புதன், 18 ஏப்ரல், 2012

மாணவி தைரியலட்சுமி தற்கொலை!சென்னையில் மீண்டும் ஒரு

சென்னை: படிக்க முடியவில்லை, படிப்பு புரியவில்லை, ஆங்கிலம் தெரியவில்லை, காதலை ஏற்க மறுத்து விட்டாள் காதலி என்று பற்பல காரணங்களைக் காட்டி தற்கொலை செய்து கொள்ளும் மாணவ மாணவிகள் அதிகரித்து வரும் நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மிகக் குறுகிய காலத்தில் 2வது தற்கொலைச் சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இம்முறை தற்கொலை செய்து கொண்டது ஒரு மாணவி, அவரது பெயர் தைரியலட்சுமி என்பதுதான் பெரும் வேதனை தருவதாக உள்ளது. படிப்பு வரவில்லை என்பதற்காக இந்த அப்பாவி மாணவி தனது உயிரைத் தொலைத்திருக்கிறாள்.

முதலாம் ஆண்டு என்ஜீனியரிங் படித்து வந்தவர் தைரியலட்சுமி. விடுதியில் தங்கிப் படித்து வந்தார். விழுப்புரத்தைச் சேர்ந்தவரான தைரியலட்சுமி இன்று காலை வகுப்புக்குப் போய் விட்டு விடுதிக்குத் திரும்பினார். பிறகு அறைக் கதவை மூடிக் கொண்டு மின்விசிறியில் தூக்குப் போட்டு விட்டார். சிறிது நேரத்தில் உயிர் பிரிந்துள்ளது.

சாவதற்கு முன்பு அந்த மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தில் பாடங்கள் படிக்க கஷ்டமாக இருப்பதாகவும், படிக்க முடியாததாலும் தற்கொலை முடிவை நாடியதாக கூறியுள்ளார்.

சமீபத்தில்தான் ஒரு மாணவர் படிக்க முடியாத காரணத்தால் தற் கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மீண்டும் ஒரு மாணவ தற்கொலை நடந்திருப்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது. அதிலும் படிக்க முடியவில்லை என்ற காரணத்திற்காக மாணவர்கள் உயிரைப் பறி கொடுக்க ஆரம்பித்திருப்பது அனைவரையும் சிந்திக்க வைப்பதாக அமைந்துள்ளது.

தைரியலட்சுமி தற்கொலை குறித்து கோட்டூர்புரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக