செவ்வாய், 8 மே, 2012

ஜெயலலிதா: வரவேற்பு வளைவு வைத்து சாலைகளை தோண்டாத அரசு

சென்னை: ""நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு, எந்த அரசு விழாவுக்காகவும், வரவேற்பு வளைவுகள் வைக்கப்படவில்லை; சாலைகளும் சேதப்படுத்தப்படவில்லை,'' என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீதான பொது விவாதம்:
ஆறுமுகம் - இந்திய கம்யூனிஸ்ட்: போக்குவரத்துத்துறை தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கு பெறும் தொழிற்சங்கம் குறித்து, கடந்த ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

மிரட்டி சேர்க்கப்பட்ட கூடாரம்
செந்தில் பாலாஜி - அமைச்சர்: கடந்த ஆட்சியில் தொழிலாளர்களை மிரட்டி, அவர்களது தொழிற்சங்கத்தில் சேர்த்துக் கொண்டனர். அதன் மூலம் அதிக உறுப்பினர் இருப்பதாகக் காட்டிக் கொண்டு, பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் அங்கீகாரம் அவர்களுக்குள்ளதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மிரட்டி சேர்க்கப்பட்ட அந்த தொழிற்சங்க கூடாரம் தற்போது காலியாகியுள்ளது. அரசாணை குறித்து, விரைவில் அரசு நடவடிக்கை எடுக்கும்.
ஆறுமுகம்: போக்குவரத்துப் பணிமனைகளில் தொழில்நுட்ப பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. அவற்றை நிரப்ப வேண்டும்
அமைச்சர்: கடந்த ஆட்சியில் ஏராளமான டிரைவர், கண்டக்டர்களை நியமித்தவர்கள், தொழில்நுட்பப் பணியாளர்களை நியமிக்கவில்லை. 19 ஆயிரம் பஸ்கள் இயங்கும் நிலையில், கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் 10 பணிமனைகள் மட்டுமே துவங்கப்பட்டுள்ளன. தற்போது தொழில்நுட்பப் பணியாளர்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாலபாரதி - மார்க்சிஸ்ட்: மகளிர் மட்டும் பஸ்களை இயக்க வேண்டும். பஸ் கட்டணத்தை ஒரு பைசாவாவது குறைக்க வேண்டும்.
கூடுதலாக இயக்கப்படும்
அமைச்சர்: கடந்த 2008ம் ஆண்டு டீசல் விலை ரூ.36.50 ஆக இருந்தபோது, கேரளாவில் ஒரு கிலோமீட்டருக்கு 55 பைசா என பஸ் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது டீசல் விலை ரூ.43.95 ஆக இருக்கும்போதும் தமிழகத்தில் ஒரு கி.மீ.,க்கு 42 பைசா தான் வசூலிக்கப்படுகிறது. பொதுமக்கள் நலனுக்காக 51 சதவீத பஸ்கள் சாதாரண பஸ்களாகவே இயக்கப்படுகின்றன. மகளிர் மட்டும் பஸ்கள் தற்போதும் இயக்கப்படுகின்றன. எந்தப் பகுதியில் தேவை என தெரிவித்தால், அதற்கேற்ப கூடுதலாக இயக்கப்படும்.
பிரின்ஸ் - காங்கிரஸ்: கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் பழைய பஸ்களே அதிகமாக உள்ளன. அவற்றை புதிய பஸ்களாக மாற்ற வேண்டும். இதர பணி என்ற பெயரில் டிரைவர், கண்டக்டர்கள் பணிக்கு வராமல் உள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா: பழுதடைந்த பஸ்கள் அனைத்தையும் மாற்றி, 100 சதவீதம் புதிய பஸ்கள் இயக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி - அமைச்சர்: கடந்த ஆட்சியில் அரசு சம்பளம் பெற்றுக் கொண்டு பணிக்கு வராமல் ஏராளமானவர்கள் இருந்தனர். இந்த ஆட்சியில் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து யாரும் சம்பளம் பெற முடியாது.
கலையரசன் - பா.ம.க.,: அரசு விழாக்களுக்கு வரவேற்பு வளைவுகள் வைப்பதற்காக, சாலைகள் தோண்டப்படுவதால் சேதமடைந்து வருகின்றன.

முதல்வர் ஜெயலலிதா: தி.மு.க., ஆட்சியில் தான், வரவேற்பு வளைவுகள் வைத்து சாலைகள் சேதப்படுத்தப்பட்டன. நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு எந்த அரசு விழாவுக்காகவும், வரவேற்பு வளைவுகள் வைக்கப்படவில்லை; சாலைகளும் சேதப்படுத்தப்படவில்லை.இவ்வாறு விவாதம் நடந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக