செவ்வாய், 17 ஏப்ரல், 2012

முனிசிபாலிட்டியைப் போல மாநில அரசுகளை நடத்துகிறது மத்திய அரசு- ஜெ. ஆவேசம்

டெல்லி: நிதி ஒதுக்கீடு செய்வதிலும், பிறவற்றிலும் மாநில அரசுகளை மாநகராட்சியைப் போல நடத்துகிறது மத்திய அரசு என்று முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான முதல்வர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சின் விவரம்:
அரசியல் சாசனச் சட்டத்தில் மாநில அரசுகளின் முன்னுரிமைகள், கடமைகள் பட்டியலில் சட்டம் ஒழுங்கும், பொது அமைதியும், காவல்துறையும் முக்கிய இடத்தில் உள்ளன. மத்திய, மாநில அரசுகளின் வரம்பு என்ன, எல்லை என்ன, பணிகள் என்ன என்பதை சட்டத்தை உருவாக்கிய நமது நாட்டின் சிற்பிகள் தெளிவாக வகுத்துள்ளனர். அதன்படியே நாடாளுமன்றம், சட்டசபைகள் அமைக்கப்பட்டு அவரவர் பணிகளில் குழப்பம் ஏற்படாத வகையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில்தான் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த புரிதல் அணுகப்பட வேண்டும்.
இந்த உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில், குற்றச் செயல்கள் தடுப்பு, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான நடைமுறைகள், காவல்துறை நவீனமயமாக்கம், எல்லை பாதுகாப்பு நிர்வாகம், கடலோரப் பாதுகாப்பு, கள்ள நோட்டுக்களைத் தடுத்தல், உளவுப் பிரிவுகளை வலுப்படுத்துதல், குற்றப் புலனாய்வு விசாரணை அமைப்புகளைப் பிரித்து தனியாக அமைப்பது, சட்டம் ஒழுங்கு ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

எனது தலைமையில் தமிழகம், அனைத்து காவல்துறை திட்டங்களையும் செம்மையாக செயல்படுத்தி வருகிறது. அதில் நாட்டிலேயே முன்னோடி இடத்தில் உள்ளது. அதேசமயம், இந்த மாநாடானது தேசம் சந்தித்து வரும் சவால்களையும், முக்கியப் பிரச்சினைகளையும் தீர்ப்பதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். மாறாக, மாநிலங்களுக்கு எவ்வளவு நிதி கொடுத்தோம், அதில் எவ்வளவை அவர்கள் செலவு செய்தனர் என்ற கணக்கெடுப்புப் பணிக்கான நிகழ்வாக இருக்கக் கூடாது.

உள்நாட்டுப் பாதுகாப்பைப் பராமரிக்க என்ன செய்யப்பட்டது, அதன் பலன் என்ன என்பதற்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டுமே தவிர புள்ளிவிவரங்கள் குறித்து கவலைப்படக் கூடாது.

உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான சில முக்கியப் பிரச்சினைகள் குறித்து நான் விளக்க விரும்புகிறேன். பொது அமைதியைப் பராமரிப்பது என்பது உள்நாட்டுப் பாதுகாப்பில் மிகவும் முக்கியமானது, முதன்மையானது. பொது அமைதி எங்கு திருப்திகரமாக இருக்கிறதோ, அந்த மாநிலமே அமைதியின் சொர்க்கமாக கருதப்படும். எனது கடந்த 11 மாத கால ஆட்சியில் தமிழகத்தில் பொது அமைதிக்கு எந்த ஒரு வகையிலும், பங்கம் விளைவிக்கும் எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை என்பதை கூறிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்.

பல மாநிலங்களை நிம்மதியிழக்கச் செய்து வரும் மத மோதல்கள், ஜாதி மோதல்கள் தமிழகத்தில் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழை மக்களுக்கும், உதவி தேவைப்படும் மக்களுக்கும் எனது அரசு உரியவற்றைச் செய்து வருவதால், தமிழகத்தில் காலூன்றும் முயற்சியில் இடதுசாரி தீவிரவாதிகள் தோல்வியடைந்துள்ளனர். தொழிலாளர்கள் பிரச்சினை தமிழகத்தில் இல்லை. முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமான பங்கு தரப்படுகிறது.

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலான எந்த நிகழ்வும் இடம் பெற்று விடாத வகையில் காவல்துறையும், அரசும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பிலும், உஷார் நிலையிலும் உள்ளன. உரிய உளவுப் பணிகள், திட்டமிடுதல், பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருப்பதில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது.

அத்தியாவசியப் பொருட்கள் கடத்தலை இரும்புக் கரம் கொண்டு எனது அரசு அடக்கி வருகிறது. சட்டத்தை யார் கையில் எடுத்தாலும் அதை எனது அரசு பொறுத்துக் கொள்ளாது.

ஒவ்வொரு மாநிலமும் தனது மாநில காவல்துறையின் செயல்பாடுகளை, தேவைகளை அதன் மக்கள் மற்றும் தேவைகளின் அடிப்படையில்தான் திட்டமிடுகின்றன. மாறி வரும் சமூக பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு குற்றச் செயல்களின் சூழலும் கூட மாறி வருகின்றன. எனவே அதற்கேற்ப காவல்துறையை நவீனப்படுத்த வேண்டியது, தயார்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

உதாரணத்திற்கு சைபர் குற்றச் செயல்களின் அதிகரிப்பு, கள்ள நோட்டுக்களின் புழக்கம் ஆகியவற்றை வழக்கமான காவல்துறை பாணியில் தடுக்க முடியாது. இதற்கென தனி திறமையும், புலனாய்வுத் திறமையும் தேவைப்படுகிறது. மேலும் இந்த குற்றச் செயல்களைத் தடுக்கத் தேவையான நவீனமயமாக்கலுக்கு அதிக அளவிலான நிதியும் தேவைப்படுகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மத்திய அரசு நிதியளிப்பதில் எப்போதுமே தாராளம் காட்டுவதில்லை. இது தொடர்ந்து வருவது துரதிர்ஷ்டவசமானது. மாநகராட்சிகளுக்கு நிதியளிப்பது போல மாநில அரசுகளுக்கு நிதியளிப்பதில் மத்திய அரசு பெரும் கஞ்சத்தனம் காட்டுகிறது. பாரபட்சம் காட்டுகிறது. மாநிலங்களுக்கு நிதி கொடுக்கவே கூடாது என்பது போல மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால் நிதிக்கு மத்திய அரசைத்தான் மாநில அரசுகள் பெரிதும் நம்பியுள்ளன என்பதை மத்திய அரசு புரிந்து கொள்வதில்லை. இது மிகவும் வருத்தம் தருகிறது. மத்திய அரசின் இந்தப் போக்கு நாட்டுக்கும் சரி, மாநிலங்களுக்கும் சரி நல்ல விஷயமல்ல. தேசிய, மாநில வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாக இது அமையும்.

மாநில காவல்துறை நவீனமயமாக்கலுக்கு மத்திய அரசு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவது கண்டனத்துக்குரியது. மேலும் ஆண்டுக்கு ஆண்டு நிதியைக் குறைத்துக் கொண்டே வருகிறது மத்திய அரசு. உதாரணத்திற்கு, தமிழக காவல்துறை நவீனமயமாக்கலுக்கு 2007-08ம் ஆண்டு மத்திய அரசின் பங்காக ரூ. 75.75 கோடி வழங்கப்பட்டது. இது 2011-12ம் ஆண்டு காலகட்டத்தில் ரூ. 42.27 கோடியாக குறைந்து விட்டது.

அதேசமயம், எனது அரசு கடந்த நிதியாண்டிலேயே காவல்துறை நவீனமயமாக்கலுக்கு ரூ. 357 கோடியை ஒதுக்கியுள்ளது. எனவே மாநில அரசுகள் பலமாக இல்லாவிட்டால், தீவிரவாதத்தை எதிர்த்து தேசத்தால் தீரமாக போராட முடியாது என்பதை மத்திய அரசு உணர வேண்டும். தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிட்டு வெல்வதில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் நிச்சயம் தீவிரவாதத்தை அடிபணியச் செய்ய முடியும்.

நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் எனது ஆட்சியின்போது 1994ம் ஆண்டு கடலோர பாதுகாப்பு குழுக்களை நான்தான் முதன் முதலில் அமைத்தேன். கடலோரம் வழியாக தீவிரவாதிகள் ஊடுறுவலைத் தடுக்கும் வகையில் இந்த போலீஸ் படை அமைக்கப்பட்டது. மேலும் நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில்தான் கடலோர காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இதை இரண்டு கட்டங்களாக நிறுவியுள்ளோம்.

3வது கட்டமாக தமிழகத்தில் 30 கடலோரக் காவல் நிலையங்கள், 20 கண்காணிப்புப் படகுகள், 12 ஜெட்டிகள், 30 நான்கு சக்கர வாகனங்கள், 60 டூவீலர்கள் நிறுவ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடலோரக் காவல் நிலையங்களுக்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டு விட்டது. கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. மேலும், 12 அனைத்து நில மோட்டார் சைக்கிள்கள், 12 அனைத்து நில ஜீப்களும் விரைவில் மாநில நிதியிலிருந்து வாங்கப்படவுள்ளது.

மாநில அரசுகளை புண்படுத்தும் மத்திய அரசின் இன்னொரு செயலை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். மாநில அரசுகளுடன் உரிய ஆலோசனை மேற்கொள்ளப்படாமல் பல முக்கிய முடிவுகளை மத்திய அரசு எடுப்பது அதிகரித்து வருகிறது. உதாரமத்திற்கு, தற்போது தமிழகத்திற்கு அருகே, வங்கக் கடலில், இந்திய, அமெரிக்க கடற்படையினர் இணைந்து மேற்கொண்டு வரும் போர்ப் பயிற்சியைச் சொல்லலாம். இதுகுறித்து தமிழக அரசிடம் மத்திய அரசு உரிய ஆலோசனையை மேற்கொள்ளவில்லை. தன்னிச்சையாக இதை முடிவெடுத்து செயல்படுத்தி வருகிறது. சம்பந்தப்பட்ட கடல் பகுதியில் உள்ள மாநில அரசிடம் இதுகுறித்துத் தெரிவிக்கக் கூட மத்திய அரசு முன்வருவதில்லை.

இதுபோன்ற முக்கிய நிகழ்வுகள் குறித்து முன்கூட்டியே சொல்லாமல் செய்யும்போது அப்பகுதி மக்களிடையே தேவையில்லாத பீதி ஏற்பட வாய்ப்பாக அமையும். மேலும் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் விதமாக, சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரம் மற்றும் இந்திய கடற்படையின் மூத்த அதிகாரிகளை இது நிமித்தமாக என்னைச் சந்திக்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது என்னை அவமதிக்கும் செயலாக நான் கருதுகிறேன். சட்டப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசையும், அதன் முதல்வரையும் மத்திய அரசு எப்படி நடத்துகிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரமம்.

தமிழக காவல்துறை எந்தவிதமான சூழலையும் சந்திக்கத் தயாராகவே உள்ளது. கூடங்குளம் பிரச்சினையாக இருந்தாலும் சரி, முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்சினையாக இருந்தாலும் சரி, தமிழக காவல்துறை அதை திறம்பட சமாளித்து பிரச்சினையை பெரிதாகாமல் பார்த்துக் கொண்டது. எந்தவிதமான ரத்தக்களறியும் இல்லாமல் கூடங்குளம் அணு மின் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படாத வகையில் இதை காவல்துறை செய்துள்ஏளது. மேலும் தமிழக, கேரள எல்லைப் பகுதியில் விஷமிகளால் தூண்டி விடப்பட்ட வன்முறையையும் கூட காவல்துறை வெற்றிகரமாக அடக்கியுள்ளது.

நிலப் பறிப்பு, பொதுமக்களை ஏமாற்றி நிலங்களையும், வளங்களையும் சுரண்டுதல் போன்றவை இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டு வருகின்றன. சென்னை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் மிகப் பெரிய அளவில் தலைவிரித்தாடிய இந்தப் பிரச்சினை இப்போது அறவே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நிலப் பறிப்பு, நில மோசடி தொடர்பாக எங்களுக்கு 34,703 புகார்கள் வந்தன. அதில் விசாரணை நடத்தி இதுவரை ரூ. 758.04 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நில மோசடி வழக்குகளை விசாரிக்க 25 சிறப்பு கோர்ட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு முறையும் நான் தலைநகருக்கு வரும்போதெல்லாம் தமிழகத்திற்குத் தேவையான உதவிகளைப் பெற்றுத் திரும்ப வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் வருகிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் எனக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்த முறையாவது நிலைமை மாறும் என நம்புகிறேன் என்றார் ஜெயலலிதா..

ஜெயலலிதாவைச் சந்தித்த ப.சிதம்பரம்

முன்னதாக மாநாடு தொடங்கும் முன்பு கூட்டத்திற்கு வந்திருந்த முதல்வர்களை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்துப் பேசினார்.அப்போது முதல்வர் ஜெயலலிதாவையும் அவர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு அனைவரையும் வியப்பி்ல ஆழ்த்தியது.

ப.சிதம்பரமும், ஜெயலலிதாவும் சந்தித்து பல காலமாகி விட்டது. ப.சிதம்பரத்தை கடுமையாக விமர்சித்து வருபவர் முதல்வர் ஜெயலலிதா என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் இந்த இருவரும் இன்று சந்தித்துக் கொண்டார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக