வெள்ளி, 27 ஏப்ரல், 2012

மக்கள் நலப் பணியாளர் வழக்குகள் முடிவுக்கு வந்தன

தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணி நீக்கம் செய்யப்பட்ட ஏறத்தாழ 13,000 மக்கள் நலப் பணியாளர்கள் தொடர்பான வழக்குக்கள் முடிவுக்கு வந்துவிட்டன. அவர்கள் அனைவர்க்கும் ஐந்து மாத கால ஊதியம் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் உத்திரவாதத்துடன் வழக்குக்களை முடித்துக்கொள்ள பணியாளர்கள் ஒத்துக்கொண்டனர்.
எதிர்வரும் மே மாதத்துடன் அவர்கள் பணிக்காலம் முடிவடையவிருக்கும் நிலையில் அவர்களை நீக்கியது சரியா என்ற கேள்விக்கு பதிலளிக்காமல், பணிக்காலம் முடிவடைந்த பிறகு அவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவது குறித்து முடிவெடுக்கும் பொறுப்பினையும் அரசிடமே விட்டுவிடுவதாகக் கூறி தீர்ப்பளித்தனர் நீதிபதிகள் இலிபி தர்மாராவ் மற்றும் எம்.வேணுகோபால். பணி நீக்க ஆணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையினை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரையிலும் சென்று தோல்வியுற்ற நிலையிலும், மீண்டும் அப்பணியாளர்களை பணியிலமர்த்த தமிழக அரசு மறுத்ததன் காரணமாக, அதன் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் முடித்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.
பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தவென 1990ஆம் ஆண்டில் அன்றைய திமுக அரசால் நியமிக்கப்பட்டு, பிறகு இருமுறை அ இஅதிமுக ஆட்சியில் பதவியிழந்த இவர்கள், கடந்த ஆண்டு நவம்பர் 8 அன்று பணிநீக்கம் செய்யப்பட்டனர். பணிநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரு மக்கள் நலப் பணியாளர் சங்கங்கள் வழக்குக்களை தொடர்ந்தன.

கடந்த ஜனவரியில் நீதிபதி சுகுணா பணி நீக்க ஆணை செல்லாது, நீக்கப்பட்டவர்கள் அனைவரும் மீண்டும் உடனடியாக பணியிலமர்த்தப்படவேண்டும், இடைப்பட்டகாலத்திற்கான ஊதியமும் அவர்களுக்கு வழ்ங்கப்படவேண்டும் எனக்கூறி தீர்ப்பளித்தார்.

அதை எதிர்த்து அரசு தொடுத்த மேல் முறையீட்டு வழக்கைத்தான் இன்று நீதிபதிகள் தர்மாராவ் மற்றும் வேணுகோபால் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் நீதிபதி சுகுணாவின் தீர்ப்பு செல்லுமா என்று விடையளிக்காமலேயே, முடித்துவைத்துவிட்டது.

இறுதிவரை நீக்கப்பட்டவர்களை பணியலமர்த்த மறுத்து அதில் வெற்றியும் கண்டுவிட்டது தமிழக அரசு என்று வருந்திய மக்கள் நலப் பணியாளர் முன்னேற்றச் சங்கத் தலைவர் மதிவாணன் இவ்வாறு வழக்குக்கள் முடித்துவைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து மேல் முறையீடு செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக