சனி, 19 மே, 2012

செட்டாப் பாக்ஸ் மூலம் இனி 500 சேனல்கள்... சென்னையிலும் அரசு கேபிள்

 500 Channels Through Set Top Boxes Tn Govt
சென்னை: இனி தமிழகத்தில் 500 சேனல்கள் தெரியும் வகையில் அரசு கேபிள் ஒளிபரப்பு சேவையை வழங்கவிருக்கிறது. இதற்கான செட்டாப் பாக்ஸ்கள் நியாயமான விலையில் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தற்போது சென்னை நீங்கலாக 31 மாவட்டங்களில் தனது கேபிள் டிவி சேவையை வழங்கி வருகிறது. சென்னை மாநகரில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் இதன் சேவை விரைவில் தொடங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி, அரசு கேபிள் டிவி நிறுவனம் விரைந்து எடுத்து வருகிறது.
அரசு கேபிள் டிவி நிறுவனம், சென்னையில் புதிய டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறையை நிறுவி 500 சேனல்களை வழங்க உள்ளது. அதில் 20 சேனல்கள் எச்.டி. சேனல்கள் ஆகும். டிஜிட்டல் சிக்னல்களை பெற்று டி.வி. பார்ப்பதற்கு தேவைப்படும் செட்-டாப் பாக்ஸினை வாங்கி நியாயமான விலையில் சந்தாதாரர்களுக்கு வழங்க உள்ளது.

மத்திய அரசு காலக்கெடு

மத்திய அரசின் கேபிள் டிவி திருத்த சட்டம்-2011-ன்படி, சென்னை உள்பட 4 பெருநகரங்கள் வரும் ஜுன் மாதம் 30-ந் தேதிக்குள் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும் என்றும் ஜுலை 1-ந் தேதி முதல் டிஜிட்டல் சிக்னல் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

மத்திய அரசு நிர்ணயித்துள்ள காலக்கெடு மிகவும் குறைவாக இருப்பதாலும், டிஜிட்டல் முறையில் கேபிள் டிவி சேவையை ஆரம்பிக்க செய்ய வேண்டிய பணிகள் அதிக அளவில் இருப்பதாலும், சென்னை மாநகரில் டிஜிட்டல் முறையில் கேபிள் டிவி வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவை 6 மாதங்களுக்கு நீட்டிக்கக் கோரி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

கேபிள் ஆபரேட்டர்களுக்கு வேண்டுகோள்

அரசு கேபிள் டிவி நிறுவனம் சென்னையில் கேபிள் டிவி சேவையை வழங்குவதற்குத் தேவையான உபகரணங்களை வாங்க விரைவில் டெண்டர் கோர உள்ளது. இதற்கான டெண்டர் கோரப்பட்டு, உபகரணங்கள் வாங்கி நிறுவிய பின்னர், சென்னையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கேபிள் டிவி சேவை விரைவில் தொடங்கப்படும்.

சென்னை பெருநகரப் பகுதிகளில் உள்ள, தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்தில் பதிவு செய்துள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள சந்தாதாரர்களுக்கு வழங்குவதற்காக எவ்வளவு செட்-டாப் பாக்ஸ் தேவைப்படுகிறது? என்ற விவரத்தினை அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள படிவத்தில் ஆன்லைனில் மூலமாக வருகிற 31-ந் தேதிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சென்னையில் கேபிள் டிவி ஆபரேட்டராக இருந்து, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் பதிவு செய்யாமல் விடுபட்ட ஆபரேட்டர்கள் பதிவு செய்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக