வியாழன், 17 மே, 2012

முதல்வர் காலில் அமைச்சர் விழ, விகடனில் இருந்து கீழே விழுந்த மதன்!


Viruvirupu,

விகடனில் இருந்து மதன் நீக்கப்பட்டிருக்கிறார். காரணம், விகடனில் அவர் எழுதிவரும் கேள்வி-பதில் பகுதியில் வெளியிடப்பட்ட ஒரு போட்டோ. காலில் விழுவது தொடர்பாக மதன் எழுதிய ஒரு பதிலுக்கு, முதல்வர் ஜெயலலிதாவின் காலில் அமைச்சர் ஒருவர் விழும் போட்டோ பிரசுரிக்கப் பட்டிருந்தது.
தமது கேள்வி-பதில் பகுதியில் இந்த போட்டோ பிரசுரமானது ஏன் என்று ஜெயா டி.வி.-யின் தலைமை கேட்டால், அதற்கு என்ன பதில் சொல்வது என்று அங்கலாய்த்து, விகடன் நிர்வாகத்துக்கு மதன் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
“இதோ, இந்தப் பதிலை ஜெயா டி.வி.யில் கொண்டுபோய்  காட்டுங்கள்” என்று, மதனுக்கான பதிலை சஞ்சிகையிலேயே பிரசுரித்து விட்டது விகடன்.
அந்தப் பதிலில், “இனி மதனின் கேள்வி-பதில், மற்றும் காட்டூன்கள் விகடனில் இருக்காது” என்று எழுதப்பட்டுள்ளது.
அறிவுபூர்வமான விஷயங்களையும் விகடனில் எழுதிவந்த மதன், விகடனுக்கு எழுதிய கடிதம் யாரை மிக மோசமாகச் சித்தரித்திருக்கிறது என்றால், ஜெயா டி.வி. தலைமையைதான். மதனின் வார்த்தைகள், “அவர்கள் (ஜெயா டி.வி) அவ்வளவாக விஷயம் தெரியாத ஆட்கள்” என்பதுபோல சவுண்ட் பண்ணுகிறது.
இதோ, மதனின் கடிதத்தைப் பாருங்கள்:

“ஜெயா டி.வி-யில் நான் சினிமா விமர்சனம் செய்துவருகிறேன். இந்நிலையில், அவர்கள் அந்தப் புகைப்படத்தை ஹாய் மதன் பகுதியில் வெளியிட்டதற்கு நான்தான் காரணமோ என்று தவறாக நினைத்துக் கொள்ள மாட்டார்களா? என்னிடம் ஜெயா டி.வி-யின் தலைமை அதுபற்றி விளக்கம் கேட்டால், ‘அந்த புகைப்படம் வெளிவந்ததற்கு நான் காரணமல்ல’ என்று இதன் பின்னணியை விவரமாக விளக்க வேண்டி வராதா? அந்த தர்மசங்கடம் எனக்குத் தேவைதானா? முப்பதாண்டு காலம் விகடன் நிறுவனத்துக்காக உழைத்த எனக்கு இப்படியரு பிரச்னையை ஏற்படுத்துவது நேர்மையான, நியாயமான செயல்தானா என்பதை தாங்கள் சிந்திக்க வேண்டும்.
முக்கியமான பிரச்னைகள் எத்தனையோ சந்தித்துக்கொண்டிருக்கும் தமிழக முதல்வரிடம் இதற்காக அப்பாயின்ட்மென்ட் கேட்டு, அவரைச் சந்தித்து, நான் செய்யாத தவறுக்கு விளக்கம் தந்துகொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை எனக்கு ஏற்படுத்துவது முறையா என்று சிந்திக்க வேண்டுகிறேன்.
…வரும் இதழிலேயே ‘புகைப்படங்கள், லே – அவுட்டுக்கு மதன் பொறுப்பல்ல’ என்ற விளக்கத்தையாவது வெளியிட்டால், நியாயம் காப்பாற்றப்படும். அதை வரவிருக்கும் இதழிலேயே செய்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்”
ஜெயா டி.வி. என்பது ஒரு மளிகைக் கடையல்ல. அதுவும் ஒரு மீடியா நிறுவனம். அந்த மீடியா நிறுவனத்தை நடத்தும் தலைமைக்கு, மற்றொரு மீடியாவான பத்திரிகையில், எழுத்து, லே-அவுட், எல்லாம் வேறுவேறு என்ற பேசிக்-கன்செப்ட் இயல்பாகவே தெரிந்திருக்க வேண்டும். தெரிந்திராவிட்டால், புரிய வைப்பது அவ்வளவு சிரமமாக இருக்காது. It’s no big deal.
சராசரியைவிட அதிகமான IQ உடைய மதனால், இந்த சிம்பிள் கன்செப்டை ஜெயா டி.வி. தலைமைக்கு புரிய வைக்க முடியவில்லை என்றால், ஜெயா டி.வி. தலைமையின் IQ பற்றியல்லவா சந்தேகம் எழ வைக்கிறது மதனின் கடிதம்?
சரி, அதை விடுங்கள். 30 ஆண்டுகளாக மீடியா துறையில் இருக்கிறார் மதன். அவருக்கென்று ஒரு credibility இருக்கிறது. Credibility இருப்பதால்தான், ஜெயா டி.வி.-யில்கூட அவரது சினிமா விமர்சனம் இடம்பெறுகிறது.
அப்படியான credibility உடைய ஒருவர், “அந்த போட்டோ பிரசுரமானதற்கும், எனக்கும் தொடர்பில்லை” என்று ஒற்றை வாக்கியத்தில் சொன்னால், ஜெயா டி.வி. தலைமை அதை நம்ப மாட்டார்கள் என்று மதன் ஏன் நினைக்கிறார்?
தமது credibility மீது நம்பிக்கையின்மையா, அல்லது ஜெயா டி.வி. தலைமையின் ability மீது சந்தேகமா?
மொத்தத்தில், மதன் தனது கடிதத்தில் “ஜெயா டி.வி.யில் அவ்வளவாக புரிந்துணர்வு உள்ள ஆட்கள் இல்லை” என்று மறைமுகமாக எழுதியுள்ளார். ஸ்கூலில் மெடிக்கல் சர்ட்டிஃபிக்கேட் கொடுப்பது போல, “ஆதாரம் ஒன்றை விகடனில் பிரசுரித்தாவது அவர்களுக்கு புரிய வையுங்கள்” என்று கேட்டிருக்கிறார்.
சரி. மதன் அச்சம் கொள்ளும் ஜெயா டி.வி. தலைமைக்கு, இப்படியொரு சந்தேகம் ஏற்படாதா?  “முதல்வர் காலில் விழும் போட்டோ, அவ்வளவு மோசமான விவகாரம் என்று மதன் ஏன் நினைக்கிறார்? முதல்வரின் காலில் பப்ளிக்காக அமைச்சர்கள் விழுந்து எழுகிறார்களே? அது ஒரு தப்பான காரியம், அல்லது கேலிக்குரிய நடவடிக்கை என்று மதன் நினைக்கிறாரா” என்ற சந்தேகம் ஜெயா டி.வி. தலைமைக்கு வந்தால் என்னாகும்?
மதனின் நிலைமை, விகடனில் போட்டோ பிரசுரமானதைவிட மோசமாக அல்லவா போய்விடும்!
விகடன் என்ன சொல்கிறது?
மதன் நமக்கு எழுதியிருக்கும் இந்தக் கடிதம், தவிர்க்க முடியாத சில நெருக்கடி களுக்கும் நிர்பந்தங்களுக்கும் அவர் சமீப காலமாக ஆளாகி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.
‘ஹாய் மதன்’ பகுதியில் வாசகர்கள் கேட்ட கேள்வியிலோ, மதன் அளித்த பதிலிலோ நேரடி வார்த்தைகளில் இடம் பெறாத – அதே சமயம், அந்தக் கேள்வி – பதிலுக்கு மேலும் வலிமையும் சுவாரஸ்யமும் சேர்க்கக்கூடிய படங்களை இதற்கு முன் ஏராளமான சந்தர்ப்பங்களில் ஆசிரியர் குழு சேர்த்துள்ளது. அப்போதெல்லாம், எந்தக் காரணங்களைக் காட்டியும் ஒருபோதும் எந்த ஆட்சேபமும் அவர் தெரிவித்ததே இல்லை.
அதேபோல், ‘இது பொது அறிவுப் பகுதி மட்டுமே’ என்று இப்போது மதன் குறிப்பிடும் ‘ஹாய் மதன்’ பகுதியில் அரசியல் மற்றும் சினிமா பற்றிய நேரடியான, காரசாரமான பதில்களை அவர் தொடர்ந்து இதழ் தவறாமல் அளித்திருப்பதை வாசகர்களும் நன்கு அறிவார்கள். இப்போது திடீரெனத் தன் நிலைப்பாட்டை அவர் மாற்றிக்கொள்வதற்கான காரணம், அவருடைய கடிதத்திலேயே உள்ளது.
இதையெல்லாம் பார்க்கும்போது… தற்போது அவர் இருக்கின்ற சூழ்நிலையில், ‘ஹாய் மதன்’ பகுதியை மட்டும் அல்ல… கார்ட்டூன்களையும்கூட நடுநிலையோடு படைப்பது அவருக்குச் சாத்தியம் ஆகாது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு தரப்பைப் பற்றிய நியாயமான விமரிசனங்களையோ, புகைப்படங் களையோ தவிர்த்துவிட்டு… செய்திகளையும் கருத்துக்களையும் நீர்க்கச் செய்வது வாசகர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்றே விகடன் கருதுகிறான்.
எனவே, இந்த இதழ் முதல் திரு. மதனின் கேள்வி – பதில் பகுதியும் அவருடைய கார்ட்டூன்களும் விகடனில் இடம் பெறாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இதைவிட சரியான, நேர்மையான முடிவை, வேறு எந்த மீடியா நிர்வாகத்தாலும் எடுக்க முடியாது.
இதிலிருந்து தெரிய வரும் நீதி: விகடனால் பல மதன்களை உருவாக்க முடியும். ஆனால், மதனால் ஒரு விகடனை உருவாக்க முடியாது!

-விறுவிறுப்பு.காமுக்காக, ரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக