வெள்ளி, 20 ஏப்ரல், 2012

அழகிரி: ஸ்டாலினை வரவேற்க வேண்டும் என்பது திமுகவில் சட்டமா என்ன?

மதுரையில் மு.க.ஸ்டாலின் நடத்திய திமுக இளைஞரணி நிர்வாகிகள் தேர்வு குறித்தும், அவர் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் குறித்தும் எனக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.
முன்னதாக மதுரையில் திமுக இளைஞரணி நிர்வாகிகளைத் தேர்வு செய்ய அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடத்திய நேர்காணலையும், ஸ்டாலின் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தையும் மதுரை மாவட்டத்தின் அனைத்து திமுக நிர்வாகிகளும் புறக்கணித்தனர்.
பொதுக் கூட்டத்துக்கு திமுக சார்பில் போலீசாரிடம் அனுமதி வாங்கிய திமுக பிரமுகரே கூட்டத்துக்கு வரவில்லை.
மேலும் கூட்ட ஏற்பாடுகளை செய்யக் கூட ஆள் இல்லாமல் தடுமாறிவிட்டனர் இளைஞரணியினர். வெளி மாவட்டங்களில் இருந்து திமுகவினரை வரவழைத்துத் தான் அந்த வேலையை செய்து முடித்தனர்.

அழகிரியின் உத்தரவின் பேரிலேயே திமுகவினர் ஸ்டாலினை புறக்கணித்தனர் என்பது சின்னப் புள்ளைக்குக் கூடத் தெரியும் என்பதால், இந்த விவகாரத்தை திமுகவால் மூடி மறைக்க முடியவில்லை.

கூட்டத்தை புறக்கணித்தது குறித்து விளக்கம் கேட்டு அழகிரி ஆதரவாளர்களுக்கு திமுக அமைப்புச் செயலர் டிகேஎஸ் இளங்கோவன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந் நிலையில், அரசு முறை பயணமாக சீனா சென்று விட்டு மதுரை திரும்பிய அமைச்சர் அழகிரி நிருபர்களிடம் பேசுகையில், திமுக பொருளாளர் ஸ்டாலின் நேர்காணல் மற்றும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்தது குறித்து எனக்கு முன்பே தகவல் தெரிவிக்கப்படவில்லை.

அப்படி வருபவர்களை வரவேற்க வேண்டும் என்று திமுகவில் சட்டம் ஏதும் இல்லை. மதுரையில் ‌நேற்று நடைபெற்ற ரகசிய கூட்டம் பற்றிய விபரமும் எனக்குத் தெரியாது. இப்போதுதான் சீனாவில் இருந்து வந்துள்ளேன். கட்சிப் பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக