வியாழன், 10 மே, 2012

கனிமொழியை 2ஜி வழக்கிலிருந்து கழட்டி விடலாமா? சி.பி.ஐ இன்று முடிவு!


Viruvirupu
2ஜி-ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கனிமொழியை கழட்டி விடுவதா, இல்லையா என்று இன்று (வியாழக்கிழமை) சி.பி.ஐ. கோர்ட்டில் சொல்லவுள்ளது.
கனிமொழி, மற்றும் கலைஞர் தொலைக்காட்சி முன்னாள் இயக்குநர் சரத் குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் டில்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
2ஜி-ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் எமக்கு எதிராக சி.பி.ஐ. பதிவு செய்துள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை. அவற்றை ரத்து செய்ய வேண்டும்” என்பதே கனிமொழியும், சரத் குமாரும் தாக்கல் செய்திருந்த மனு.
இன்றைய விசாரணையில் சி.பி.ஐ. வக்கீல் என்ன சொல்லப் போகிறார் என்பதில்தான் இருக்கிறது, கனிமொழி இந்த வழக்கில் இருந்து கழட்டி விடப்படுவதும், தொடரப் போவதும். “இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் எதுவும் எம்மிடம் கிடையாது” என்று சி.பி.ஐ. ஒற்றை வார்த்தை கூறினால், கனிமொழியும் கலைஞரும் சிக்கலில் இருந்து அவுட்!
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு, தி.மு.க. ஆதரவு கண்டிப்பாக தேவை. தி.மு.க. ஆதரவை கோரி, பாதுகாப்புதுறை அமைச்சர் ஏ.கே.ஆன்டனியே சென்னைக்கு நேரில் வந்துவிட்டு சென்றிருக்கிறார்.
அவரை கருணாநிதி சந்தித்த இடம், சி.ஐ.டி. காலனியில் உள்ள ராசாத்தி அம்மாள்-கனிமொழி இல்லம்.
ஆதரவு கேட்டு வந்த மத்திய அமைச்சருடனான சந்திப்பின்போது எடுக்கப்பட்ட போட்டோக்களில், அரசியலுக்கு சம்மந்தமில்லாத ராசாத்தி அம்மாள், மற்றும் கனிமொழி ஆகியோரும் நிற்கும் போட்டோக்களே தி.மு.க. தரப்பால் மீடியாக்களுக்கு வழங்கப்பட்டன.
ராசாத்தி அம்மாளின் வற்புறுத்தல் காரணமாகவே சந்திப்பு சி.ஐ.டி. காலனியில் நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்களில் தாமும் கனிமொழியும் இருக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததும் ராசாத்தி அம்மாள்தான் என்பதே தி.மு.க. வட்டாரங்களில் இருந்து தெரியவரும் தகவல்.
இதை வைத்துக்கொண்டு, இன்று கனிமொழி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வரும்போது, சி.பி.ஐ. கனிமொழிக்கு சாதகமான பதிலைக் கூறலாம், அல்லது வீரியமற்ற ‘ஏனோ-தானோ’ பதிலைக் கூறலாம் என்ற எதிர்பார்ப்பு, தி.மு.க. டில்லி வட்டாரங்களில் உள்ளது. “தலைவர் தமது சொந்த மகள்மீது வழக்கு உள்ளபோது, எப்படி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரிக்க முடியும் என்று ஆன்டனியை நேரடியாகவே கேட்டுவிட்டார்” என்றார் நாம் தொடர்பு கொண்ட தி.மு.க. எம்.பி. ஒருவர்.
கனிமொழி தாக்கல் செய்துள்ள புகார் மீதான இன்றைய விசாரணை, டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எல். மேத்தாவின் பெஞ்ச்சுக்கு வரும் என்று தெரிகிறது.
கனிமொழி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், தவறான புரிந்துணர்வு காரணமாகவும், முறையாக ஆராயப்படாத ஆவணங்களின் அடிப்படையிலும் எனக்கு எதிரான குற்றச்சாட்டை பதிவு செய்ய கடந்த அக்டோபர் 23-ம் தேதி அனுமதி வழங்கியது தவறு“ என்று கூறப்பட்டுள்ளது.
“கலைஞர் டி.வி.க்கு பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் 2008 டிசம்பர் முதல் 2009 ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்தில், அந்த நிறுவனத்தில் 20 சதவீத பங்குகளை மட்டும் வைத்திருந்தேன். முக்கிய முடிவுகளை எடுக்கும் இயக்குநர்கள் குழு கூட்டத்தில்கூட கலந்து கொண்டதில்லை. அத்துடன், எந்த ஒப்பந்தத்திலும், நிதி ஆவணங்களிலும் எனது கையொப்பம் கிடையாது. அப்படியிருந்தும், பொருந்தாத சட்டப் பிரிவுகளின்படி சி.பி.ஐ. என்மீது வழக்கு பதிவு செய்துள்ளது. அவற்றை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
சரத் குமாரும் இதேபோல், சி.பி.ஐ. நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்று தனது மனுவில் கோரியுள்ளார்.
இன்றைய விசாரணையில் என்ன நடக்கும் என தி.மு.க. வட்டாரங்களில் எதிர்பார்க்கிறார்கள்?
சி.பி.ஐ., “கனிமொழி கூறியிருப்பது உண்மைதான்” என்பதை ஒப்புக் கொள்ளலாம். கனிமொழியின் வக்கீல், “அப்படியானால், கனிமொழி மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தவறான சட்டப்பிரிவில் பதிவாகியுள்ளதை ஒப்புக் கொள்கின்றீர்களா?” என்று கேட்டால், சி.பி.ஐ. வக்கில், “ஆம்” என்று பதில் அளிக்கலாம் என்று தி.மு.க. வட்டாரங்களில் ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு உள்ளது.
மேலேயுள்ள கேள்விக்கு “ஆம்” என்று கூறி, தமது ஜனாதிபதி வேட்பாளருக்கு ”ஆம்” என்ற பதிலை தி.மு.க.-விடம் இருந்து காங்கிரஸ் பெறப்போகிறதா என்பது இன்று தெரிந்து போகலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக