செவ்வாய், 17 ஏப்ரல், 2012

சங்கரராமன் மனைவிக்கு போலீஸ் பாதுகாப்பு

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடைபெற்று வக்கீல்கள் வாதம் நடைபெற்று வருகிறது.

இதில் அரசு தரப்பு சிறப்பு வக்கீல் தேவதாஸ் வாதத்தை முடித்துக் கொண்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வக்கீல்கள் வாதம் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் கொலையுண்ட சங்கரராமனின் மனைவி பத்மா, மகன் ஆனந்த் சர்மா ஆகியோர் தங்களிடம் மறு விசாரணை நடத்த வேண்டுமென கோரி ஒரு மனுவை நீதிபதி முருகனிடம் சில நாட்களுக்கு முன்பு அளித்து இருந்தனர். அந்த மனுவில் தங்களை சிலர் மிரட்டியதால் பிறழ் சாட்சியம் அளித்ததாக கூறி இருந்தனர்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி முருகன் இந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

இதன்படி இன்று கோர்ட்டில் அன்றாட பணிகள் முடிந்த முன்பு நீதிபதி முருகன் மனு மீதான விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

இந்த மனுவுக்கு குற்றம் சாட்டப்பட்டவர்களில் சுந்தரேச அய்யர், அப்பு, கதிரவன் ஆகியோர் எதிர் மனுதாக்கல் செய்திருந்தனர். ஆனால் மற்றவர்கள் எதிர்மனுதாக்கல் செய்யவில்லை. இதனால் நீதிபதி முருகன் மீதம் உள்ள 21 பேரும் நாளைக்குள் எதிர் மனுதாக்கல் செய்யலாம் என்றும், இதன்பிறகு நாளையே விசாரணை தொடங்கும் என்றும் கூறினார்.
இதற்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் தேவதாஸ் மறுவிசாரணை நடத்த தங்களது தரப்பில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று கூறினார். இதனால் இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும். இதற்கிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் 13 பேர் மட்டுமே கோர்ட்டில் ஆஜரானார்கள். 11 பேர் ஆஜராகவில்லை.
இன்று கோர்ட்டில் ஆஜரான பத்மா மற்றும் அவரது மகன் ஆனந்ந் சர்மாவை காஞ்சிபுரத்தில் உள்ள அவர்களது வீட்டுக்கு கோர்ட்டுக்கு வந்திருந்த சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரனிடம் பாதுகாப்போடு அழைத்து செல்லும் வேண்டும் என்று நீதிபதி முருகன் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக