செவ்வாய், 10 ஏப்ரல், 2012

கேகேஎஸ்எஸ்ஆர் கைது ஜெயலலிதா அரசின் பழிவாங்கும் நடவடிக்கை


KKSSR Ramachandran
விருதுநகர்: முன்னாள் திமுக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் இன்று கைது செய்யப்பட்டார்.
அருப்புக்கோட்டை ஒன்றியம் பந்தல் குடியைச் சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் சாகுல் ஹமீது. இவருக்கும், சேதுராஜபுரத்தைச் சேர்ந்த போஸ்ட் மாஸ்டர் லட்சுமணனின் மனைவிக்கும் தொடர்பு இருந்துள்ளது.
இந் நிலையில் கடந்த 2007ம் ஆண்டு லட்சுமணன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அப்போது போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் யாரையும் கைது செய்யவில்லை.
இந் நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த வழக்கு தூசி தட்டப்பட்டது. தற்போது விருதுநகர் மாவட்ட எஸ்.பி. பொறுப்பை கூடுதலாக கவனித்து வரும் மதுரை எஸ்.பி. அஸ்ரா கார்க் இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதில் கள்ளக்காதல் விவகாரத்தை லட்சுமணன் கண்டித்ததால், அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
லட்சுமணனை இருவரும் சேர்ந்து தலையில் அடித்து தாக்கி கொலை செய்துவிட்டு பின்னர் பிணத்தை காரில் ஏற்றி புதருக்குள் வீசி விட்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சாகுல் ஹமீதும் மாரியம்மாளும் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் சாகுல் ஹமீது கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அப்போது அமைச்சராக இருந்த கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சாட்சியங்களை மறைத்து வழக்கில் இருந்து சாகுல் ஹமீதை தப்பிக்க வைத்தாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த வழக்கில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு நிலவியது. இதையடுத்து அவர் முன் ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை வியாழக்கிழமை மீண்டும் நடைபெற உள்ளது.

இந் நிலையில் கேகேஎஸ்எஸ்ஆரை கைது செய்வதற்காக, எஸ்.பி (பொறுப்பு) சேகர் தலைமையிலான படை இன்று காலை அவரது விருதுநகர் வீட்டுக்குச் சென்றது. ஆனால், அவர் வீட்டில் இல்லை. அவர் தலைமறைவாகிவிட்டதாக போலீசார் கூறினர்.

இதையடுத்து கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனின் மகன் ரமேஷை இருக்கன்குடி போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள காவல் நிலையத்தில் வைத்து ரமேஷ் மற்றும் திமுக தொழிற்சங்கச் செயலாளர் பாலகிருஷ்ணனிடமும், கேகேஎஸ்எஸ்ஆர் தங்கியுள்ள இடம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சென்னையில் இருப்பது தெரியவந்தது.

விமானம் மூலம் திரும்பி வந்த கேகேஎஸ்எஸ்ஆர்:

இதற்கிடையே இந்த விவகாரத்தில் தனது மகனை போலீசார் விசாரிப்பது தெரிந்ததும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விமானம் மூலம் மதுரை திரும்ப முடிவு செய்தார். அவர் மதுரை விமான நிலையம் வரவுள்ளதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்ததையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

மதுரை விமான நிலையம் வந்த கேகேஎஸ்எஸ்ஆர், அங்கிருந்து காரில் கிளம்பினார். ஆனால், அவரை அங்கு வைத்து போலீசார் கைது செய்யவில்லை. அவரது காரை போலீசார் பின் தொடர்ந்தனர்.

சாத்தூர் கோர்ட்டில் கேகேஎஸ்எஸ்ஆர் சரண் அடைவார் என்று தகவல் பரவியதையடுத்து அங்கு ஏராளமான பத்திரிகையாளர்களும், திமுகவினரும் குவிந்தனர்.

இந்நிலையில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்ட எல்லையான ஆவல்சூரம்பட்டி விலக்கை அடைந்தவுடன் அங்கு வைத்து போலீசார் அவரை கைது செய்தனர். கட்சிக்காரர்களுடன் வந்த அவரை, காரை விட்டு இறக்கிய போலீசார் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு கிளம்பினர்.

பின்னர் சூலக்கரை காவல் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்ற போலீசார் அங்கு அவரிடம் விசாரணை நடத்தினர். மாலை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது.

கேகேஎஸ்எஸ்ஆர் மகன் கடத்தப்பட்டதாக வதந்தி:

முன்னதாக கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனின் மகன் ரமேஷ். விருதுநகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து இன்று அதிகாலை ஐந்தரை மணி அளவில் ஒரு கும்பலால் கடத்திச் செய்யப்பட்டதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து கேகேஎஸ்எஸ்ஆர் ஆதரவாளர்கள் அவரது வீட்டருகே குவிந்தனர்.

இந் நிலையில் கேகேஎஸ்எஸ்ஆரை கைது செய்வதற்காக அவரது மகனை போலீசார் தான் விசாரணைக்காக அழைத்துச் சென்றது தெரியவந்தது.

ஜெயலலிதா அரசின் பழிவாங்கும் நடவடிக்கை-கேகேஎஸ்எஸ்ஆர்:

முன்னதாக மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்,

சம்மந்தமில்லாத வழக்கில் என்னை சேர்த்துவிட்டு தற்போது எனது குடும்பத்தார் மீதும் பொய் வழக்கை புனைந்துவிட்டு போலீஸ் செய்யும் நாடகத்திற்கு, ஜெயலலிதாவும் அவரது அரசாங்கமும் செய்யும் பழிவாங்கும் நடவடிக்கையே காரணமாகும்.

என் மீதும் என் குடும்பத்தார் மீதும் போடப்படும் வழக்குகள் அனைத்தும் பொய்யானவை. என்னை திட்டமிட்டு திமுகவில் இருந்து வெளியேற அதிமுக அரசு சதி செய்து வருகிறது. அதற்கு போலீசும் துணை போகிறது.

திமுகவினரை கஷ்டப்பட்டுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக தொடர்ந்து பொய் வழக்குகளை போட்டு வருகிறார்கள். பொய் வழக்குகளை சட்டப்படி தலைவர் கலைஞர் ஆசியுடன் சந்திப்பேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக