திங்கள், 28 மே, 2012

ஜெகன் கைது: தாயார் திடுக் புகார் “இது சோனியா காந்தியின் லீலை”

Viruvirupu
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தார் (2,000 கோடி என்பது கணிப்பு. 365 கோடிக்கு அவர் பெயரில் சொத்து உள்ளது) என்ற குற்றச்சாட்டில், மூன்று நாட்கள் விசாரித்தபின் பின், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, நேற்று இரவு சி.பி.ஐ.-யால் கைது செய்யப்பட்டார். ஜெகன் கைது செய்யப்படுவதற்கு சற்றுமுன், அவரை கைது செய்யும் விஷயத்தை சி.பி.ஐ., நாடாளுமன்ற சபாநாயகருக்கும், மத்திய மாநில அரசுகளுக்கும் முறைப்படி அறிவித்தது.ஜெகன் குற்றவாளி என்பதால் கைது செய்யப்படவில்லை.
இதெல்லாம் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியின் லீலைதான்” என்று கருத்து தெரிவித்துள்ளார், ஆந்திர முன்னாள் முதல்வர் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மனைவியும், ஜெகன் மோகன் ரெட்டியின் தாயாருமான ஒய்.எஸ்.விஜயலக்ஷ்மி.
ஜெகன் வீட்டில் இல்லாவிட்டாலும், தமது மருமகள் (ஜெகனின் மனைவி) பாரதி ரெட்டியும், தாமும், சூறாவளி தேர்தல் பிரசாரம் செய்யப் போவதாகவும் அந்த அம்மணி தெரிவித்துள்ளார். ஆந்திராவில் வரும் 12-ம் தேதி, 18 சட்டமன்ற தொகுதிகளிலும், 1 நாடாளுமன்ற தொகுதியிலும் இடைத் தேர்தல்கள் நடக்கவுள்ளன.
சோனியா காந்திக்கு ஜெகன்மீது என்ன கோபமாம்? சோனியாவின் விருப்பத்துக்கு எதிராக ஜெகன் ஆந்திராவில் யாத்திரை (Odarpu yatra) சென்றார் என்கிறார் தாயார்.
தாயாரால் அப்பாவியாக சித்தரிக்கப்படும் ஜெகன் மோகன் ரெட்டி, தமது தந்தை முதல்வராக இருந்தபோது, ஆட்சியில் சலுகை பெற்று தொழில் செய்த வகையில் ஏராளமான அளவில் சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. விசாரணைக்காக கடந்த 25 மற்றும் 26-ம் தேதிகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் முன் ஆஜரான ஜெகனிடம், இரண்டு நாட்களும் 15 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது.
மூன்றாவது நாளாக நேற்று, ஹைதராபாத் தில்குஷான் விருந்தினர் மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முன், ஆஜரானார் ஜெகன் மோகன். எட்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.
விசாரணை நடைபெற்ற போது, விருந்தினர் மாளிகையைச் சுற்றிலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அத்துடன், ஜெகனிடம் விசாரணை நடைபெறும்போது, அவரது ஆதரவாளர்கள் அட்டகாசம் செய்யலாம் என்ற தகவல் கிடைத்ததால், மாநிலம் முழுவதும் நேற்று போலீசார் உஷார் படுத்தப்பட்டிருந்தனர். பல நகரங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஜெகனின் வீட்டைச் சுற்றிலும் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். ஜெகனின் சொந்த மாவட்டமான கடப்பாவில், விரைவு அதிரடிப் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பல நகரங்களுக்கான பஸ் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தது.
விருந்தினர் மாளிகையில், எட்டு மணி நேரத்திற்கு மேலாக நடந்த விசாரணைக்குப் பின், இரவு 7 மணியளவில் ஜெகன் மோகன் ரெட்டி கைது செய்யப்பட்டார் என்ற தகவலை, சி.பி.ஐ. தகவல் தொடர்பாளர் வெளியிட்டார்.
போலீஸ் பாதுகாப்பு இறுக்கமாக உள்ளதால், ரெட்டிகாரு கைது செய்தி வெளியாகியும், மாநிலத்தில் இந்த நிமிடம்வரை எதுவும் பற்றி எரியவில்லை! (அவருடைய வயிறு விதிவிலக்காக)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக