வெள்ளி, 20 ஏப்ரல், 2012

நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்: ஸ்டாலின் - அழகிரி மோதலாக ரூபம் எடுக்கிறது

மதுரை மாவட்ட தி.மு.க.,வினர் 17 பேருக்கு, நோட்டீஸ் அனுப்பிய விவகாரம், அழகிரி - ஸ்டாலின் மோதலாக மாறி, கட்சியில் பெரும் புயலைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் நியமனம், கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. கடந்த 15ம் தேதி, மதுரை சென்றிருந்த கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், அந்த மாவட்டத்தில், இளைஞரணி நிர்வாகிகளை தேர்வு செய்து நியமித்தார். மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை, தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அழகிரி, சீனா சென்றிருந்தபோது, ஸ்டாலின் இந்த கூட்டத்தை நடத்தியது, கட்சிக்குள் கோஷ்டிப் பூசலை உருவாக்கியது. ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது, பேனர் வைப்பது, கூட்டத்தில் கலந்து கொள்வது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், அங்குள்ள தி.மு.க., முக்கிய நிர்வாகிகள், தங்கள் கோஷ்டி அரசியலைக் காட்டினர்.


முறைப்படி விளக்கம்: உடனிருந்து பொறுப்புகளை செய்ய வேண்டியவர்கள் ஒதுங்கி இருந்ததால், 17 பேருக்கு, கட்சி மேலிடம் நோட்டீஸ் அனுப்பியது. அழகிரி ஆதரவாளர்களான அவர்களுக்கு, கட்சி மேலிடம் நோட்டீஸ் அனுப்பியது, கட்சிக்குள் புயலைக் கிளப்பியுள்ளது. "கட்சித் தலைமை அனுப்பியுள்ள நோட்டீசுக்கு, முறைப்படி விளக்கம் அளிப்போம்' என்று, ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகியுள்ள நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

சீனாவிலிருந்து திரும்பினார்: அழகிரி, கடந்த 17ம் தேதி, சீனாவில் இருந்து இந்தியா திரும்பினார். சென்னையில் தங்கியுள்ள அழகிரி, இன்று தான் மதுரை செல்கிறார். அவர் மதுரை சென்றதும், அவரது ஆதரவாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம், விஸ்வரூபம் எடுக்கும் என்று, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத கட்சி நிர்வாகி ஒருவர் கூறும்போது, ""மதுரை மாவட்ட தி.மு.க.,வினர், இதுபோன்ற நோட்டீசுக்கெல்லாம் பயப்படுபவர்கள் அல்ல. அங்கு, அழகிரி தென் மாவட்ட தி.மு.க., முழுவதையும், தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அங்கு, அவருடன் இருக்கும் ஒவ்வொருவரையும், கோடீஸ்வரர்களாக உருவாக்கி விட்டுள்ளார். அப்படி இருக்கும்போது, அழகிரிக்கு அவர்கள் விசுவாசமாக இருக்காமல் என்ன செய்வார்கள்? அழகிரி மீது, தென் மாவட்ட தி.மு.க., வினர், வெறி பிடித்தவர்கள் போல் ஆதரவாளர்களாக உள்ளனர்.

சும்மா கிடந்த சங்கை...: ஸ்டாலின், காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற இடங்களில், நிர்வாகிகளை நியமிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், தேவையில்லாமல், அழகிரி ஊரில் இல்லாத நேரம் பார்த்து, மதுரைக்குச் சென்று, சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்துள்ளார். தலைவரின் (கருணாநிதி) குடும்பத்தினர் அனைவரும், அழகிரி பக்கம் தான். தலைவர் மட்டும் தான், ஸ்டாலினுக்கு ஆதரவாக உள்ளார். தென் மாவட்டங்களில், ஸ்டாலின் நியமித்த அனைவரையும் கலைத்துவிட அழகிரி முடிவு செய்துள்ளார். இது, கட்சியில் பெரும் பிரச்னையை கிளப்பும்,'' என்றார்.

அழகிரியால் நீக்க முடியாது: ஸ்டாலின் ஆதரவு நிர்வாகி ஒருவர் கூறும்போது, ""கட்சியினருக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பது, வெறும் சடங்கு தான். அதற்கு, அவர்கள் விளக்கம் கொடுத்தால் போதும். கட்சித் தலைமை சமாதானமாகி விடும். மற்றபடி, ஸ்டாலின் நியமித்த இளைஞரணி நிர்வாகிகளை, அழகிரியால் நீக்க முடியாது. அது, கட்சியின் சட்டதிட்ட விதிகளுக்கு எதிரானது. அப்படிச் செய்தால், கட்சியில் பெரும் புயலைக் கிளப்பிவிடும்,'' என்றார். இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நோட்டீஸ் விவகாரம், என்ன ஆகப் போகிறது என்பது, இன்று மதுரை சென்றதும், அழகிரி எடுக்கப் போகும் அதிரடி நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நகர செயலர் பதவிக்கு துவங்கியது "கோஷ்டி போர்': நகர தி.மு.க., செயலரை மாற்றி விட்டு, அவரது பதவியைப் பிடிக்க, அழகிரி - ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு இடையே போட்டி தீவிரமடைந்துள்ளது. மதுரை நகர் தி.மு.க., செயலர் தளபதி அழகிரியின் வி”வாசி. நகர செயலர் பொறுப்பில் இருந்ததால், ஸ்டாலின் நிகழ்ச்சியை புறக்கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அழகிரி ஆதரவாளர்கள், தளபதிக்கு கடும் நெருக்கடி கொடுக்கத் துவங்கியுள்ளனர். இதனால், தலைமைக்கு அவர் ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளதாக, கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. அவரது ராஜினாமா ஏற்கப்பட்டால், செயலர் பதவியைப் பிடிக்க ஸ்டாலின் ஆதவாளரான முன்னாள் எம்.எல்.ஏ., வேலுச்சாமிக்கும், அழகிரி ஆதரவாளரான முன்னாள் துணை மேயர் மன்னனுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்காக, மதுரையில் உள்ள பகுதி செயலர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். மேலும், மாநில நிர்வாகிகளையும் சந்தித்து, அதற்கான காய் நகர்த்தலிலும், இருதரப்பினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாகவே, மதுரை நேர்காணல் நிகழ்ச்சியில், ஸ்டாலின் ஆதரவாளரான வேலுச்சாமி பங்கேற்றதும், அழகிரி ஆதரவாளரான மன்னன் புறக்கணித்தது என, கட்சி முக்கிய நிர்வாகிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக