இந்தப் படத்துக்கான மாற்றுத் திரைக்கதைக் குறிப்புகளை எழுதுவதற்கு முன்பாக சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
இங்கே திரைக்கதைகள் பழுது நீக்கித் தரப்படும் (ஆர்டரின் பேரில்
புதிதாகவும் செய்து தரப்படும்) என்ற பெயரில் நிழல் பதிப்பகம் சார்பில்
வெளியாகியிருக்கும் எனது புத்தகத்துக்கு தமிழ் ஸ்டூடியோ வலைதளத்தில்
வெங்கட் சாமிநாதன் விமர்சனம் எழுதியிருக்கிறார். அவரைப் போன்றவர்கள்
பொருட்படுத்திப் பேசத் தகுந்த விதத்தில் எழுத ஆரம்பித்திருப்பது குறித்து
சந்தோஷமாக இருக்கிறது. பல விஷயங்கள் பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருக்கும்
அவர், மாற்றுத் திரைக்கதைக் குறிப்புகள் எழுதுவது நரைத்த தலைக்கு டை
அடிப்பதைப் போன்ற வேலை என்று குறிப்பிட்டிருந்தார். நான் அதை அப்படிப்
பார்க்கவில்லை. ஓர் அழகான குழந்தைக்கு அலங்காரம் செய்யப் புறப்பட்ட தமிழ்
திரையுலகத்தினர் கண் மையை முகமெல்லாம் அப்பி, உதட்டுச் சாயத்தை கண்ணில்
போட்டு, பவுடர் முழுவதையும் தலையில் கொட்டி படு விகாரமாக
ஆக்கிவைக்கிறார்கள். நான் அந்தக் குழந்தையை முதலில் அழகாகக்
குளிப்பாட்டுகிறேன். மிதமான பவுடரை முகத்திலும் கண் மையைக் கண்ணிலும் லேசான
உதட்டுச் சாயத்தை உதட்டிலும் பூசி, தலை முடியை அழகாக வாரி அலங்காரம்
செய்கிறேன். என்னைவிட சிறப்பாக அலங்காரம் செய்ய இலக்கிய உலகில் பலரால்
நிச்சயம் முடியும். ஆனால், என்னுடைய அலங்காரம் திரையுலகத்தினரின்
அலங்கோலத்துக்கு எவ்வளவோ மேல் என்பதுதான் என் நம்பிக்கை.புத்திசாலித்தனமும் கலை அழகும் அற்ற தமிழ் வணிகப்படங்களுக்கு மாற்றாக மிக உயர்வான கலைப்படைப்புகளை நான் சொல்லவில்லை. ஒரு நடுவாந்திரமான படம் ஒன்றையே முதற்கட்ட இலக்காக வைக்கிறேன். அதாவது தமிழ் வணிகப்படங்களுக்கு மாற்றாக ரேயின் படங்களை முன்வைக்கவில்லை. எம்.டி.வாசுதேவன் நாயரின் படங்களை முன்வைக்கவிரும்புகிறேன்.
மானுட இயல்புகளை, குறிப்பாக மானுட மேன்மைகளை, கலை அழகுடன் ஆர்ப்பாட்டமில்லாமல் சொல்லவேண்டும் என்பதுதான் என்னுடைய கலைக்கான இலக்கு. அப்படியான ஒன்றைப் படமாக எடுப்பது ஒன்றும் சிரமமான வேலை அல்ல. ஏனெனில், அதற்கு அடிப்படையான கதைகள் இலக்கிய உலகில் ஏராளம் குவிந்து கிடக்கின்றன. குறைந்தபட்ச தொழில்நுட்ப அறிவு உள்ள எந்தவொரு தமிழ் திரையுலகைச் சேர்ந்தவரும் அதை வைத்து அருமையான படத்தை எடுத்துவிடமுடியும். அவர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் சிறந்த கதை ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் எளிய திறமை மட்டும்தான்.
ராமநாராயணன், டி.ராஜேந்தர் வகையறாக்களுக்கும் அஜீத், விஜய் வகையறாக்களுக்கும் மாற்றாக நடுவாந்திர படைப்புகள் என்ற பெயரில் பல முயற்சிகள் தமிழில் மேற்கொள்ளப்பட்டுத்தான் வருகின்றன. ஆனால், அப்படி நடுவாந்திரமான படமாகச் சொல்லப்படுபவை அந்த இலக்கைப் பூர்த்தி செய்பவையாக இல்லை. அந்த இயக்குநர்களின் நியாயமற்ற கர்வமும் கலை ரசனையின்மையும்தான் அப்படியான தோல்விக்குக் காரணம் என்பதுதான் முதலும் கடைசியுமாக நான் சொல்லவிரும்புவது. எனவேதான் அப்படியான படங்களைத் தேர்ந்தெடுத்து என் விமர்சனத்தை முன்வைத்து வருகிறேன்.
என்னை விடச் சிறப்பான கதைகளை எழுத முடிந்த/எழுதியிருக்கும் எழுத்தாளர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். தமிழ் திரையுலகம் அவர்களை உரிய மரியாதை கொடுத்து பயன்படுத்துவதில்லை. திரையுலகில் பங்களிக்கும் எழுத்தாளர்களும்கூட இப்போதைய படங்களில் தயக்கத்துடன்தான் பங்களித்து வருகிறார்கள். கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி நட்புறவை வளர்த்துக் கொண்டால்தான் பின்னர் காத்திரமாகப் பங்களிக்க வழி ஏற்படும் என்ற நம்பிக்கையில் செயல்பட்டுவருகிறார்கள். ஆனால், அப்படியான வழிமுறை எதிர்பார்க்கும் பலனைத் தருமா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. மொதல்ல சோரம் போய்க்கறேன். அப்பறம் கற்பைக் காப்பாற்றிக் கொள்கிறேன் என்று சொல்வதைப் போன்ற ஒரு முயற்சி அது.
என்னைப் பொறுத்தவரையில், எழுத்தில் சாதனைகள் படைத்திருக்கும் நபர்கள், தங்களை மையமாக வைத்து அதாவது அழுத்தமான கதையை முன்வைத்து படங்களை எடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும். எழுத்து வேறு… காட்சி ஊடகம் வேறு என்று திரையுலகத்தினர் சொல்லும் பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்படாமல் தங்களுக்கு இருக்கும் சர்வ தேசச் செல்வாக்கைப் பயன்படுத்தி நல்ல படத்தை எடுப்பதற்கான முயற்சிகளை ஆரம்பிக்கவேண்டும். டெலி ஃபிலிம் என்பது தமிழகத்தில் மிக மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்ட வடிவமாக இருக்கிறது. குறைவான முதலீடு போதும். அதிக சமரசம் எதுவும் இல்லாமல் செயல்பட முடிந்த வடிவம். அப்படியான ஓர் இயக்கத்தை ஆரம்பிக்கும் முயற்சியில்தான் நான் என் விமர்சனங்களை எழுதிவருகிறேன்.
அந்தவகையில் அன்பே சிவம் படத்துக்கு ஒழுங்காகத் திரைக்கதை எழுதுவதென்றால், ஒரிஜினலைப் போலவே நெடுந்தூரப் பயணத்தில் ஏற்படும் சுவாரசியமான நிகழ்வுகள் என்ற பாணி நீங்கலாக, முக்கியமாக இரண்டு கோணத்தில் எழுத முடியும். ஒன்று காதலை மையமாக வைத்து. இன்னொன்று கம்யூனிஸ கோட்பாட்டை மையமாக வைத்து.
முதல் வகையை எடுத்துக் கொண்டால் அதிலும் பலவிதமான திரைக்கதை அமைக்கமுடியும். கம்யூனிஸ்ட் போராளிக்கும் முதலாளித்துவ பெண்ணுக்கும் ஏற்படும் காதல், அதனால் ஏற்படும் சிக்கல்கள் என கதை அமைக்கலாம். அல்லது முதலாளியின் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு அந்த நிறுவனத்துக்கே உரிமையாளராகி தொழிலாளர் நலனுக்கான போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானிப்பதாகவும் அதனால் காதல் உறவில் ஏற்படும் சிக்கல்களையும் மையமாக வைத்து கொஞ்சம் சினிமாத்தனமாகத் திரைக்கதை அமைக்கலாம்.
அல்லது இந்திய கம்யூனிஸ இயக்கம் எதிர்கொள்ளும் சாதிப் பிரச்னையை மையமாக வைத்து எடுக்கலாம். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான நாயகன் தலித் சாதியைச் சேர்ந்தவன். நாயகியின் அப்பாவும் கம்யூனிஸ்ட்தான். ஆனால், சாதியில் தேவர் அல்லது வன்னியர். ஒரு வன்முறைச் செயலில் பங்கெடுத்த நாயகன், தலைமறைவு வாழ்க்கை வாழ கிராமத்துக்குப் போகிறான். தேவர் அல்லது வன்னியர்தான் அடைக்கலம் தருகிறார். நாயகன் அங்கு நாயகியைச் சந்திக்கிறான். அவனுடைய சாகச வாழ்க்கை மீது அவளுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. அது மெள்ளக் காதலாகிறது. கம்யூனிஸ்டாக இருந்தாலும் நாயகியின் அப்பாவுக்குள்ளே சாதிய உணர்வுகள் சாகாமல் இருக்கின்றன. ஒரு தலித்துக்குப் போய் என் பொண்ணைக் கொடுப்பதா என்று ஆத்திரப்படுகிறார். இதனால் ஏற்படும் சிக்கல்கள் என கதையைக் கொண்டுபோகலாம். காதலுக்கு எதிரியாக பணத்திமிர் வருவதாகக் காட்டுவது வணிக ஃபார்முலா. அதையே கம்யூனிஸ்டுக்கு உள்ளே இருக்கும் சாதி உணர்வு காதலுக்குத் தடையாக வருகிறது என்று காட்டினால் படம் வேறொரு தளத்துக்கு உயர்ந்துவிடும்.
கம்யூனிஸ்ட்-காதல் என்று யோசித்தபோது, அஸ்தமனம் என்ற கதை ஒன்று நினைவுக்கு வந்தது. முழு கதையும் நினைவில்லை. ஆனால், பல சம்பவங்கள் நினைவில் இருக்கின்றன.
சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும் ஒருவன் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும்போது விபத்தில் சிக்கிக் கொண்டுவிடுவான். இடுப்புக்குக் கீழே செயல் இழந்துபோய்விடும். சக்கர நாற்காலியில்தான் எப்போதும் இருந்தாக வேண்டியிருக்கும். அவனுக்கு ஒரு காதலியும் இருப்பார். கம்யூனிஸ்ட் கட்சியினர் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைத்து ஒரு மலைவீட்டில் தங்க ஏற்பாடு செய்துகொடுப்பார்கள்.
தன்னுடைய வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்ற சோகம்… தன் காதலியின் வாழ்க்கையும் வீணாகிறதே என்ற சோகம் எல்லாம் சேர்ந்து அவனை மிகுந்த மனச் சோர்வுக்கு உள்ளாக்கும். அவள் புல்லாங்குழலை எடுத்து இதமான பாடல் ஒன்றைப் பாடவேண்டும் என்று இவன் நினைக்கும் நேரத்தில் அவள் மர வீடு அதிர கோடாலியை எடுத்துக்கொண்டு சென்று விறகுகளை வெட்டிப் போடுவாள். அவளிடம் இவன் எதிர்பார்க்கும் பெண்மையும் நளினமும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கும்.
இந்த நிலையில் வேறொரு தோழருடன் அந்தப் பெண்ணுக்கு நட்பு ஏற்படும். அது காதலனின் மனதில் பெரும் புயலை ஏற்படுத்தும். அவனுடைய நிலை அவனுக்குப் புரியும் நிலையிலும் தன் காதலி வேறொருவனுடன் சந்தோஷமாகப் பேசிச் சிரிப்பதைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல் தவிப்பான். அந்த தோழர் இவனுடைய காதலிக்கு ரோஜாச் செடிகளைப் பரிசாகக் கொடுப்பான். நிலவொளியில் இதமாக வீசும் தென்றல் காற்றில் அந்த ரோஜாச் செடிகள் அசைந்தாடுவதைப் பார்க்கும்போது அத்தனை செடிகளையும் வேரோடு பிடுங்கி எறிந்துவிடவேண்டும் என்று வெறி கிளம்பும். சக்கர நாற்காலில் அமர்ந்தபடியே தன் கோபத்தை அடக்கிக்கொண்டு அழுவான்.
இதுபோல் பல சம்பவங்கள் நடக்கும். கடைசியில் ஒருநாள் சூரிய அஸ்தமனத்தைப் பார்க்க தன்னை அழைத்துச் செல்லும்படி காதல் மனைவியிடம் கேட்டுக்கொள்வான். அவளும் மலைப்பாதையில் அழைத்துச் செல்வாள். ஒரு விளிம்பில் சூரியனை நன்கு பார்க்க தோதாக சக்கர நாற்காலி வண்டியை நிறுத்துவாள். இன்னும் கொஞ்சம் விளிம்புக்குக் கொண்டு செல் என்று சொல்வான். சிறிது நேரம் அவளையே உற்றுப் பார்ப்பான். பிறகு மறையத் தொடங்கியிருக்கும் சூரியனைப் பார்ப்பான். செக்கச் செவேல் என அந்த மலைக் காடு முழுவதும் அஸ்தமன நிறத்தைப் பூசிக் கொண்டு நிற்கும். கீழே எதையோ எட்டிப் பார்க்க முன்னால் நகர்வான். நாற்காலியில் இருந்து இடறி, மீட்க முடியாத பள்ளத்தில் விழுந்துவிடுவான். அது தற்கொலையா காதலி பின்னால் இருந்து தள்ளிவிட்டாளா என்பது கதையில் பூடகமாகவே முடிக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.
காதல் ஜோடிகளில் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டுவிட அப்போதைய உணர்ச்சி மிகுதியில் காதலி காதலனுக்காக எதையும் இழக்கத் தயாராக இருப்பதாகச் சொல்லக்கூடும். ஆனால், நாளாக நாளாக அந்த லட்சிய மனோபாவம் வலுவிழக்க ஆரம்பிக்கும். காதலனுக்கும் அவளுடைய தியாகம் மீதான பெருமிதம் மறைந்து தன்னுடைய இயலாமை குறித்த தாழ்வுமனப்பான்மை வெளிப்படக்கூடும். அது சந்தேகமாகவும் கோபமாகவும் அடக்குமுறையாகவும் ஆகலாம். லட்சியவாதத்துக்கும் யதார்த்தத்துக்கும் இடையிலான போராட்டமாக அந்தக் காதலர்களின் வாழ்க்கை பல்வேறு சோதனைகளை எதிர்கொள்ளக்கூடும். கடைசியில் யதார்த்த நிலையைப் புரிந்துகொண்டு யாராவது ஒருவர் அதிர்ச்சிகரமான ஓர் முடிவை எடுக்கக்கூடும். இந்த முக்கோணக் காதல்கதையில் கம்யூனிஸம் போன்ற நிறுவன சிக்கல்களும் சேர்ந்துவிட்டால் கதை வேறொரு பரிமாணத்தை எளிதில் எட்டிவிடும்.
இப்போதைய படத்தில் பணக்காரர்-ஏழை என்ற விஷயம் கூடுதல் நாடகத்தன்மைக்கு வழிவகுக்கக்கூடும். பணக்காரர் ஒருவருக்கு ஏழையாகவும் கம்யூனிஸ்டாகவும் இருக்கும் ஒருவரையே ஏற்றுக் கொள்ளமுடியாது. இங்கோ விபத்தினால் உடல் ஊனமுற்றவராகவும் இருக்கிறார். அப்படியான ஒருவரை மருமகனாக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று படையாச்சி சொல்ல, அவருடைய பெண்ணோ நீங்கள் மருமகனாக ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. நான் கணவனாக ஏற்றுக்கொண்டால் போதும் என்று சொல்லிவிட்டு காதலனுடன் வந்துவிடுகிறாள்.
கம்யூனிஸ்ட் கட்சி மொட்டை மாடியில் இருவரும் தங்கிக் கொள்கிறார்கள். காதலன் புரட்சிகர ஓவியங்களை வரைந்து தன் கலைத்திறமையை மெருகேற்றிக் கொள்வதோடு கட்சிக்கும் சிறப்பாக பங்களிக்கிறான். காதலி அவனுக்கு கூடவே இருந்து பணிவிடை செய்துவருகிறாள்.
சிறிது காலம் கழிகிறது. சக தோழர்களுடன் காதலி சகஜமாகப் பேசிப் பழகுவது நல்லசிவத்துக்கு பொறாமையை ஏற்படுத்துகிறது. அவள் இயல்பாகச் செய்யும் சில செயல்கள் அவனுக்குள் சந்தேகத்தைத் தூண்டுகின்றன. அதேநேரத்தில் அவனுடைய சந்தேகம் குறித்து அவனுக்கு ஒருவித வெறுப்பும் வருகிறது. என்னதான் முற்போக்கானவராகத் தன்னை எண்ணிக் கொண்டாலும் தனக்குள்ளும் ஆணாதிக்க உணர்வும் அடக்குமுறை எண்ணமும் இருப்பது அவனுக்கு அவன் மீதே வெறுப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், அதே நேரத்தில் தன் காதலி பிறருடன் உற்சாகமாகச் சிரித்துப் பேசுவதைத் தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை. இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கிறான். அதோடு காதலிக்கு அவன் மீதுதான் காதல் இருக்கிறதே தவிர கட்சியின் கொள்கைகள், செயல்பாடுகளில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை.
ஒருகட்டத்தில் அவர்கள் இருவருக்கு இடையே பெரிய மோதல் ஏற்படுகிறது. பிரிந்துவிடுகிறார்கள். நல்லசிவம் வரையும் ஓவியங்களில் வர்க்கப்போராட்டக் குறியீடுகள் மறையத் தொடங்கி காதல் ஏக்கம், வாழ்க்கையின் அபத்தம், அவநம்பிக்கை சார்ந்த குறியீடுகள் என தனி மனித உணர்வுகள் தலைதூக்க ஆரம்பிக்கின்றன. கட்சி உறுப்பினர்கள் அதை விமர்சிக்க ஆரம்பிக்கிறார்கள். நல்லசிவத்துக்குள் இருக்கும் கலைஞன் திமிற ஆரம்பிக்கிறான். என் கையைப் பிடித்துக்கொண்டு நீங்கள் வரையாதீர்கள் என்று கோபப்படுகிறான். அப்படியாக காதல் முறிவு, கட்சியுடனான போராட்டம் ஆகியவற்றை மையமாகக்கொண்டு திரைக்கதையைக் கொண்டுசெல்ல முடியும்.
காதலுக்கு பதிலாக கம்யூனிஸ்ட்க் கோட்பாட்டை மையமாக வைத்து எடுப்பதென்றால் கம்யூனிஸ போராட்டங்களில் ஈடுபடும் ஒருவர் நக்சலைட்டாக மாறி வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு அந்த வழிகளின் போதாமையை உணர்ந்து அன்பின் பாதைக்குத் திரும்புவதாகவும் காட்டலாம். அன்பே சிவம் என்ற தலைப்பு வைத்திருப்பதால் இதுதான் ஓரளவுக்குப் பொருத்தமானதாக இருக்கும். அதற்கு முதலில் படத்தின் அரசியல் என்ன என்பது தெளிவாக தீர்மானிக்கப்பட்டாக வேண்டியிருக்கும்.
இப்போதைய அன்பே சிவம் படத்தில் 910 என்ற எண் ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. அதாவது முதலாளி இப்போது தரும் சம்பளம் 910. கம்யூனிஸ்ட்கள் கேட்கும் தொகை என்ன என்பது படத்தில் சொல்லப்படவே இல்லை. கம்யூனிஸ்ட் கதாபாத்திரமான நல்லசிவமும் தான் வரையும் ஓவியத்தில் இந்த 910 எண்ணையே வரைகிறான். அப்படியானால் அவனுடைய இலக்கு எண் என்ன? அவன் முதலாளி தரவிரும்பும் தொகையை ஏற்றுக்கொள்கிறானா? கம்யூனிஸ்ட் கட்சி கேட்கும் தொகையைத்தானே அவன் முன்னிறுத்த வேண்டும்? இந்த சிறிய விஷயம்கூட படத்தில் யோசிக்கப்பட்டிருக்கவில்லை. ஒரு படத்தின் அரசியல் என்பது அந்தப் படத்தின் கலர் டோன் போல் முதலில் தீர்மானிக்கப்பட்டாக வேண்டிய ஒன்று. ஒவ்வொரு ஃப்ரேமும் அதில் இடம்பெறும் சிறு சிறு சம்பவங்களும் அந்த அரசியலைப் பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும்.
எனது திரைக்கதையில் எந்தக் குறிப்பிட்ட அரசியலையும் முன்னிலைப்படுத்தாமல் அரசியல் சார்ந்த விவாதத்தையே மையமாக இடம்பெற வைப்பேன். அதுதான் என் அரசியல். எடுத்துக்கொள்ளும் விஷயத்தின் பன்முகத்தன்மையை விவரிப்பதுதான் படைப்பாளியின் வேலை. தீர்வுகளைத் திணிப்பது அல்ல என்பதுதான் என் அணுகுமுறையாக இருக்கும்.
இள வயதில், சமூகத்தில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளைப் பார்த்து ஆவேசப்படும் நல்லசிவம் கம்யூனிஸக் கருத்துகளால் கவரப்படுவதாக அந்தப் படத்தை ஆரம்பிப்பேன். போராட்டங்களில் கலந்துகொள்ளுதல், சிறை செல்லுதல், அரசின் கொடூர முகத்தை நேரடியாக எதிர்கொள்ளுதல் என அவனுடைய அனுபவங்கள் விரிகின்றன. ஒருகட்டத்தில், ஜனநாயக வழியில் போராடுவதன் மூலம் விடியல் வராது என்ற எண்ணம் அவனுக்குள் வர ஆரம்பிக்கிறது. நக்சல்பாரி இயக்கத்தினருடன் நட்பு ஏற்படுகிறது. முதலாளித்துவ அமைப்பைவிட இந்தத் தயிர்சாத கம்யூனிஸ்ட்கள்தான் புரட்சிக்கு எதிரி என்று அவர்கள் சொல்கிறார்கள். நேரடித் தாக்குதலில் ஈடுபட முடிவெடுக்கிறான்.
கந்தசாமிப் படையாச்சி அந்த ஊரின் மிகப் பெரிய முதலாளி. பழங்குடி பகுதியில் இருக்கும் கனிமங்களைச் சூறையாட பன்னாட்டு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்திருப்பார். ஒரு பேட்டியில் அது தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு மிகவும் திமிராகப் பதில் சொல்லியிருப்பார். பழங்குடிகள் புதையலைப் பாதுகாக்கற பூதம் மாதிரி. காவல் காக்க மட்டும்தான் அவங்களுக்கு அதிகாரம் உண்டு. ஆண்டு அனுபவிக்க அதிகாரம் கிடையாது. இன்னும் சரியாச் சொல்லணும்னா அவங்களுக்கு அந்தப் புதையல் அங்க இருக்கற விஷயமே தெரியாது. அதனால, அவங்களுக்கு அதுல எந்த உரிமையும் கிடையாது. என்னை மாதிரியான பணக்காரங்க அதை ஆளை வெச்சு கஷ்டப்பட்டுத் தோண்டியெடுத்து சுத்தம் பண்ணி பயன்பாட்டுக்குக் கொண்டுவர்றோம். அதனால, எங்களுக்குத்தான் அது சொந்தம். வேணும்னா இத்தனை நாள் அதை பத்திரமா பாதுகாத்ததுக்கு கூலியா ஏதாவது போட்டுக்கொடுக்கறோம். அந்தப் பழங்குடிகள்ல படிச்சவங்க யாராவது இருந்தா வேலை போட்டுக் கொடுக்கறோம் என்று சொல்கிறார்.
பழங்குடிகள் எங்க பிணத்துக்கு மேலதான் இந்த நிறுவனம் வர முடியும் அப்படின்னு போராடினா என்ன செய்வீங்க என்ற கேள்விக்குச் சிரித்தபடியே, அவங்களோட விருப்பம் அதுதான்னா அதை நிச்சயம் நிறைவேத்துவோம் என்று சொல்கிறார்.
அதைப் படிக்கும் நக்சலைட்டுகளுக்குக் கோபம் அதிகரிக்கிறது. படையாச்சியைக் கடத்தி அந்த நிறுவனத்தை பழங்குடி பகுதியில் வரவிடாமல் தடுக்க முடிவெடுக்கிறார்கள். ஆனால், அவரைக் கடத்தப் போகும் இடத்தில் வாயில் காப்பாளர், தோட்டத்தில் நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தவர், கார் டிரைவர் என பலரையும் சுட்டுத் தள்ள நேர்கிறது.
இந்த சம்பவம் நல்லசிவம் மனதில் பல கேள்விகளை உருவாக்குகிறது. நக்சலைட்டுகளோ தங்கள் செயலை நியாயப்படுத்திப் பேசுகிறார்கள். முதலாளிங்க மட்டுமில்ல… முதலாளிகளுக்கு எடுபிடி வேலை செய்யறவங்களும் நமக்கு எதிரிதான். அதுவும் இல்லாம நம்மை அவங்க அடையாளம் காட்டிவிட்டால் பிரச்னையாகிவிடும் என்கிறார்கள். நல்லசிவத்துக்கு அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அநியாயமாகக் கொல்லப்பட்ட அப்பாவிகளின் ஆத்மாக்கள் அவனைத் துரத்த ஆரம்பிக்கின்றன.
படையாச்சியை வைத்துக்கொண்டு நடத்தும் பேரத்தில் எதிர்பார்த்த முடிவு கிடைக்காமல் போகவே அவரைக் கொன்றுவிடத் தீர்மானிக்கிறார்கள். இதை விரும்பாத நல்லசிவம் அவரைக் காப்பாற்றத் தீர்மானிக்கிறான். சக நக்சலைட்டுகள் அனைவரும் ஒரு கூட்டத்துக்காகப் போயிருக்கும் நேரத்தில் நள்ளிரவில் அவருடைய கைகளை அவிழ்த்துவிடுகிறான். அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு தப்பித்துச் செல்லும் படையாச்சிக்கு வழி தெரியாததால் கீழே விழுந்து அடிபட்டுவிடுகிறது. நல்லசிவம் போய் உதவி செய்கிறான். தனக்கு அந்தக் காட்டில் தனியாகப் போகத் தெரியாது… பின்னால் வந்து அவர்கள் கொன்றுவிடக்கூடும். எனவே, பாதுகாப்பாக வீட்டில் கொண்டு சேர்க்கும்படிக் கெஞ்சிக் கேட்கிறார். நல்லசிவமும் அதற்கு சம்மதிக்கிறான்.
முதலாளி, கம்யூனிஸ்ட் என இரண்டு எதிரெதிர் துருவங்களைச் சேர்ந்தவர்களின் சாகசப் பயணம் ஆரம்பிக்கிறது. சாலை வழியாகப் போனால் பிடிபட்டுவிடுவோம் என்று காட்டுக்குள்ளாகவே போகிறார்கள். கைக்குக் கிடைத்த உணவை உண்டு, இரவுகளில் மரத்தின் மீது படுத்துத் தூங்கிச் செல்கிறார்கள். அவர்களுக்கு இடையில் மெள்ள ஒரு பந்தம் உருவாகிறது.
யாருக்காகப் போராடுகிறானோ அவர்களாலேயே புறக்கணிக்கப்பட்டிருக்கும் ஒரு தத்துவம் எப்படிச் சரியாக இருக்க முடியும் என்று படையாச்சி கேட்கிறார். மக்களுக்கு விழிப்பு உணர்வு இல்லை… அரசியல் உணர்வு பெற்ற ஒரு குழுவினர்தான் அவர்களுக்கான விடுதலையைத் தேடித் தர வேண்டும் என்று நல்லசிவம் சொல்கிறான். படையாச்சி அதை மறுக்கிறார். மக்கள் விழிப்பு உணர்வு குறைந்தவர்கள் என்று சொல்வதே தவறு. போராடுவது எவ்வளவு நியாயமான செயலோ அதைவிட சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதும் உயர்ந்ததே என்கிறார்.
பன்னாட்டு நிறுவனங்களின் மருந்து ஊழல் பற்றி பேச்சு வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சியினர் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக நடத்திய போராட்டங்களில் நூறில் ஒரு பங்காவது இந்திய பாரம்பரிய பழங்குடி மருத்துவமுறையை வளர்த்தெடுக்கச் செய்திருக்கிறீர்களா. ஒரே ஒரு மூலிகைச் செடியையாவது நீங்கள் நட்டதுண்டா என்று கேட்கிறார். விமர்சிப்பதில் தவறில்லை. அது ஆக்கபூர்வமாக இருக்கவேண்டும் என்கிறார். அரசியல் அதிகாரம் கைக்குக் கிடைத்தால்தான் நல்லது செய்ய முடியுமென்றில்லை. பக்கத்தில் இருப்பவரின் காயத்துக்கு மருந்து போடுவதில் இருந்து அதை ஆரம்பிக்கலாம் என்கிறார்.
ஒரு மரத்தின் இலைகள் முழுவதும் பூச்சி அரித்திருந்தால் அந்த இலையில் மட்டும் பூச்சிக் கொல்லி தெளித்துப் பலனில்லை. வேரில் மருந்துவைத்தால்தான் ஒட்டு மொத்த மரமும் பிழைக்க முடியும். இந்த சமூகத்தின் அனைத்து பிரச்னைகளுக்கும் முதலாளிகளின் ஆதிக்க மனோபாவம்தான் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. அவர்களுக்குத் துணையாக இந்த அரசாங்கங்கள் இருக்கின்றன. எனவே, அவற்றை நாங்கள் குறிவைக்கிறோம். எங்களுடைய ஆட்களின் எண்ணிக்கை குறைவு. எங்களிடம் பிற பலங்களும் கிடையாது. எனவே, பலமுள்ளவர்களை சமூக அக்கறையோடு செயல்படவைக்க எங்கள் வழியில் முயற்சி செய்கிறோம். நாங்க எதையும் மொதல்ல அன்பா சொல்லிப் பார்ப்போம். அப்பவே நீங்க கேட்டுட்டா நாங்க ஏன் ஆயுதத்தை எடுக்கறோம். எங்கள் வழிமுறையை நீங்கள்தானே தீர்மானிக்கிறீர்கள் என்கிறான்.
ஏழை-பணக்காரன் வித்தியாசமானது மிகவும் இயல்பானது; ஒருவகையில அதில் எந்த ஏற்றத் தாழ்வும் கிடையாது என்கிறார் படையாச்சி. பிரமாண்ட மாளிகையில் பஞ்சு மெத்தையில் படுத்துத் தூங்கி, நீச்சல் குளத்தில் குளித்து, நட்சத்திர உணவு விடுதியில் உண்டு வாழும் வாழ்க்கைக்கும், குடிசை வாசலில் நட்சத்திரங்களின் கீழே கயிற்றுக் கட்டிலில் படுத்து, ஆற்று நீரில் குளித்து, கம்மங் கூழ் குடித்து வாழும் வாழ்க்கைக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. நான் வேப்பம்சாறு கலந்த பேஸ்டினால் பல் தேய்க்கிறேன். அவன் வேப்பங் குச்சியால் பல் தேய்க்கிறான். நான் கார்ல என் அலுவலகத்துக்கு வேகமா போறேன். ஒரு ஏழையோட வீடு அவனுடைய பணியிடத்துக்கு அருகில் இருக்கறதுனால நடந்து போறான். வீட்டுல இருந்து அலுவலகத்துக்குப் போற நேரத்தைப் பார்த்தா ரெண்டு பேருக்குமே ஒரே அளவுக்குத்தான் இருக்கும்.
நான் உடல் உழைப்பு அதிகம் செய்யாததுனால ஜிம்முக்குப் போய் வேர்க்க விறுவிறுக்க பயிற்சி செய்யறேன். ஒரு ஏழைக்கு அவன் வேலையே உடற்பயிற்சிதான். நான் போர்ன்விட்டாவும் ஹார்லிக்ஸும் குடிக்கறேன். அதே சத்துகள் அவன் குடிக்கற கூழுலயும் இருக்கு. உலக அழகி கிட்ட கிடைக்கற சந்தோஷமும் விசுவாசமான மனைவி கிட்ட கிடைக்கற சந்தோஷமும் ஒண்ணேதான் தம்பி. இதுல ஒரு வேடிக்கை என்னன்னா, ஒரு ஏழைக்கு தன்னோட வாழ்க்கைல எந்தப் புகாரும் கிடையாது. எங்களைப்போலவே, இன்னும் சொல்லணும்னா எங்களைவிட சந்தோஷமாவே வாழ்ந்துட்டுத்தான் வர்றாங்க… இடையில முற்போக்கு நற்போக்குன்னு சொல்லிட்டுவர்றவங்களாலதான் பிரச்னையே… உண்மையில இந்த கம்யூனிஸ்ட்களுக்கு பணக்காரனோட வாழ்க்கை மேல உள்ளூர ஆசை இருக்கு. தனக்கு அது வேணும்னு கேட்கக் கூச்சப்பட்டுட்டு பக்கத்து இலைக்கு பாயசம் ஊத்துங்கன்னு சொல்ற மாதிரி நடந்துக்கறாங்க. ஏழையோட வாழ்க்கையோட அருமை தெரியணும்னா ஏழையா வாழ்ந்து பாக்கணும் தம்பி என்று சொல்கிறார். நீங்கள் ரஜினி படம் அதிகம் பாக்கறதை நிறுத்துங்க என்று அதைத் தாண்டிப் போகிறான் நல்லசிவம்.
மலைக் காட்டு வழியே நடந்து செல்பவர்கள் ஒரு கட்டத்தில் சரிவில் விழுந்து அடிபட்டுவிடுகிறது. எழுந்திருக்க முடியாமல் கஷ்டப்படும்போது காட்டு நாய்கள் கூட்டம் அவர்களைச் சுற்றி வளைக்கிறது. உயிர் பிழைப்பது கடினம் என்ற நிலையில் அந்தப் பக்கமாக வரும் பழங்குடியினர் சிலர் அவர்களைக் காப்பாற்றி தங்கள் குடிசைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கிறார்கள்.
மெள்ள உடல் குணமாகிவரும் வேளையில் காவல்துறைக்கு எப்படியோ தகவல் கிடைத்து அவர்களைச் சுற்றி வளைத்துவிடுகிறது. அதுவரை நல்லவர்போல் நடித்துவந்த படையாச்சி காவலர்கள் வந்து சேர்ந்ததும் தன் சுயரூபத்தைக் காட்டுகிறார். நல்லசிவத்தையும் பழங்குடிகளையும் எட்டி உதைக்கிறார். காவலர்களும் அவர்களைக் கட்டிவைத்து அடிக்கிறார்கள். நல்லசிவத்தைக் கைது செய்து படையாச்சியுடன் தங்கள் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு புறப்படுகிறார்கள். அந்த நேரம் பார்த்து, பிற நக்சலைட்டுகள் வந்துவிடுகிறார்கள். காவலர்களுக்கும் அவர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடக்கிறது. கடைசியில் நக்சலைட்டுகள் வென்றுவிடுகிறார்கள். இப்போது படையாச்சியும் காவலர்களும் சிறைப்படுத்தப்படுகிறார்கள். படையாச்சியைப் பார்த்ததும் நல்லசிவமுக்கு ஆத்திரம் தலைக்கேறுகிறது. இனி கருணை காட்டிப் பலனில்லை என்று முடிவுசெய்து அவரையும் காவலர்களையும் தங்கள் இடத்துக்குக் கொண்டு சென்று சுட்டுத் தள்ள முடிவெடுக்கிறார்கள். அனைவருடைய கைகளையும் கட்டி வரிசையாக மண்டிபோட்டு நிற்க வைக்கிறார்கள். அவர்களை நக்சலைட்டுகள் கொல்லப் போகும் தருணத்தில் அங்கு வரும் பழங்குடிகள் குறுக்கே புகுந்து தடுத்துவிடுகிறார்கள்.
இந்த காட்டை அழிச்சு உங்க வாழ்க்கையை நாசம் பண்ணப்போறவங்க இவங்க… ரொம்ப மோசமானவங்க என்று நல்லசிவம் ஆவேசப்படுகிறான். பழங்குடிகளோ வேண்டாம் என்று தடுக்கிறார்கள். பழங்குடிகளுக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் நடக்கிறது. உங்களோட நோக்கம் என்ன? எங்களுக்கு உதவணுங்கறதா… இந்த முதலாளிகளை அடியோடு ஒழிக்கணுங்கறதா. தீயை ஒருபோதும் தீயால அணைக்க முடியாது. இவங்க நல்லவங்கன்னோ தப்பு செய்யதவங்கன்னோ இவங்களை விடுவிக்கச் சொல்லலை. இவங்களை நம்பி ஒரு குடும்பம் இருக்கு. குழந்தைகுட்டிங்க இருக்காங்க. ஒரு பாவமும் செய்யாத அவங்க எந்தக் கஷ்டமும் படக்கூடாது. நேத்து இந்தப் படையாச்சியோட வயசான அப்பா, டிவில பேசினதைப் பார்த்தோம். அப்பனுக்குத்தான் புள்ளை கொள்ளி போடணும். புள்ளைக்கு அப்பன் கொள்ளி பொடற நிலை வந்துடக்கூடாதுன்னு அழுதாரு. அவரைக் கொல்றதுன்னா என்னையும் வந்து கொன்னுட்டு போயிடுங்கன்னு இவரோட மனைவி அழுதாங்க. புள்ளைங்க, எங்க அப்பாவை விட்ருங்கன்னு கெஞ்சிக் கதறினாங்க. எங்க கால்ல விழுந்து கெஞ்சின மாதிரியே அது இருந்தது. இந்த போலீஸ்காரங்களும் பாவம். மேலிடத்துல என்ன சொல்றாங்களோ அதைச் செய்யறாங்க. இவங்களுக்கும் குடும்பம் குழந்தைங்க இருக்காங்க. அவங்களுக்காக இவங்களை விடுவிச்சிருங்க. ஒருபாவமும் செய்யாத அவங்க கஷ்டப்படக்கூடாது. தப்பே செய்யாம தண்டனை அனுபவிக்கறதோட வேதனை என்னங்கறது எங்களுக்குத் தெரியும். அதை வேற யாரும் அனுபவிக்க வேண்டாம் என்று சொல்கிறார்கள். படையாச்சி மற்றும் காவலர்களின் கைகளை அவிழ்த்துவிட்டு, போங்க. பிழைச்சிப் போங்க என்று அனுப்பிவைக்கிறார்கள். நக்சலைட்டுகள் தங்களுடைய ஆயுதங்களைத் தாழ்த்திக்கொண்டு ஒதுங்கி நிற்கிறார்கள்.
படையாச்சி பழங்குடியினரின் அன்பைக் கண்டு நெகிழ்ந்துபோய் கண்ணீர் மல்க ஜீப்பில் ஏறி உட்காருகிறார். ஊருக்கு வந்து சேர்ந்ததும் ஊடகத்தினர் அவரை மொய்கிறார்கள். முதலாளியா போனேன்… மனுஷனா திரும்பி வந்திருக்கேன் என்று மட்டும் சொல்லிவிட்டு காரில் ஏறிப்போகிறார்.
பழங்குடிகளின் நிலத்தை விலைக்கு வாங்காமல் வாடகைக்கு எடுத்துக்கொள்கிறார். யாரும் இடத்தைக் காலிபண்ணிட்டு எங்கயும் போகவேண்டாம். இந்த நிறுவனத்துல பழங்குடிகளும் ஒரு பங்குதாரரா இருக்கட்டும். லாபத்துல அவங்களுக்கும் பங்கு உண்டு. தேவையான பயிற்சி கொடுத்து பழங்குடிகள் எல்லாரையும் வேலைக்கும் எடுத்துக்கப்போறோம் என்று சொல்கிறார்.
இதை தொலைக்காட்சியில் பார்க்கும் பழங்குடிகளும் நல்லசிவமும் பிற நக்சலைட்டுகளும் சந்தோஷத்தில் திளைக்கிறார்கள். நக்சலைட்டுகள் அனைவரும் பழங்குடிகளைத் தோளில் தூக்கிக் கொண்டு ஆடிப் பாடுகிறார்கள்.
பின்னணியில் நீ… நான் சிவம்….அன்பே சிவம்… என்ற பாடல் சன்னமாக ஒலிக்கிறது.
0
B.R. மகாதேவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக