சனி, 19 மே, 2012

ஸ்டாலினை ‘அமுக்குவதில் ரகசியமாக All groups

ஸ்டாலின் திடீரென லண்டன் சென்றது ஏன்? கதை லேசாக புகைகிறது!!

Viruvirupu
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா வெளியே (ஜாமீனில்) வந்த விவகாரம் தி.மு.க. வட்டாரங்களில் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருந்த நிலையில், திடீரென அந்தப் பேச்சுக்களை அமுக்கும் விதத்தில், மற்றொரு விஷயத்தைப் பற்றி இப்போது பரபரப்பாக பேசத் துவங்கியுள்ளார்கள். ஸ்டாலின் லண்டனுக்கு சென்ற பின்னணி என்ன? என்பதே இந்த புதிய டாக்.
தி.மு.க.-வின் இரண்டாம் மட்ட தலைவர்களே இதைப் பற்றி தமக்கிடையே விவாதிக்கத் துவங்கியுள்ளதால், இதில் ஏதோ விவகாரம் உள்ளது என்றுதான் தெரிகிறது. இரு மாவட்ட செயலாளர்கள், ஒரு எம்.பி., ஒரு முன்னாள் அமைச்சர் (இவர் தற்போது எம்.எல்.ஏ.கூட அல்ல) ஆகியோர் சமீபத்தில் நெல்லையில் உள்ள தி.மு.க. வி.ஐ.பி. ஒருவரது வீட்டில் சந்தித்து, இந்த விவகாரம் குறித்து ‘ஏதோ’ மிக சீரியஸாக பேசியதாக ஒரு தகவல் உள்ளது.

ஸ்டாலின் லண்டன் சென்றது, அன்னைய தினம் மட்டும் சிங்கிள் லைன் நியூஸாக இருந்தது. அதன்பின் அதைப்பற்றி யாரும் வெளிப்படையாக பேசவில்லை. அப்படியிருந்தும், இதற்குள் அப்படி என்னதான் விவகாரம் இருக்க முடியும்?
தி.மு.க. வட்டாரங்களில் பேசினோம். அப்போது தெரிய வந்த விஷயம், ஸ்டாலின் லண்டன் சென்றது, மருத்துவ காரணத்துக்காகவும், ஓய்வு எடுப்பதற்கும் மட்டுமல்ல. இதில் வேறு விவகாரம் ஒன்றும் உள்ளது என்பதுதான்.
நாம் விசாரித்தவரை, ஸ்டாலினுக்கு உடல்நலம் தொடர்பான சில பிரச்னைகள் இருப்பது உண்மைதான். ஓயாத சுற்றுப்பயணங்கள் காரணமாக அவர் தளர்வடைந்திருந்த காரணத்தால், ஓய்வு எடுக்கும்படி டாக்டர் கூறியதும் நிஜம்தான். சில தினங்கள் குடும்பத்துடன் ஊட்டியில் ஓய்வெடுத்துவிட்டும் திரும்பியிருந்தார். லண்டன் சென்ற காரணங்களில் அதுவும் ஒன்றுதான்.
ஆனால், அது மட்டும் காரணமல்ல. கட்சிக்குள் சிக்கல் உள்ளது. கட்சித் தலைவர் கருணாநிதி மீது கோபமும் உள்ளது. அதனால்தான், சில நாட்களுக்காவது தமிழகத்தில் இருப்பதை தவிர்க்க விரும்பினார் என்கிறார்கள்.
கட்சிக்குள் தமக்கு எதிரான அணியில் இருந்த வெவ்வேறு ஆட்கள், ஒன்றாக சேர்ந்து காய் நகர்த்துவது அவருக்கு தெரிந்துள்ளது. வெளிப்படையாக பார்த்தால், அழகிரி குரூப், கனிமொழி குரூப், ராசாவின் ஆதரவாளர்கள் என எல்லா குழுக்களும் வேறு வேறாக நிற்பதுபோல தெரியும். ஆனால், ஸ்டாலினை ‘அமுக்குவது’ என்ற விஷயத்தில் இவர்கள் அனைவரும் ரகசியமாக கைகோர்த்து செயல்படுகிறார்கள் என்று அவர் தெரிந்து கொண்டார் என்கிறார், ஸ்டாலினுக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் ஒருவர்.
நெல்லையில் சந்தித்து டிஸ்கஸ் பண்ணியதாக கூறப்படும் நான்கு வி.ஐ.பி.-களில் ஒருவரான, தென்மாவட்ட மா.செ.-யுடன் எமக்குள்ள பரிச்சயம் காரணமாக அணுகி விசாரித்தோம். ஆரம்பத்தில் அப்படியொரு சந்திப்பே நடக்கவில்லை என்றவர், பின், “ஆமா.. சந்தித்து சும்மா பேசினோம். அதில் ஸ்டாலின் லண்டன் சென்ற விஷயமும் வந்தது. அவ்வளவுதான்” என்றார்.
இவர் அழகிரி ஆதரவாளர். அந்த சந்திப்பில் கலந்துகொண்ட நால்வருமே அழகிரியின் ஆட்கள். இவர்கள் நெல்லையில் சந்தித்து, ஸ்டாலின் லண்டன் சென்ற விஷயம் பற்றி ‘சும்மா’ பேசுகிறார்களா? அடேங்கப்பா!
பல இடங்களில் திரட்டிய தகவல்களில் இருந்து எமக்கு புரிந்த விஷயம், அழகிரி மிக சாமர்த்தியமாக ஸ்டாலினுக்கு எதிராக காய் நகர்த்துகிறார் என்பதுதான். ஸ்டாலின்மீது கோபத்தில் அல்லது வெறுப்பில் இருக்கும் ஆட்களை ஒரே அணியில் திரட்டுகிறார் அழகிரி. அதைப் பற்றித்தான் அழகிரி ஆட்கள் தமக்கிடையே கிசுகிசுத்துக் கொள்கிறார்கள்.
நாம் விசாரித்த தி.மு.க. வி.ஐ.பி. ஒருவர் இதை ஒப்புக்கொண்டார். “அழகிரி, திடீரென சிறைக்குச் சென்று ராசாவை சந்தித்தார். அடுத்த சில தினங்களில் ராசா பெயில் மனு தாக்கல் செய்து, வெளியே வந்தார். ராசா பெயிலில் வருவது தி.மு.க.-வின் சில பெரிய தலைகளுக்கு சங்கடமானது.
அதேபோல, ஸ்டாலினின் முன்னாள் சகா பரிதி இளம்வழுதியை அழகிரி சந்தித்தார். அதன்பின், பரிதி கருணாநிதியை சந்திக்க வைக்கப்பட்டார். பரிதியின் மகள் சந்தியாவின் திருமணத்துக்கு அழகிரி நேரில் வந்து இறங்கினார்.
கனிமொழி தரப்புடனும் அழகிரி ஏதோ பேசிக்கொண்டு இருக்கிறார். அதன்பின் கடந்த வாரத்தில் ஒருநாள் காலை விமானத்தில் டில்லியில் இருந்து சென்னை வந்த அழகிரி, கலைஞருடன் ஏதோ விவாதித்தபின், அன்று இரவே டில்லி புறப்பட்டு சென்றார். மறுநாள் டில்லியில், அழகிரியை தி.மு.க. எம்.பி. இளங்கோவன் சந்தித்தார். இளங்கோவன் கனிமொழியின் ஆதரவாளர். உள்ளே ஏதோ நடக்கிறது” என்றார் அந்த தி.மு.க. வி.ஐ.பி.
இந்த விபரமெல்லாம் ஸ்டாலின் காதுகளுக்கு வரவே, அவர் கருணாநிதியுடன் பொங்கித் தீர்த்துவிட்டார் என்கிறார்கள். “கட்சியை வளர்ப்பதற்காக மாவட்டம் மாவட்டமாக அலைவது நான். கட்சிக்குள் விமானத்தில் பறந்து பறந்து அரசியல் செய்ய அவர்களா? அவர்களை வைத்தே கட்சியை பலப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறிய கையுடன் ஸ்டாலின், லண்டன் புறப்பட்டுச் சென்றார் என்றும் கூறுகிறார்கள்.
ஆஹா… தி.மு.க.-வுக்குள் அடுத்த ரவுண்ட் கலாட்டா ஆரம்பமாகி விட்டது. நெல்லையில்கூட ரூம் போட்டு யோசிக்கிறாங்கப்பா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக