சனி, 26 மே, 2012

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பதாக ஜெ., புகார்

சென்னை:மண்ணெண்ணெய் ஒதுக்கீடு விஷயத்தில், மத்திய அரசு வேண்டுமென்றே தமிழக மக்களை வஞ்சித்து விட்டதாக, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருப்பதாவது: தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க, மாதம் ஒன்றிற்கு, 65,140 கி.லி., மண்ணெண்ணெய் தேவைப் படுகிறது. ஆனால், 44,580 கி.லி., மட்டுமே ஒதுக்கப் பட்டது.
மேலும் குறைப்பு:மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை தமிழகத்திற்கு உயர்த்தி வழங்கக்கோரி, கடந்தாண்டு ஜூனில், நான் கடிதம் எழுதியிருந்தேன்.
தொடர்ந்து, அதே மாதம் 14ம் தேதி, டில்லியில் நேரில் சந்தித்தும், கோரிக்கை மனு அளித்தேன். தமிழக அரசு மீது நியாயமற்ற முறையில், மத்திய அரசு நடந்து கொள்வது குறித்தும், 2011 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், 44,580 கி.லி., ஒதுக்கியுள்ளதையும் சுட்டிக் காட்டியிருந்தேன்.ஆனால், தற்போது எவ்வித காரணமும் இல்லாமல், மண்ணெண்ணெய் ஒதுக்கீடு மேலும் குறைக்கப்பட்டு, இந்தாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், 39,429 கி.லி., மட்டுமே ஒதுக்கப் பட்டு உள்ளது.

நியாயமில்லை: தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்கள் மற்றும் நகரங்களில் வாழும் ஏழை மக்கள், ரேஷன் மண்ணெண்ணெயை மட்டுமே நம்பியுள்ளனர். அ.தி.மு.க.,வை ஆட்சியில் அமரவைத்து விட்டனர் என்பதற்காக, மண்ணெண்ணெய் அளவை குறைத்து, தமிழக மக்களை மத்திய அரசு வஞ்சிப்பதில், எந்த நியாயமும் கிடையாது.தமிழகத்தின் மண்ணெண்ணெய் தேவையில், 50 சதவீதத்தை குறைத்திருப்பது ஏற்றுக் கொள்ள கூடியதும், விரும்பத்தக்கதும் அல்ல. எனவே, மண்ணெண்ணெய் ஒதுக்கீடு விஷயத்தில் மறுபரிசீலனை செய்து, நியாயமான முறையில் 65,140 கி.லி., ஒதுக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம், 52,806 கி.லி., ஒதுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக