வியாழன், 26 ஏப்ரல், 2012

முல்லை பெரியாறு: உயர்மட்டக்குழு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்

புதுடில்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான உயர்மட்டக்குழு நேற்று தன் அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை மே 4ம் தேதி உச்சநீதிமன்றம் பரிசீலிக்கும்.
தமிழக - கேரள எல்லையில், இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை 116 ஆண்டு பழமையானது. இந்த அணை பலவீனமடைந்து விட்டதாகவும், அதற்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என, கேரளா கூறி வந்தது. அதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது.
மேலும், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

உயர்மட்ட குழு: முல்லைப் பெரியாறு அணை குறித்த பிரச்னைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க, நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் உயர்மட்ட குழுவை, 2010 பிப்ரவரி 17ம் தேதி உச்சநீதிமன்றம் நியமித்தது. இக்குழுவில், தமிழகம் சார்பில் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் மற்றும் கேரளா சார்பில் நீதிபதி கே.டி.தாமஸ் ஆகியோர் பிரதிநிதிகளாக இடம் பெற்றனர். இக்குழு இரண்டு முறை முல்லை பெரியாறு அணை பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டது. அத்துடன் இருபதுக்கும் மேற்பட்ட முறை கூடி விவாதித்தது. அணையின் உறுதி தன்மை குறித்து, பல்வேறு வல்லுனர்களை கொண்டு பரிசோதித்தும் அறிக்கை பெற்றது.

அறிக்கை தாக்கல்: இவற்றின் அடிப்படையில், 260 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை தயார் செய்த உயர்மட்டக் குழு, அதை கவரில் வைத்து மூடி முத்திரையிட்டு, நேற்று உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை உச்சநீதிமன்றம் அடுத்த மாதம் 4ம் தேதி பரிசீலிக்கும். இதில், தமிழகத்திற்கு சாதகமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளதா என்பது குறித்து கோர்ட் பரிசீலனையின் போதுதான் தெரிய வரும்.

தகவல் இல்லை: உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை குறித்து, கேரள முதல்வர் உம்மன் சாண்டியிடம் நிருபர்கள் கேட்ட போது, அவர், ""முல்லைப் பெரியாறு அணை சம்பந்தமாக, உயர்மட்ட குழுவிடம் கேரள அரசு சார்பில், பல்வேறு தகவல்களை தெளிவாக விவரித்துள்ளோம். "தமிழகத்திற்கு தண்ணீர், கேரளாவுக்கு பாதுகாப்பு' என்பது தான் கேரள அரசின் உறுதியான நிலைபாடு. இது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை குறித்து கேரள அரசுக்கு இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே, அதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்க இயலாது,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக