திங்கள், 28 மே, 2012

நித்தியானந்தாவுக்கு மதுரை புதிய மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

மதுரை, மே 28- நான் திருவண்ணாமலைக்குப் போனதும் இல்லை, நித்தியானந்தாவைப் பார்த்ததும் இல்லை. இந்த நிலையில் என்னை தனக்குத் தெரியும் என்று நித்தியானந்தா கூறுவது தவறு.
இப்படிப்பட்ட தவறான தகவல்களை அவர் வெளியிடக் கூடாது என்று மதுரை புதிய மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ள அன்ஷுல் மிஸ்ரா கூறியுள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தவர் சகாயம். அவரை திடீரென மாற்றி விட்டு அன்ஷுல் மிஸ்ராவை ஆட்சியராக அறிவித்துள்ளது தமிழக அரசு. மிஸ்ராவும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது, உங்களை தனக்கு நன்றாக தெரியும் என்று நித்தியானந்தா கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், நான் திருவண்ணாமலைக்குப் போனதும் இல்லை, அங்கு நித்தியானந்தாவை சந்தித்ததும் இல்லை. எனவே இதுபோன்ற தவறான தகவல்களை அவர் வெளியிடக் கூடாது என்றார்.

நித்தியானந்தா மீது பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆட்சியராக இருந்த சகாயத்திடம் புகார் கூறியிருந்தனர்.

அதன் நிலை என்ன என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதுகுறித்து பரிசீலிக்கப்படும். புகாரின் தன்மை குறித்து ஆராய்ந்து, அதற்கேற்றவாறு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மிஸ்ரா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக