செவ்வாய், 22 மே, 2012

பயோ டீசல் தயாரிப்பு திட்டம் தோல்வி: தணிக்கை அறிக்கை தகவல்

சென்னை: காட்டாமணக்கு விதை மூலம் நுண்ணுயிர் டீசல் (பயோ டீசல்) தயாரிக்கும் திட்டம் தோல்வியடைந்து உள்ளது என, தணிக்கைத் துறை அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.
மாற்று எரிசக்தி:காட்டாமணக்கு நாற்றுகளை வளர்த்து, அதன் விதைகளை சேகரித்து, பயோ டீசல் தயாரிப்பதன் மூலம், விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியிலான வருமானத்தை உருவாக்குவது, மத்திய அரசின் திட்டம். பெட்ரோலியப் பொருட்களை முழுவதும் நம்பி இருப்பதற்கு மாறாக, மாற்று எரிசக்திகளை ஊக்குவிக்க உருவான திட்டம்.தமிழகத்தில் 3.50 கோடி நாற்றுகளை நட்டு, விளைச்சல் பெற, 10.50 கோடி ரூபாயை மானியத் தொகையாக, மத்திய அரசு, 2006ம் ஆண்டு மார்ச்சில் வழங்கியது.இத்திட்டத்தை கண்காணிக்கும் பொறுப்பு, தமிழகத்தில் உள்ள, 26 மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகளிடம் வழங்கப்பட்டது.


2.80 கோடி நாற்றுகள்:திட்டத்துக்கான நிதியை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகளுக்கு அளித்ததோடு, திட்ட செயல்முறை வழிகாட்டி குறிப்புகளையும், மத்திய அரசு அளித்துள்ளது.காட்டாமணக்கு நாற்றுகளை வளர்க்கும் பணியை, வன மேம்பாட்டு முகமைகள் எடுத்துக் கொண்டன. வன மேம்பாட்டு முகமைகள் வளர்த்த, 2.80 கோடி நாற்றுகளில், 1.40 கோடி நாற்றுகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை எடுத்து, ஊராட்சிகளுக்கு வினியோகம் செய்தது. காடுகளின் விளிம்பில் நடுவதற்காக, 1.36 கோடி நாற்றுகளை, வனத்துறை எடுத்துக் கொண்டது. மீதமிருந்த, நான்கு லட்சம் நாற்றுகள், தனியார்களுக்கு விற்பனை செய்யப் பட்டு உள்ளன.

பராமரிப்பு நிலை:நாற்றுகளின் உயிர் பிழைக்கும் நிலை குறித்து, தணிக்கைத் துறை சேகரித்த தகவல்களின்படி, 10 மாவட்டங்களில், நாற்றுகளின் உயிர் பிழைக்கும் விதம், பூஜ்ஜியம் முதல் 75 சதவீதம் வரை இருந்துள்ளது. நடவுப் பணிகளில் உரிய அணுகுமுறையைப் பின்பற்றாமல், நாற்றுகள் வளரவில்லை. மதுரை, தேனி மாவட்டங்களைத் தவிர, எந்தவொரு மாவட்டத்திலும், காட்டாமணக்கு நாற்றுகள் உயிர் பிழைப்பு நிலை குறித்து, பதிவுகள் ஏதுமில்லை. இதுதவிர, காட்டாமணக்கு தோட்டங்களை பராமரிப்பது, எண்ணெய் எடுப்பதற்காக விதைகளை சேகரிப்பது ஆகியவற்றுக்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகளோ, வனத்துறையோ எந்த திட்டத்தையும் வைத்திருக்கவில்லை. பயோடீசல் திட்டம் நோக்கம் வெற்றி காண தொடர் நடவடிக்கைகளோ, முறையான அணுகுமுறையோ இல்லை என்றும், தணிக்கைத் துறை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக