செவ்வாய், 29 மே, 2012

பெட்ரோல் தட்டுப்பாடு: சென்னைக்கு இன்று ரெட்டி வந்திருந்தால், சட்னி!

Viruvirupu
இன்றைக்கு சென்னையில் நாடாளுமன்ற தேர்தல் நடந்திருக்க வேண்டும். அல்லது மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் ஒன்றாவது நடந்திருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று யாராலும் ஊகிக்க முடியாது.
வாரத்தின் முதலாவது தினத்தின் ஆபீஸ் நேரத்தில், மக்கள் கைகளில் பாட்டில்களுடன் வீதிகளில் அலைந்து கொண்டிருந்தார்கள். நகரில் இருந்த சுமார் 75 சதவீதமாக பெட்ரோல் பங்குகள், “ஸ்டாக் இல்லை” என்ற போர்ட் சகிதம் காணப்பட்டன.
பெட்ரோலுக்காக வீதி வீதியாக வாகனத்தில் அலைந்தவர்கள், வாகனங்களில் பெட்ரோல் தீர்ந்துவிடவே அவற்றை வீதியோரமாக நிறுத்திவிட்டு, கையில் பாட்டில்களுடன், விதியை நொந்தபடி வீதிகளில் அலைந்து கொண்டிருந்தார்கள். எந்த பெட்ரோல் பங்க் உரிமையாளரும், ஸ்டாக் வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்பதே, தட்டுப்பாட்டுக்கு காரணம்.

ஆனால், பெட்ரோல் உரிமையாளர் சங்கம் வேறு ஒரு கதை கூறுகிறது. சப்ளை சரியாக இல்லாத காரணத்தால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் அவர்கள். அப்படியும் ஒரு காரணம் உள்ளது என்பது உண்மைதான். ஆனால், அந்தக் காரணத்தால், 80 சதவீத பங்குகளில் பெட்ரோல் தீர்ந்துபோக வாய்ப்பில்லை.
இது பெரும்பாலும், பெட்ரோல் பங்க் உரிமையாளர்களால் ஏற்படுத்தப்பட்ட தட்டுப்பாடு. அவர்களையும் குறை கூற முடியாது.
மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தியதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நிலைமை மிரட்டலாக இருக்கவே, பெட்ரோல் விலையை சற்று குறைப்பதை தவிர மத்திய அரசுக்கு வேறு வழி கிடையாது என்பது பாமரனுக்கும் புரிகிறது. அது பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு புரியாதா?
எந்த நிமிடமும் பெட்ரோல் விலை குறைப்பு அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அப்படி பெட்ரோல் விலை குறைக்கப்பட்டால், பங்க் உரிமையாளர்கள் இப்போது அதிக விலை கொடுத்து வாங்கும் பெட்ரோலை, குறைத்து விற்க வேண்டிய நிலை ஏற்படும். நஷ்டம் ஏற்படும். இதனால், பெட்ரோலை வாங்கி விற்க பங்க் உரிமையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
தற்போது இருப்பு உள்ள பெட்ரோலை மட்டும் சில பங்க்கள் விற்கின்றனர். நாளைக்கே அதுவும் தீர்ந்து போனால், நிலைமை இன்னமும் மோசமாகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக