புதன், 30 மே, 2012

சிறுபான்மையினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கியது செல்லாது: ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பு

ஹைதராபாத்: கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சிறுபான்மையினருக்கு 4.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவை ஆந்திர உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு 4.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று 2011-ம் ஆண்டில் வழிகாட்டு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது.
இதை எதிர்த்து ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் பிற்படுத்துப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆர். கிருஷ்ணய்யா வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி மதன் பி லோகுர், நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

கிருஷ்ணய்யா சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராமகிருஷ்ண ரெட்டி, உயர் நீதிமன்றத்தின் உத்தரவு, ஐ.ஐ.டி. உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஏற்கெனவே நடைபெற்றிருக்கும் மாணவர் சேர்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாதிடப்பட்டது.

விசாரணையின் முடிவில் தீர்ப்பளித்த நீதிபதிகள், மதத்தை அடிப்படையாக வைத்து மட்டுமே இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. வேறு எந்த தெளிவான அம்சமும் பரிசீலிக்கப்படவில்லை. இந்த விஷயத்தை மிகச் சாதாரணமாக மத்திய அரசு கையாண்டிருக்கிறது. மதச் சிறுபான்மையினர் அனைவரும் ஒரேவகையான இனக்குழுக்கள் என்பதாகவோ, அவர்கள் சிறப்புச் சலுகை தேவைப்படும் அளவுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதாகவோ நிரூபிக்கும் எந்தவிதமான ஆதாரத்தையும் மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஒரேதன்மை கொண்ட இனக்குழுக்களாக இயங்கவில்லை. அவர்கள் பலவகையான குழுக்களாக இருக்கிறார்கள் என்று கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக