம். ஆதீனம் சரின்னு தலையசைச்சார்.

அங்க ஏறத்தாழ ஒருவாரம் தங்கி யிருந்தோம். அப்ப ஆதீனத்தை சரியா சாப்பிடவிடாம, தூங்க விடாம நித்தியின் ஆண்-பெண் சீடர்கள் பேசி தொந்தரவு கொடுத்துக்கிட்டே இருந்தாங்க. ஒரு கட் டத்தில் எங்க அக்கா வைஷ்ணவி, அவங்கக் கிட்ட, "ஆதீனத்தை கொஞ்ச நாள் உயிரோட இருக்க விடுங்க'ன்னு சண்டை போட்டா. உடனே அந்த ஆசிரமத்தில் இருந்த சிலர், "இவளுங்களை ஆதீனத்தோடு இருக்கவிட்டா சரிப்படாது'ன்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க. எங்க அக்கா பத்தி நித்தி ஆட்கள் ஏகத்துக்கும் ஆதீனத்திடம் புகார் சொன்னாங்க. ஆதீனமோ, வைஷ்ணவிக்கிட்ட, "நீ வாயை மூடிக்கிட்டு இரு. இதையெல்லாம் நீ ஏன் கண்டுக்கற. உன் வேலையைப் பாரு'ன்னு கண்டிச்சார். ஆதீனம், நித்தி விவகாரத்தைப் பரிசீலிப்பார்ன்னு நினைச்சோம். ஆனா திடீர்ன்னு நித்தி கூட்டிய பிரஸ் மீட்டில், நித்திதான் ஆதீனம்ன்னு அறிவிச்சிட்டார். பிடதி ஆசிரமம் போன ஒரே வாரத்தில் ஆதீனம் எப்படி இப்படி மாறினார்ன்னு தெரியலை''’என்றார் ஆதங்கமும் வருத்தமுமாய்.

""உங்க அக்காவுக்கும் ஆதீனத் துக்கும் உயிர் ஆபத்து இருக்குன்னு ராமராஜனிடம் சொன்னது உண்மையா?'' என்றோம்.

ஒரு கணம் திகைத்தவர் ""ஆமாம். எக்ஸாம் வந்ததாலும் நித்தி கும் பல் இருந்ததாலும் நான் ஊருக்கு வந்துட்டேன். அக்கா வைஷ்ணவிக்கு அந்தக் கும்பல் தன்னைக் கொலை செஞ்சுடுமோங்கிற பயம். நித்தி கும்பலின் நடவடிக்கைகளும் அடாவடி களும் அவளை பீதியடைய வச்சிடிச்சி. அவ பார்த்த சில விசயங்கள் அவளை ரொம்பவே பயமுறுத்திடிச்சி. அதனால் அவள் உயிர்தப்பிக்கும் நோக்கத்தில் அங்க இருந்து எஸ்கேப் ஆயிட்டா. ஈரோடு குருசாமி வீட்டில்தான் தலைமறைவா இருந்தா. அவளைப்பத்தி சர்ச்சைகள் வெளில வந்ததும், ஆதீனம் கன்வின்ஸ் பண்ணி இப்ப மடத்துக் குக் கூப்பிட்டுக்கிட்டார். அப்புறம் நான் மடத்திலிருந்து நகை பணத்தோடு ஓடி வந்துட்டதா கதை கிளப்பறாங்க. எங்களுக்கு பணத்துக்கோ வசதிக்கோ பிரச்சினை இல்லை. எங்க அண்ணன் இத்தாலியில் என்ஜினியரா இருக்கான். லட்சக்கணக்கில் சம்பளம். நானும் ஃபாரின் போயிடுவேன். நாங்க நிம்மதியாத்தான் இருக்கோம். ஆதீனத் துக்காகத்தான் நாங்க கவலைப்படறோம். வேறென்ன சொல்ல'' என்று முடித்துக் கொண்டார்.

மதுரை ஆதீனத்தின் மிக நெருக்கமான வட்டாரங்களே நித்திக்கு எதிராக வாய்திறக்க ஆரம்பித்துவிட்டன.

ஆதீன விவகாரத்தில் இன்னும் என்னென்ன பூதங்கள் கிளப்பப்போகிறதோ?

-முகில், செல்வகுமார்
படங்கள்: அண்ணல்





நக்கீரன் செய்திக்கு தடை கேட்கும் ஆதீனம்!



"மதுரை ஆதீனத்தின் புதிய நட்பு! சுழலும் விறுவிறு சர்ச்சைகள்'’ என்ற தலைப்பில் கடந்த ஏப்ரல் 28-ந் தேதியிட்ட நக்கீரன் இதழில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தோம். இதில் மடத்திற்குள் வைஷ்ணவி, கஸ்தூரி போன்ற பெண்கள் புழங்குவது குறித்தும் நித்யானந்தா ஆதீன மடத்திற்கு வந்துபோனது குறித்தும், இதைத் தொடர்ந்து ஆதீனமும் நித்தியின் பெங்களூரு பிடதி ஆசிரமத்திற்கு வைஷ்ணவி, கஸ்தூரி சகிதம் சென்றது குறித்தும், ஆதீனம் கைமாறப்போவது குறித்தும், ஆதீனத்துக்கு எதிரான குமுறல்கள் குறித்தும் தகுந்த பேட்டிகளுடன் முன்னதாகவே செய்தி வெளியிட்டிருந்தோம். நாம் தெரிவித்தபடியே அடுத்தடுத்த காரியங்கள் அங்கே அரங்கேறியதோடு, ஆதீனத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தவேண்டும் என ஆட்கொணர்வு மனு தாக்கல் ஆகும் அளவிற்கு நிலைமை போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மதுரை ஆதீனம் சென்னை விடுமுறைக்கால சிட்டி சிவில் கோர்ட், 5-ல் ‘நக்கீரன் வெளியிட்ட செய்தி முழுக்க முழுக்க தவறானது. என் புகழைக் கெடுக்கும் நோக்கத்தில் அந்த செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இது ஆதீன பக்தர்களின் மத உணர்வைப் புண்படுத்தியிருக்கிறது. எனவே என்னைப் பற்றிய செய்தியை இனி வெளியிட நிரந்தர தடை விதிக்கவேண்டும்’ என தனது சார்பில் மனு தாக்கல் செய்திருந்தார். இது அவசர வழக்காக 3-ம் தேதி எடுத்துக்கொள்ளப்பட்டது. நக்கீரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பி.டி.பெருமாள், எட்விக், சிவகுமார் ஆகியோர் ""நக்கீரன் வெளியிட்ட செய்தி உண்மையானது. அது தீர விசாரித்து எழுதப்பட்ட கட்டுரை. எனவே வழக்கு தொடர்பான மனுவின் நகலை வழங்கினால், நாங்கள் வாதம் செய்யத் தயார்'' என்றனர். இதைத் தொடர்ந்து தடை விதிக்காமல் வழக்கை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது கோர்ட்.

கோர்ட் ஆர்டர்!

சென்னை உயர்நீதிமன்ற விடுமுறைக்கால கோர்ட்டில், சென்னை வழக்கறிஞர் கௌதம், நித்திக்கு எதிராக ஒரு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். அதில் "நித்தி மீது கற்பழிப்பு வழக்கு, முறையற்ற உறவுப்புகார் என பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட நித்யானந்தா, ஆதீனப் பதவியைக் காசு கொடுத்துதான் வாங்கியிருக்கிறார். இதை பல்வேறு ஊடகங்கள் பதிவு செய்திருக்கின்றன. எனவே இவர் ஆதீனமாகத் தொடர்ந்தால் ஆன்மீகவாதிகளின் மனம் புண்படும். எனவே நித்தியின் ஆதீனப் பதவியை ரத்து செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டி ருந்தார். இதை மே 3-ந்தேதி வியாழக்கிழமை விசாரித்த நீதி யரசர்கள் சி.எஸ்.கர்ணன், ரவிச் சந்திரபாபு ஆகியோரடங்கிய பெஞ்ச் "மடத்தின் பதவிப்பிரமாண விவ காரத்தில் கோர்ட் தலையிடமுடி யாது. அதே சமயம், அவர் மீதான (நித்தி) குற்றச்சாட்டுக்கள் கடுமையாக இருப்பதை உணரமுடிகிறது. எனவே அவர் மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான அசையும் அசையாச் சொத்துக்களைக் கையாளவோ அவைகளில் தலையிடவோ கூடாது' என்று தீர்ப்பளித்தனர்.

வழக்கறிஞர் கௌதமோ ‘""இந்தத் தீர்ப்பு, ஆன்மீக வாதிகள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதோடு விடமாட்டோம். சட்ட ரீதியாகவே நித்யானந்தாவை மதுரை ஆதீன மடத்திலிருந்து விரைவில் துரத்தியடிப்போம்'' என்கிறார் அழுத்தம் திருத்தமாக.


-ந.பா.சேதுராமன்
thanks nakkeeran + ramalingam pillai chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக