திங்கள், 23 ஏப்ரல், 2012

உதயநிதி Stalin: ஆங்கில பெயர் தான் மக்களிடம் போய் சேரும்

மதுரை :""சினிமா படங்களை பொறுத்தவரை ஆங்கிலப் பெயர் தான் மக்களிடம் "ரீச்' (போய்ச்சேரும்) ஆகும்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மகன் உதயநிதி தெரிவித்தார்.

மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: என் படத்தில் சில குறைகள் உள்ளன. முதல் படம் என்பதால், அடுத்து திருத்திக் கொள்வேன். மதுரையில் கூடுதல் கட்டணம் வசூலித்த தி.மு.க., பிரமுகரின் தியேட்டர் பிடிபட்டதாக கேள்விப்பட்டேன். கூடுதலாக வசூலிப்பது தவறு தான். படத்தின் தலைப்பான "ஒருகல் ஒரு கண்ணாடி'யை, "ஓகே, ஓகே' என, ஆங்கிலத்தில் சுருக்கியதால், மக்களிடம் எளிதில் "ரீச்' ஆனது. கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் என்பதை தகுதியாக வைத்து, என்னை அரசியலில் முடிச்சு போடுகின்றனர்.நான் அரசியலுக்கு வருவது, தி.மு.க., இளைஞரணிக்கும், கட்சிக்கும் நல்லதல்ல. பொறுப்புகள் பெற, கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்த எத்தனையோ பேர் உள்ளனர், என்றார்.


படம் பார்க்காத அழகிரி: தனது படத்தை பார்த்து குடும்பத்தார் அனைவரும் பாராட்டியதாக உதயநிதி கூறினார். "உங்கள் பெரியப்பா (அழகிரி) என்ன சொன்னார்?' என, கேட்டபோது, ""இரண்டு நாட்களுக்கு முன், அவர் என்னிடம் பேசினார். இன்னும் படம் பார்க்கவில்லை, நன்றாக நடித்துள்ளதாக கேள்விப்பட்டேன் எனக்கூறி, வாழ்த்து தெரிவித்தார்,'' என்றார்.

அழகிரி பேச்சை மீறி ஸ்டாலின் மகனுக்கு வரவேற்பு: மத்திய அமைச்சர் அழகிரி ஊரில் இல்லாத சமயத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மதுரையில் இளைஞரணி நேர்காணல் நடத்தியதால், கட்சியில் பூகம்பமே ஏற்பட்டது. விழா ஏற்பாட்டில் அழகிரி பெயர் இல்லாததால், ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தை, அழகிரி ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். அவர்களுக்கு, கட்சி தலைமை நோட்டீஸ் அனுப்பியது. மதுரை திரும்பிய அழகிரி, ""யாரையும் வரவேற்க வேண்டும் என்று, எந்த சட்டமும் தி.மு.க.,வில் இல்லை,'' என, காட்டமாக பதிலளித்தார். ஸ்டாலினை புறக்கணித்த அழகிரி ஆதரவாளர்கள் மீது, தி.மு.க., தலைமை எடுக்கும் நடவடிக்கையை, அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், தான் நடித்த படத்தை பார்வையிட, ஸ்டாலின் மகன் உதயநிதி நேற்று மதுரை வந்தார். வரவேற்பு குறித்து அழகிரியின் எச்சரிக்கையை மீறி, தலைமை செயற்குழு உறுப்பினர் வேலுச்சாமி, முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், நகர செயலாளர் தளபதி, இளைஞரணி அமைப்பாளர் ஜெயராமன், மீனவரணி செயலாளர் மணிமாறன் உட்பட தி.மு.க.,வினர், உதயநிதியை வரவேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக