சனி, 26 மே, 2012

AIMS மருத்துவமனையில் இரட்டை அளவுகோலா?

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக ஜாதி ரீதியாக வேறுபாடு காட்டப்படுகிறது என்கிற பிரச்சினை நாடாளுமன்றத்தில் எதிரொலித்துள்ளது.
மக்களவையில் நேரமில்லா நேரத்தின்போது  அய்க்கிய ஜனதாதள உறுப்பினர் மங்கானிலால் மந்தல் பேசுகையில் அதிர்ச்சி தரும் சில தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
1) தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட் டோருக்கான பணியாளர் தேர்வு, இடஒதுக்கீட்டின்படி நடப்பதில்லை - கொல்லைப்புற வழியாக நடக்கிறது.
2) இம்மாணவர்களுக்கு உணவு வழங்குவதில்கூட வேறுபாடு காட்டப்படுகிறது என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் புனியா அவர்கள் கூறுகையில், மருத்துவர்களிடையே ஜாதி ரீதியான வேறுபாடு இருப்பது - பலரை தற் கொலைக்கு  தூண்டியுள்ளது. இது அவமானத் துக்குரியது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறிய அவர் உத்தரப்பிரதேசம் சத்ரபதி சாகுமகராஜ் மருத்துவக் கல்லூரியிலும் இதே போன்ற நிலை நீடிக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 26 மாணவர்களில் 24 மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சியையும் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் தாராசிங் கூறுகையில் நல்ல மதிப்பெண் பெற்று கல்லூரியில் சேர்ந்த மாணவர்களும்கூட தற் கொலைக்குத் தூண்டப்படுகின்றனர். செய்முறைத் தேர்வில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குப் பாரபட்சம் காட்டப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இவையெல்லாம் தெருமுனைகளில் கூறப்பட்டவை யல்ல; நாடாளுமன்றத்தில் மக்களின் பிரதிநிதிகளால் பகிரங்கமாக எடுத்துக் கூறப்பட்டவையாகும்.
சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்பட்டு 65 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், இந்நாட்டில் 25 விழுக்காட்டுக்கு மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான இந்தக் கொடுமை, அநீதி, பாரபட்சம் நீடிப்பது வெட்கப்படத்தக்கது அல்லவா?
இந்தப் பிரச்சினை இப்பொழுது மட்டுமல்ல; டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநராக வேணு கோபால்  என்ற பார்ப்பனர் இருந்தபோது இந்தப் பாரபட்சம் ஓகோவென்று கொடி கட்டிப் பறந்ததே! தாழ்த்தப்பட்ட மாணவர்களிடத்தில் உயர் ஜாதி பேராசிரியர்கள் எப்படியெல்லாம் ஓர வஞ்சனை காட்டுகிறார்கள் என்று கூறப்படவில்லையா! அந்தப் பிரச்சினைக்கு அப்பொழுதே தீர்வு காணப்பட்டு இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தால் இப்பொழுது அத்தகைய கொடுமைகள் நடப்பது பற்றி நாடாளுமன்றத்தில்   எழுப்பப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காதே!
ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உரிமை எளிதாக கிடைக்கப் பெற்றதல்ல! அவை போராடி போராடி பெறப்பட்ட உரிமை வாய்ப்புகள் என்பதை மறந்து விடக் கூடாது.
அப்படிப்பட்ட உரிமைகளை அவர்கள் அனுபவிக்கும் தருணத்தில் கைக்கு எட்டியது - வாய்க்கு எட்டப்படவில்லை என்கிற தன்மையில் உயர் ஜாதிப் பார்ப்பனர்கள் சட்ட விரோதமாக சமூகநீதியைச் சவக் குழிக்கு அனுப்பும் வகையில் பூணூல் வெறித் தனத்தோடு பாரபட்சம் காட்டுகிறார்கள் என்றால், இதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியுமா? சட்டத்தின் இரும்புக் கரம் கொண்டு படித்த இந்தக் குற்றவாளிகள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டாமா?
கிராமங்களில் தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை பற்றி நாம் குமுறுகிறோம். ஆனால் மருத்துவக் கல்லூரிகளிலேயேகூட நடக்கும் இந்த இரட்டை அளவுகோல்மீது என்ன நடவடிக்கை இதுவரை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த உயர்தட்டு இடங்களில் ஜாதிவெறியோடு நடந்து கொள்பவர்கள்மீது சட்ட ரீதியாகக் கொடுக்கப்படும் அடி, அது கிராமத்துத் தேநீர் கடை வரை எதிரொலிக்க வேண்டாமா?
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் குற்றச்சாற்றை வைத்து இருக்கிறார்கள். இவற்றின் மீது சம்பந்தப்பட்ட துறைகள் எடுக்கும் நடவடிக்கை களை இந்த உறுப்பினர்கள் அணுக்கமாகக் கண் காணிக்க வேண்டும். உரிய நடவடிக்கை இல்லை என்றால், பிரச்சினையை வீதிக்குக் கொண்டு வருவோம்! எச்சரிக்கை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக