இன்று செய்தித்தாள்களையும் தொலைக்காட்சி சானல்களையும் பத்திரிகைகளையும்
நடத்திக்கொண்டிருப்பவர்கள் யார்? சமூகத்துக்குச் சேவை செய்வதற்காகவும் பொது
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் சீர்கேடுகளைத் தட்டிக்
கேட்பதற்காகவும் அவதரித்த போராளிகளா?
இப்படித்தான் முன்பு மருத்துவர்களையும் ஆசிரியர்களையும் நினைத்து
வந்தோம். இந்த இரண்டும் சேவை அல்ல, தொழில்களே என்று தெரிந்துகொண்ட பிறகு
மயக்கம் தெளிந்தது. ஆனால், மீடியா மாயை மட்டும் விலகமாட்டேன் என்கிறது.
காரணம் அதன் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் அதீத புனித பிம்பம்.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் அல்லவா? லேசாக உரசினால்கூட, தேசத்தின்
ஆன்மாவே சிதைந்துவிட்டது என்று குரல் கொடுக்க பத்திரிகையாளர்களும்
எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் ஓடோடி வந்துவிடுவார்கள். ஸ்கூப் புகழ் குல்தீப் நய்யார் சமீபத்தில் குரல் கொடுத்திருக்கிறார். ‘மீடியா சுதந்தரத்துக்கு ஏதாவது பங்கம் வருகிறது என்று தெரிந்தால், முதல் ஆளாக நான் போராட்டத்தில் குதிப்பேன்.’
மீடியா சுதந்தரம் காக்கப்படவேண்டும் என்று அவுட்லுக், ஃபிரண்ட்லைன் இரண்டும் கவர் ஸ்டோரி வெளியிட்டுவிட்டன. மீடியாவுக்கு எதிராக அரசாங்கம், நீதித்துறை, நிர்வாகத் துறை என்று பெரும்படை திரட்டப்பட்டுக்கொண்டிருப்பதாகவும், எப்பாடுபட்டாவது இந்த முயற்சிகளை முறியடிக்கவேண்டும் என்றும் பலர் கவலையும் கோபமும் கொண்டு பொங்கியிருக்கிறார்கள். இந்த விவாதம் கிளம்பியதற்கு ஒரு முக்கியக் காரணம் பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு. மற்ற துறைகளைப் போல் மீடியாவும் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்பது இவர் வாதம். அதெப்படி எங்களைக் கட்டுப்படுத்தலாம் என்பது மீடியாவின் கோபம். எங்களைக் கட்டுப்படுத்துவது ஜனநாயகத்தைக் கட்டுப்படுத்துவது ஆகாதா?
இந்த வாதத்தை ஏற்கவேண்டுமானால், ஒரு ஜனநாயக நாட்டில் எதையும் யாரும் கட்டுப்படுத்தக்கூடாது என்று ஒரு சட்டம் போட்டுவிட்டு மற்ற எல்லாச் சட்டங்களையும் விலக்கிக்கொண்டுவிடவேண்டும். குற்றத்தைத் தடுக்கவேண்டியது காவல் துறையின் பணி. எனவே அவர்களை யாரும் மேற்பார்வையிடக்கூடாது. நீதி வழங்கவேண்டிய நீதிமன்றத்தின் பணி. எனவே யாரும் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்கக்கூடாது. படிக்கவேண்டியது மாணவர்களின் கடமை. எனவே அவர்களை யாரும் கட்டுப்படுத்தக்கூடாது.
நான்காவது தூண் இழைக்கும் நான்கு முக்கியத் தவறுகளைப் பார்த்தால் ஏன் மீடியா கட்டுப்படுத்தப்படவேண்டும் என்பது தெரியவரும்.
1. அவசரம்
பிரேக்கிங் ஸ்டோரி, ஃப்ளாஷ் நியூஸ், எக்ஸ்க்ளூஸிவ் என்றெல்லாம் பெயர் சூட்டி, அடுத்த நிமிடம் உலகம் வெடித்துச் சிதறப்போகிறது என்னும் தொனியில் உப்புச்சப்பில்லாத எதாவதொரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அலசுவது.
கருத்து சொல்வதற்காகவே காத்திருக்கும் ‘எக்ஸ்பர்ட்டுகளை’ வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் வரவழைத்து அறிவுஜீவித்தனமாக கேள்விகள் கேட்டு, முதல் நபர் பேச ஆரம்பிப்பதற்குள் கட் சொல்லி இரண்டாவது எக்ஸ்பர்ட்டை இழுத்து, அவரையும் அந்தரத்தில் தவிக்கவிட்டுவிட்டு இன்னொருவரிடம் தாவி பிறகு முதல் நபர் விட்ட இடத்தில் இருந்து தொடங்கி… இப்படி ஒரு மணி நேரம் காரசராமாக ஒரு விவாதம் நடந்து முடிந்து, எல்லாருக்கும் நன்றி சொல்லிவிட்டு, ஸ்டூடியோ லைட்டை ஆஃப் செய்து அடுத்த புரோகிராமை புன்னகையுடன் ஆரம்பிக்கும்போது, எதைப் பற்றி இத்தனை பரபரப்பான விவாதம் என்பதே மறந்துவிடுகிறது.
மொத்தத்தில், ஒரு நிகழ்வு உருபெறத் தொடங்கி அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்து முழுமை பெறுவதற்கு முன்பே, குறுக்கே புகுந்து கழுத்தை நெறித்துக்கொன்று பிரேதப் பரிசோதனை நிகழ்த்திவிடுகிறார்கள். எந்தவொரு செய்தியையும் நம்மால் முழுமையாகவும் தெளிவாகவும் கடைசிவரை தெரிந்துகொள்ளமுடிவதில்லை. அரைவேக்காட்டு செய்திகள் பற்றிய மீடியாவின் அரைவேக்காட்டு கருத்துகளே நம் கருத்துகளாக மாறிவிட்டன.
2. அநாவசியம்
பல சமயங்களில், மீடியாவே டிடெக்டிவாக மாறி ஒரு குற்றத்தைக் ‘கண்டுபிடித்து’, போலிஸாக மாறி, ‘துப்பறிந்து’, வழக்கறிஞராக மாறி ‘விசாரித்து’, நீதிபதியாக மாறி ‘தீர்ப்பும்’ அளித்துவிடுகிறது. ஒருவரை ஹீரோவாக்கவேண்டுமா, வில்லனாக்கவேண்டுமா என்பதை முதலில் முடிவு செய்துகொண்டுவிடுகிறார்கள். அதற்கேற்க சாட்சிகள், காட்சிகள், ஒலி, ஒளி, கிராஃபிக்ஸ் எல்லாம் சேர்த்து தயாரித்து சுடச்சுடப் பறிமாறிவிடுகிறார்கள்.
செய்திகளை அளிப்பது அல்ல, பிம்பங்களைக் கட்டமைப்பதே மீடியாவின் முதன்மையான பணியாக இருக்கிறது. பல சமயங்களில் அவர்களே இந்த பிம்பங்களை உடைத்தும் விடுகிறார்கள். சமீபத்தில் மீடியா உருவாக்கி மீடியாவே உடைத்த பிம்பங்கள், ராகுல் காந்தி, நித்யானந்தா, மம்தா பானர்ஜி. இவர்கள் உருவாக்குவதையும் உடைப்பதையும் நுகர்வதே நம் வேலையாகப் போய்விட்டது.
3. அதீதம்
குப்பை அள்ளிச் செல்லும் லாரி ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி அனைத்தையும் சரசரவேன்று கீழே கொட்டுவதைப் போல் நீங்கள் சுதாரிப்பதற்குக்கூட அவகாசம் அளிக்காமல், ஒன்றின்மேல் ஒன்றாக பல விஷயங்களைத் திணித்துக்கொண்டிருக்கிறது மீடியா. எது எனக்கானது? எது என் வாழ்வைத் தீர்மானிக்கிறது? எது என்னைப் பாதிக்கிறது? எதைப் பற்றி நான் மேலோட்டமாகவும் எதைப் பற்றி நான் ஆழமாகவும் தெரிந்துகொள்ளவேண்டும்? ஒன்றை உள்வாங்குவதற்குள், ஒன்றைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வதற்குள், ஒன்பது பிரேக்கிங் நியூஸ்.
எது செய்தி, எது செய்தியல்ல என்பதையும் எதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும் எதைத் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதையும் மீடியாவே முடிவு செய்கிறது. எதை நாம் விவாதிக்கவேண்டும், எதை அப்படியே ஏற்கவேண்டும், எதைப் பற்றி யோசிக்கவே கூடாது என்பதையும் அவர்களே தீர்மானித்துவிடுகிறார்கள்.
ஆங்கிலத்தில் Data mining என்று சொல்வார்கள். இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில், இணைய, அச்சு, ஒளி, ஒலி ஊடகங்கள் புற்றீசல்போல் பெருகியிருக்கும் சூழலில், அதீதங்களுக்கு மத்தியில், குப்பைகளுக்கு மத்தியில் சரியான விஷயங்களைத் தேடிப்பெறுவது மிக மிக சவாலான காரியம்.
4. அலட்சியம்
சென்னையில் ஒரு விபத்து நடைபெறுகிறது. அதே விபத்து காஷ்மிரில் நடைபெறுகிறது. இரு சம்பவங்களிலும் உயிரிழப்பு எண்ணிக்கை ஒன்றே. இந்த இரண்டும் எப்படிச் செய்தியாகிறது என்பதைக் கவனியுங்கள். சென்னை விபத்து இரு பத்திகளைத் தாண்டி நீளாது. ஆனால், காஷ்மிர் கதை சில பக்கங்களுக்கு நீளலாம். பல கருத்து சேகரிப்புகள் நடத்தலாம். தீவிரவாதிகளின் சதியாக இருக்குமா? லஷ்கரா அல் காயிதாவா? இந்திய ஜவான்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? பாகிஸ்தான் என்ன செய்யப்போகிறது? காஷ்மிர் பாதுகாப்பற்ற பிரதேசமாக மாறிக்கொண்டிருக்கிறதா? வேலையற்ற இளைஞர்களின் செயலா? விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது பிரேக்கிங் நியூஸ் ஆகாது. காஷ்மிர் விபத்து நிச்சயம் பிரேக்கிங் நியூஸ். மக்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் தொடர்ந்து மீடியாவால் அலட்சியப்படுத்தப்படுகின்றன. மிகச் சிறந்த உதாரணம், 26/11 மும்பை தாக்குதலை மீடியா கவர் செய்த விதம்.
0
கடந்த ஒரு மாதம் செய்தித்தாள்களில் வெளியான பரபரப்பு தலைப்புச் செய்திகளை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். நியூஸ் சானல்களில் நீங்கள் கண்ட காரசாரமான விவாதங்களை நினைத்துக்கொள்ளுங்கள். நொடிக்கு நொடி நகரும் ஃப்ளாஷ் நியூஸ்களை மீண்டும் மனத்தில் ஓடவிட்டுப் பாருங்கள். செய்திகளை வெவ்வேறு கோணங்களில் அலசிய எக்ஸ்பர்ட்டுகளின் வாதங்களை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு நிகழ்வு குறித்து எத்தனை விதமான கோணங்கள் உங்களுக்குக் காண்பிக்கப்பட்டன? எத்தனை விதமான பார்வைகள் அளிக்கப்பட்டன? குறிப்பிட்ட ஒரு நிகழ்வு பற்றி நீங்கள் எப்படிப்பட்ட கருத்தை உருவாக்கிக்கொண்டீர்கள்? உங்கள் பார்வை எந்த அளவுக்கு மீடியாவால் விசாலப்படுத்தப்பட்டிருக்கிறது? எத்தகைய தெளிவை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்? குறிப்பிட்ட ஒரு கருத்தாக்கம் பற்றிய உங்கள் நிலைப்பாடு மாறியிருக்கிறதா, வலுவடைந்திருக்கிறதா, தளர்ந்திருக்கிறதா? உங்களைப் பற்றியும் உங்களைச் சுற்றியிருப்பவர்கள் பற்றியும் என்ன விதமான அபிப்பிராயத்தை நீங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறீர்கள்?
அல்லது, நீங்கள் தெரிந்துகொண்டதுதான் என்ன?
0
மீடியா நிச்சயம் கட்டுப்படுத்தப்படவேண்டும். ஆனால் யாரால்? சுயக் கட்டுப்பாடு அல்லது சுய தணிக்கை என்பது நேர்மையான போலிஸ்காரர் அல்லது நல்ல அரசியல்வாதி போல் நடைமுறை சாத்தியமற்ற கற்பனை. அரசாங்கம் கட்டுப்படுத்தலாமா? செய்யலாம், ஆனால் இந்தக் கட்டுப்பாடு என்பது ஆளுங்கட்சிக்குப் பாதகமான அல்லது எதிர்க்கட்சிக்குச் சாதகமான செய்திகளைத் தணிக்கை செய்வதில் மட்டும்தான் சென்று முடியும். பரபரப்புச் செய்திகளை அளிக்காதே என்றோ ஊர்ஜிதம் செய்யமுடியாத, சரிபார்க்கமுடியாத செய்திகளை அளிக்காதே என்றோ மக்களுக்கு உபயோகம் அளிக்காதவற்றைத் தொடாதே என்றோ அறிவுறுத்த யார் இங்கே இருக்கிறார்கள்?
0
நாம் என்னென்ன தெரிந்துகொள்ளவேண்டும் என்பதைவிட நாம் எதையெல்லாம் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதில்தான்மீடியா அக்கறை காட்டுகிறது. அந்த வகையில், அசலான செய்திகளை அளிப்பதில் அல்ல மறைப்பதில்தான் மீடியா முனைப்புடன் இருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
0
மருதன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக