வெள்ளி, 18 மே, 2012

கொலைகார திருஞான சம்பந்தரை விட குஷால் பேர்வழி நித்தியானந்தா எவ்வளவோ மேலில்லையா?

சங்கர மடத்தின் பார்ப்புக்கு ஒரு நீதி! மனு தர்மத்தின் நியதி!

பார்ப்பனியத்தின் தலைமை பீடமாக திகழ்ந்த சங்கர மடத்தை அவாள்களும் சரி, அவாள்களின் அரசியல் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸூம் சரி என்றைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். தற்போது நித்தியானந்தா ஆதீனமாக மலர்ந்திருக்கும் நிலையில் யாரும் ஜெயேந்திரன் விவகாரத்தை எழுப்பி விடக்கூடாது என்பதில் தினமணி வைத்தி மாமா மிகவும் கவலைப்ப்படுவது அதற்கோர் சான்று. அதாவது ஜெயேந்திரன் மடாதிபதியாக இருக்கும் போதுதான் குற்றம் சாட்டப்பட்டாராம். அது நீதிமன்றத்தால் நிரூபணமாகாத நிலையில் அவர் பதவி விலக தேவையில்லையாம். ஆனால் நித்தியானந்தா பாலியல் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் புதிதாக மடத்தின் தலைவராக வருவது சரியில்லை என்று புலம்புகிறது தினமணி. எனில் அவர் நித்தியானந்தா தியான பீடத்தின் தலையாக வலம் வருவதில் வைத்திக்கு உடன்பாடுதான். புதிய பதவிதான் பிரச்சினையாம்.
நெஞ்சு நிமிர்த்தி ” நீதான் குற்றவாளி” என்று சொல்ல முடியாத துர்பாக்கிய நிலைதான், “நித்தியானந்தா ஆதினத்திற்கு பொருத்தமானவர் அல்ல, மரபுகள் தேவைப்படாத சித்த மரபைச் சேர்ந்தவர்”, என்றெல்லாம் செத்துப்போகும் பாயிண்டுகளை வைத்து பேசுகிறார் வைத்தி மாமா. என்னதான் கவனமாக இருந்தாலும் மல்லாக்க படுத்து துப்பும் போது எச்சில் கீழேதானே விழவேண்டும்?

நித்திக்காக வெட்கப்படும் ‘இந்துக்களை’ காப்பாற்ற வருகிறார் ஜெயமோகன்!

நோ, நோ! திஸ் நான்சென்ஸ் இஸ் நாட் ஒரிஜினல் ஆன்மீகம் என்கிறார் ஜெயமோகன்
கொலையே செய்தாலும் ஒரு பார்ப்பனருக்கு மரண தண்டனை இல்லை எனும் மனு தர்ம விதி ஜெயேந்திரன் விசயத்திலும் அப்பட்டமாக பின்பற்றப்படுகிறது. பார்ப்பனரல்லாத சாமியார்களின் லீலைகளை கண்டிக்கும் எவரும் சங்கர மடத்திற்கு மட்டும் அனிச்சை செயலாய் விலக்கு கொடுத்து விடுகிறார்கள். நித்தியானந்தாவின் படுக்கையறை ஆட்டம் நாறிய போது தனது இந்து பக்தர்களை ஆற்றுப்படுத்தும் விதமாக ஆன்மீகம் – போலி ஆன்மீகம் தொடரை ஜெயமோகன் எழுதியிருந்தார்.
ஆனால் செத்துப் போன சீனியர் சங்கராச்சாரியின் சாதித் திமிர், மொழித் திமிர், ஆணாதிக்க திமிர் எல்லாவற்றையும் கடந்து அவர் ஒரு கலாச்சாரக் காவலர் என்று கொண்டாடும் ஜெயமோகன் அந்தக் காவலர் நியமித்த ஜெயேந்திரனது குற்றங்களுக்கும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். இவர் வேறு, அவர் வேறு என்று ஒற்றை வரியில் கடந்து செல்ல முடியாது. பெருசின் உள்ளொளிதானே சிறுசின் ஞானத்தை கண்டுபிடித்து அரியணையில் ஏற்றியிருக்கிறது. பெருசு உயிரோடு இருக்கும் போது மட்டும் சிறிசு நல்லாத்தான் இருந்தார் என்ற வாதமெல்லாம் பூமாரம் போல திருப்பித் தாக்கும்.
நமது கேள்வி எளிமையானது. அதிகார, அரசியல் தரகு மையமாக மாறியதால் மட்டும் ஜெயேந்திரன் தவறு செய்து விடவில்லை. இந்த வாதத்தை நீட்டித்தால் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வருமுன்னர் ஆர்.எஸ்.எஸ் கூட ஒழுக்கமாகத்தான் இருந்தது என்றும் சொல்லலாம். ஆனால் உண்மை அதுவல்ல. அரசியல் அதிகாரத்தை சுவைப்பதற்காக நெடுங்காலம் போராடிய இந்துமதவெறியர்கள் குறிப்பிட்ட காலத்தில் அதை பறித்தெடுக்கிறார்கள்.
ஒழுக்கத்தை வெறுமனே பாலியல் சார்ந்த தனிப்பட்ட ஒழுக்கமாக மட்டும் குறுக்குவதால் சமூகம் சார்ந்த பேரொழுக்கங்கள் மறைந்து கொள்கின்றன. கூடவே தனது ஆதிக்க பாசிசக் கொள்கையை நியாயப்படுத்தவும் செய்கின்றன. குழந்தைகள், பெண்கள், ஆண்கள் உள்ளிட்ட மக்கள் கூட்டத்தை மதத்தால் சாதியால் மொழியால் ஒடுக்கும் கும்பல் பெண்ணாசை துறப்பு அல்லது தொடுப்பின் மூலம் தனது சமூக ஒழுக்கக் கேட்டை ஒழுக்கமாக சித்தரிக்கிறது.
ஜெயமோகன் போன்றோர் விழும் இடம் துல்லியமாக இதுதான். அந்த வகையில் பெரிய சங்கராச்சாரி மற்றும் ஆட்சிக்கு முந்தைய ஆர்.எஸ்.எஸ் கூட்டம் தன்னளவிலேயே உழைக்கும் மக்களுக்கு எதிரான பார்ப்பன பாசிசத்தை கொள்கையாகவும், மதமாகவும், சடங்காகவும் கொண்டிருந்ததார்கள். இந்த ஒடுக்குமுறை அரசியலை விடவா ஜெயேந்திரனது பாலியல் ஒழுக்கம் கீழானது? இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்கிறோம். ஒன்றின் வெளிப்பாடு மற்றதை இல்லை என்றோ உயர்ந்தது என்றோ ஆக்கிவிடாது. ஆயினும் இந்த எளிய உண்மையை ஜெயமோகன்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
மக்களுக்கான ஜனநாயகத்தை மறுப்பதால்தான் ஞானிகள், மடங்கள், அற்பவாத இலக்கியவாதிகளின் இருப்பு கருத்தாலும், நடைமுறையாலும் தனது வம்படியான மேல் இருப்பை தக்க வைத்துக் கொள்கிறது. அப்படித்தான் இவர்களது அகங்காரமே நீதிமன்றமாகவும், தன்னிலையே கேள்விக்கு அப்பாற்பட்டும், கருத்தே எதிர்க்கப்படக்கூடாததாகவும் தொழிற்படுகின்றன. அதனால் சமூகத்தின் பரந்துபட்ட செயல் துடிப்பில் வைத்து இவர்கள் எப்போதும் தங்களை விமரிசனம் செய்து கொள்ள மாட்டார்கள். ஆகவேதான் இத்தகைய ஞானிகளை நாம் மட்டுமே புரிந்து கொள்ள வேண்டுமே அன்றி நம்மை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது பாமரத்தனம் என்று ஜெயமோகன் நீண்ட காலமாக ஓதுகிறார். பார்ப்பனியத் திமிரின் இலக்கிய சாட்சியாக அவர் நீடித்திருப்பதன் தத்துவம் இதுதான்.

சைவ ஆதீனங்கள் – பார்ப்பனியத்தின் பங்காளிகள்!

ஆக நித்தியானந்தாவை மட்டம் தட்டும் போக்கில் ஜெயேந்திரனை கண்டு கொள்ளாமல் விடுவதில் பார்ப்பனிய ஆதிக்கமும், அடிமைத்தனமும் நிச்சயமாக இருக்கிறது என்கிறோம். இதனால் சைவ ஆதீனங்கள் அனைத்தும் பார்ப்பனியத்தை எதிர்க்கிறது என்பதல்ல. சொல்லப் போனால் இவர்களும் பார்ப்பனியத்தின் பிரச்சார பீரங்கிகிகள்தான். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை எதிர்க்கும் பார்ப்பன சிவாச்சாரியர்களுக்கு சைவ ஆதீனங்கள்தான் தோள் கொடுத்தார்கள். கருவறையில் தமிழ் மொழி கூடாது என்பதையும் இவர்கள்தான் முன்னின்று பேசினார்கள். அந்த வகையில் இவர்களது பார்ப்பனிய கிரைம் ரிகார்டு நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது. இவர்களது கோவில்களில் கூட பார்ப்பனர்கள்தான் புரோகிதர்களாக உள்ளனர்.
பார்ப்பனியத்தின் சமூக அடக்குமுறைக்கு மாற்றாக வந்த சமண புத்த மதங்களை இரத்தத்தால் அழித்த வரலாற்றில் ஆதீனங்களுக்கும் இடமுண்டு. சமண துறவிகளை கழுவிலேற்றிக் கொன்ற திருஞான சம்பந்தர்தான் மதுரை ஆதீனத்தின் ஸ்தாபகராம். எனில் கொலைகார சம்பந்தரை விட குஷால் பேர்வழி நித்தியானந்தா எவ்வளவோ மேலில்லையா? அல்லது அந்த கொலைக்கும் இந்த மன்மதக் கலைக்கும் தொடர்பில்லையா? பெண்ணாசையை விட ஒரு முழு சமூகத்தையே ஆட்டிப்படைக்கும் ஆசை பேராசை இல்லையா?
ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திற்கு தேவைப்படும் உதவிகளையும் இந்த ஆதினங்கள் கண்ணும் கருத்துமாக செய்துதான் வருகின்றனர். குன்னக்குடி போன்ற ஒரிரு விதிவிலக்குகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் பார்ப்பன ஆதிக்கத்தின் தளகர்த்தர்களாகத்தான் அனைத்து ஆதீனங்களும் இருக்கின்றனர். இங்கும் கூட சைவ வேளாளர் சாதிகளைச் சேர்ந்தோர் மட்டும்தான் தம்பிரான்களாகவும், ஆதீனமாகவும் வர முடியும். தற்போது நித்தியானந்தா விவகாரத்தில் மரபு என்ற பெயரில் இதைத்தான் எழுப்புகிறார்கள்.
நித்தியானந்தா-மதுரை ஆதீனம் மீட்புக் குழு
ஆதீனம்! தீர்ப்ப மாத்திச் சொல்லு! இப்படிக்கு, நெல்லைக்கண்ணன், அர்ஜூன் சம்பத், முருகன்ஜி , மதுரை ஆதீனம் மீட்புக் குழு!

சைவப் பிள்ளைதான் ஆதீனமென்றால், மற்றவர்கள் வேசி மக்களா?

அதாவது சைவ வேளாளர், சைவ முதலியார், சைவ செட்டியார் சாதிகளைச் சேர்ந்தோர்தான் ஆதினமாக வரமுடியுமாம். நித்தியானந்தா ஆற்காடு முதலியார் என்பதால் தகுதியில்லை என்கிறார்கள். அர்ஜூன் சம்பத் கும்பலோடு இணைந்திருக்கும் நெல்லைக் கண்ணன் போன்றோர் இதை ஒரு பெரிய நல்லொழுக்க விசயமாக திரும்பத் திரும்ப ஓதுகின்றனர். ஆனாலும் நித்தியானந்தா தொண்டை மண்டல முதலியார்தான், தகுதியுள்ளவர்தான் என்று எக்சிஸ்டிங் மதுரை ஆதினம் ஓதியபடியே வாதாடுகிறார்.
சங்கர மடத்திற்கு பார்ப்பனர்கள், சைவ ஆதீனங்களுக்கு சைவ வேளாளர்கள் என்பதெல்லாம் மரபோ மண்ணாங்கட்டியாகவோ இருக்கட்டும். இவையெல்லாம் மற்ற ‘இந்து’க்களை இழிவு படுத்துகிறது என்று எவருக்குமே தோன்றவில்லை ஏன்? பூணூல் பார்ப்பானும், விபூதி சைவப் பிள்ளையும்தான் ‘இந்து’க்களுக்கு மத குருக்களாக வர முடியும் என்றால் அங்கே மானமுள்ள ‘இந்து’வுக்கு என்ன வேலை? இந்து முன்னணியின் பார்ப்பனிய ஆதிக்கத்திற்காக பிரிந்து சென்றதாக கூறிக் கொள்ளும் இந்து மக்கள் கட்சி தற்போது அந்த ஆதிக்கத்தை சைவப் பிள்ளைக்கு மாற்றித் தரத் துடிப்பது ஏன்?
சக்கலியரும் சங்கராச்சாரியாகலாம், பறையரும் ஆதீனமாகலாம் என்று கேட்க வேண்டிய காலத்தில் மரபின் பெயரால் உழைக்கும் மக்களை இவர்கள் ஆதிக்கம் செய்யவே துடிக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு துலக்கமான சான்று. நித்தியானந்தாவும் இந்த மரபை மீற விரும்பவில்லை. தானும் சைவ வேளாளர் பிரிவைச் சேர்ந்தவர்தான் என்று உறவினர்களை நிறுத்தியே கேட்கிறார். ஒரு வேளை அவர் சைவ வேளாளர் பிரிவுக்குள் வரவில்லை என்றாலும் மற்ற ஆதினங்கள் என்ன செய்ய முடியும்? சாதி குறித்த நிரூபிக்குமாறு ஒரு சிவில் வழக்கு போட்டால் அது கீழிருந்து சுப்ரீம் கோர்ட்டு போய் பைசல் ஆவதற்குள் நித்தியானந்தாவின் பேரனே ஆதீனமாகலாம். அல்லது நித்தியும் அவரது உறவினர்களும் சைவ வேளாளர்தான் என்று ஒரு சான்றிதழை பெறமுடியாதா என்ன?
இத்தகைய குற்றச்சாட்டுகளையெல்லாம் நித்தியானந்தா விரும்பவே செய்கிறார். பாலியல் தவிர்த்த மற்ற விவகாரங்களை பெரிது படுத்தப்படுமானால் அது அவருக்கு உதவியாகத்தான் இருக்குமென்பது தெரியும். நித்தியானந்தா மதுரை ஆதீனமாக நிலை பெற்று கார்ப்பரேட் நிறுவன உத்தியால் பிரபலமாக்கி விட்டார் என்றால் ஏனைய வவ்வால் புகழ் ஆதீனங்கள் கீர்த்தியை இழந்து விடுமென்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது. இதை நித்தியானந்தாவே குறிப்பிடுவது சுவாரசியமான ஒன்று. இவர்களது குழாயடிச் சண்டைக்கு இப்படியும் ஒரு கோணமிருக்கிறது.
இந்நிலையில்தான் நித்தியை எதிர்க்கும் ஆதீனங்களும், அர்ஜூன் சம்பத் கும்பலும் மயிறுப் பிரச்சினையை மரபுப் பிரச்சினையாக மாற்றி சண்டமாருதம் செய்கிறார்கள். உண்மையில் இந்த மரபின் அடிப்படை என்ன?
- தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக