திங்கள், 9 ஏப்ரல், 2012

Chennai IIT மாணவன் குல்தீப் தற்கொலை..நெஞ்சுக்குள் ஏன் புகுந்தாய்

சென்னை: ஐஐடி மாணவன் குல்தீப் தற்கொலை செய்வதற்குமுன் காதலிக்கு எழுதிய உருக்கமான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
காதல் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்துக்கொண்ட குல்தீபின் அறையை போலீசார் சோதனை செய்தனர் அப்போது குல்தீப் இறப்பதற்கு முன் தனது காதலிக்கு இந்தியிலும், ஆங்கிலத்திலும் உருக்கமான, நெஞ்சை நெகிழ வைக்கும் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
உருக்கமான கடிதம்
நெஞ்சுக்குள் ஏன் புகுந்தாய் என்ற தலைப்பில் அந்த கடிதத்தை எழுதி இருக்கிறார்.
அதில், 2 ஆண்டுகளாக எனது நெஞ்சை உன்னிடம் தொலைத்து விட்டு, தேடினேனே....காதல் சின்னம் தாஜ்மகால் உள்ள ஆக்ரா எனது ஊர். அதுபோல நானும் ஒரு காதல் சின்னத்தை உனக்காக படைக்க நினைத்தேன். ஆனால் நீ என்னை பிரிந்தாய். அதனால் நான் உலகத்தை விட்டே பிரிகிறேன் என்பன போன்ற காதல் கவிதைகளை குல்தீப் எழுதி இருந்தார்.

இந்தியில் எழுதப்பட்டிருந்த மேலும் பல வாசகங்கள் அர்த்தம் புரியவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.

தற்கொலை தீர்வாகாது

இறப்பதற்கு முன்பு குல்தீப், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது காதலிக்கு எஸ்.எம்.எஸ்.தகவல் அனுப்பி உள்ளார். அதற்கு அவரது காதலி அனுப்பிய பதில் தகவலில்....நீ எத்தனையோ இரவுகள் எனது தூக்கத்தை கெடுத்து இருக்கிறாய். இப்போது, நமது இருவரின் நலன் கருதிதான், நாம் பிரிந்து விட வேண்டும் என்ற முடிவை நான் எடுத்துள்ளேன். இப்போது நமக்கு படிப்புதான் முக்கியம். தற்கொலை முடிவு நமது பிரச்சினையை தீர்க்காது. அந்த கோழைத்தனமான முடிவை நீ கைவிட வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார்.

குல்தீப் தனது காதலியான சக மாணவியோடு, மிகவும் நெருக்கமாக சுற்றியுள்ளார். இருவரும் தூங்கும் நேரம், படிக்கும் நேரம் தவிர ஒன்றாகவே இருப்பார்கள் என்று சக மாணவ-மாணவிகள் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர். திடீரென்று காதலி விலகிப்போனதை பெரும் ஏமாற்றமாக கருதிதான் குல்தீப் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.

தொடரும் தற்கொலைகள்

ஏற்கனவே கடந்த ஆண்டில் ஐ.ஐ.டி.யில் இதுபோல் 2 மாணவர்கள் தற்கொலை மூலம் இறந்துள்ளனர். அதில் ஒரு மாணவர் காதல் பிரச்சினையால்தான் இறந்தார். இப்போது அதே ஐ.ஐ.டி.யில் இன்னொரு மாணவரின் உயிரை காதல் குடித்து விட்டது.

சென்னையில் குறிப்பாக என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் அதிக அளவில் அடிக்கடி நடக்கிறது. கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழக மாணவர் மணிவண்ணன் பரீட்சையில் 26 பாடங்களில் பெயில் ஆகி, அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக மாணவர்கள் இது போன்ற பிரச்சினைகளில் சிக்கி உயிரை விடுவதை தடுக்க கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் கருத்தாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக