புதன், 25 ஏப்ரல், 2012

ஜெயலலிதா, கம்யூனிஸ்ட் தலைவருக்கு நல்லெண்ண சிக்னல்!

Viruvirupu,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வீணாக அலையக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், புதுக்கோட்டை தொகுதிக்கு தமது கட்சி வேட்பாளரை அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
தேர்தல் கமிஷனே தேர்தல் தேதியை நேற்று (செய்வாய்க்கிழமை) மாலைதான் அறிவித்தது. தமிழகத்தின் மற்றைய கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்ற முடிவைக்கூட இன்னமும் எடுக்கவில்லை. அப்படியான நிலையில் முதல்வர் ஜெயலலிதா நினைத்திருந்தால், தமது கட்சியின் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமல் தாமதம் செய்திருக்க முடியும்.
வேட்பாளர் மனு தாக்கல் செய்ய வேண்டிய இறுதி நாளில்கூட வேட்பாளரின் பெயரை ஜெயலலிதா அறிவித்திருக்க முடியும்.
அப்படிச் செய்திருந்தால் பாதிப்பு யாருக்கு?

மக்களுக்கல்ல! (அவர்கள் இடைத்தேர்தலில் வேட்பாளரைப் பார்த்து ஓட்டு போடுவதில்லை. ஒரு வெள்ளாட்டை நிறுத்தினாலும், பைசா வாங்கிக் கொண்டு, இரட்டை இலைக்கு குத்திவிட்டு போவார்கள்)
அமைச்சர்களுக்கல்ல!! (வேட்பாளர் எந்த வெ.ஆ.வாக இருந்தாலும், தொகுதிக்குள் “எம் கடன் பணிசெய்து கிடப்பதே”)
அம்மா வேட்பாளரின் பெயரை கடைசி நிமிடத்தில் அறிவித்தால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குத்தான் பாதிப்பு!!! அவர்கள் பாதிக்கப்பட கூடாது என்ற நல்லெண்ணத்தில், தேர்தல் கமிஷன் தேதி அறிவிக்கும் முன்னரே வேட்பாளரை அறிவித்திருக்கிறார் புரட்சித் தலைவி.
இந்த அறிவிப்புக்கு கம்யூனிஸ்ட் தோழர்கள் அம்மாவுக்கு வாழ்நாள் பூராவும் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும்.
அம்மா அவர்கள், தமது கட்சியின் வேட்பாளரை தாமதமாக அறிவித்தால், கம்யூனிஸ்ட் கட்சிக்கு என்ன பாதிப்பு?
கொஞ்ச நஞ்ச அலைச்சலா அது? கட்சி அலுவலகத்துக்கும் கார்டனுக்கு இடைய எத்தனை தடவைகள் அலைய வேண்டும்! “போய்யா.. போய்யா..” என்று துரத்தினாலும், முகத்தில் உணர்ச்சி எதையும் காட்டாமல், “அ.தி.மு.க. உயர்மட்ட குழுவுடன் (!) பேசிக்கொண்டு இருக்கிறோம்” என்று செய்தியாளர்களுக்கு சொல்ல வேண்டும்.
அதுவும் கம்யூனிஸ்ட் கட்சி, அவமானங்களை கண்ணெடுத்தும் பார்க்கும் கட்சி அல்ல. கடந்த உள்ளாட்சித் தேர்தல்களுக்குமுன், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த மற்றைய கட்சிகள் எல்லாம், “இனிமேல் கூடாரத்துக்குள் எமக்கு இடமில்லை” என்று புரிந்து கொண்டு தமது சோலியை பார்க்க சென்றுவிட்ட பின்னரும், கடைசி ஆளாக தனியே போயஸ் கார்டன் வாயிலில் தொங்கிக் கொண்டிருந்த கட்சி, என்ற பெருமையுடைய கட்சியல்லவா கம்யூனிஸ்ட் கட்சி.
இவர்களது சக தோழர்களான மாக்சிஸ்ட் கட்சிகூட ஒதுங்கிவிட்ட பின்னரும்,  தா.பாண்டியனோ இன்னும் கொஞ்சம் கெஞ்சிப் பார்க்கலாம் என்று தன் சார்பாக பழனிச்சாமியை தோட்டத்திற்கு அனுப்பி வைத்தார். பழனிச்சாமியின் செருப்புதான் தேய்ந்ததே ஒழிய தோட்டத்தின் கதவுகள் திறக்கவில்லை.
இம்முறை அதுபோன்ற அவமானங்கள் எதுவும் பாரம்பரியம் மிக்க அந்தக் கட்சிக்கு ஏற்படக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், தமது வேட்பாளரின் பெயரை முன்கூட்டியே அறிவித்திருக்கிறார் அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா. இதன்மூலம் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு அவர் கொடுத்துள்ள சிக்னல், “கார்டன் பக்கம் சும்மா சும்மா வராதீர்கள் பிளீஸ்”
அ.தி.மு.க., வேட்பாளராக கார்த்திக் தொண்டைமான் அறிவிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். இவரது தந்தை விஜயரகுநாத தொண்டைமான் மூன்று தடவைகள் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.
கார்த்திக் தொண்டைமான் தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். பின்னர் தி.மு.க.வில் இணைந்தார். 2005ம் ஆண்டு அ.தி.மு.க.வில் சேர்ந்தார். 42 வயதிலும் இளைஞராக இருப்பதால், அ.தி.மு.க.வில் மாவட்ட இளைஞரணி தலைவராகவும் உள்ளார்.
இவரை வேட்பாளராக அறிவித்ததன் மூலம், கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும் உதவி செய்ததுடன் நிறுத்திக் கொள்ளவில்லை புரட்சித் தலைவி. புதுக்கோட்டை மக்களுக்கும் அரிய சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
தமிழக அமைச்சர்களுடன் ‘குரூப் போட்டோ’ எடுத்துக் கொள்ளலாம் என்பது அரிய சந்தர்ப்பம் இல்லையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக