செவ்வாய், 1 மே, 2012

பிரதமரின் ஆலோசகர் டி.கே.நாயரின் விதிமுறை மீறி வீட்டு மனை

TKA Nair
 
பெங்களூர்: பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் எனப்படும் பி.இ.எம்.எல். நிறுவன ஊழியர்களுக்கான வீட்டு மனை ஒதுக்கீட்டில் பிரதமரின் ஆலோசகர் டி.கே.நாயரின் உறவினருக்கும் குடும்ப நண்பருக்கும் விதிமுறைகளை மீறி வீட்டு மனை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லையே என்று நாயர் மழுப்பலாக விளக்கமளித்துள்ளார்.
பி.இ.எம்.எல். என்றும் பெமல் என்றும் அழைக்கப்படும் அரசுத்துறை நிறுவன ஊழியர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட வீட்டுவசதி கூட்டுறவுச் சங்கம் பெங்களூரில் 2008-ல் விற்ற வீட்டு மனைகளில் டி.கே.ஏ. நாயரின் சகோதரி மகள் ஏ. பிரீத்தி பிரபா, குடும்ப நண்பர் உமாதேவி நம்பியார் ஆகியோருக்கு விற்கப்பட்டன.
இந்த மனைகள் பெமலில் வேலை செய்வோருக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டன. ஆனால் நிறுவனத்தின் ஊழியர்கள் அல்லாத 2 பெண்களுக்கு குறைந்த விலையில் மனை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றாவதாக ஒரு மனையும் வெளியாருக்கு விற்கப்பட்டது, அவரும் நாயரின் உறவினர் என்று பெமல் ஊழியர் பெரியசாமி புகார் செய்திருந்தார்.
இதைத் தொடர்ந்து வீட்டு மனைகளை சர்ச்சைக்குரிய இருவரும் ஒப்படைத்தனர். மூன்றாம் நபர் ஒப்படைக்கவில்லை. இந்த வீட்டு மனை விவகாரத்துக்கும் ராணுவத்துக்கு தாத்ரா வாகனங்களைக் கொள்முதல் செய்ததற்கும் ஒரு தொடர்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதாவது பி.இ.எம்.எல். தலைவராக உள்ள நடராஜன், தமது தாத்ரா ஊழலைக் கண்டுகொள்ளாமல் இருக்கவே பிரதமர் ஆலோசகர் நாயரின் உறவினர்களுக்கு வீட்டு மனைகளை லஞ்சமாக ஒதுக்கீடு செய்தார் என்பதுதான் பெரியசாமி போன்றோரின் புகார். ஆனால் நடராஜன் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஆனால் நாயரின் தொடர்பு இதில் தெளிவாக இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. அதேசமயம், இதுகுறித்து எந்த விவரமும் தங்களுக்குத் தெரியாது என்று காங்கிரஸ் கூறியுள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரஷீத் அல்வி கூறுகையில், எனக்கு இதுகுறித்து ஒன்றும் தெரியாது. விவரம் தெரிந்த பிறகே கருத்துக் கூற முடியும் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக