வெள்ளி, 6 ஏப்ரல், 2012

குஷிப்படுத்துகிறாள் குலேபகாவலி! எம்.ஜி.ஆர். இன்றும் ஹீரோதான்!

சிவகாசி தங்கமணி தியேட்டரில் குலேபகாவலி இரவு 10 மணி காட்சி பார்த்தேன். ஓரளவுக்கு கூட்டம் இருந்தது. படம் முழுவதும் பாட்டுக்களே. ஆனாலும், பாடல் காட்சியின் போது டீ குடிக்கவோ, தம் அடிக்கவோ யாரும் அரங்கை விட்டுச் செல்லவில்லை.
புதுமையான கதை, அருமையான வசனம், மயக்கும் இசை, நேர்த்தியான நடிப்பு, கவர்ச்சி, காமெடி, சண்டை என இப்படி ஒரு மசாலா படத்தை 1955 களிலேயே மிகப் பிரம்மாண்டத்துடன் இயக்கியிருக்கிறார் டி.ஆர்.ராமண்ணா. படத்தை முடிக்கவே மனமில்லாததாலோ என்னவோ, மூன்று மணி நேரத்துக்கும் மேலாக குலேபகாவலி திரையில் ஜொலிக்கிறாள்.
ஒவ்வொரு காட்சியிலும் எம்.ஜி.ஆர்., சந்திரபாபு, கே.ஏ.தங்கவேலுவின் பாடி லாங்வேஜ் வியக்க வைக்கிறது. டி.ஆர். ராஜகுமாரி இருக்கிறாரே..! சொல்லவே வேண்டாம். காட்சிக்கு காட்சி சொக்க வைக்கிறார்இடைவேளையின் போது 75 வயது மூத்த ரசிகர் ஒருவரிடம் ‘பெரியவரே! இந்த வயசுலயும் இந்த ராத்திரி ஷோவுக்கு வந்திருக்கீங்களே..?’ என்று பேச்சு கொடுத்தேன். “அதுவா..? எப்படியும் இந்தப் படத்த அம்பது தடவைக்கு மேல பார்த்திருப்பேன். இப்பக் கூட எனக்கு இது பழைய படமாத் தெரியல. படத்த பார்த்துக்கிட்டிருக்கிறப்ப அந்தக்கால நினைவுகளெல்லாம் வந்து போகுது. இப்ப எனக்கு நாப்பது வயசு குறைஞ்சாப் போல இருக்கு..” என்று பொக்கை வாயைத் திறந்தார்.

படம் ரிலீஸாகி 57 வருடங்களுக்குப் பிறகும் ஒரு கருப்பு வெள்ளை திரைப்படத்தை ரசிகர்கள் இந்த அளவுக்கு ரசிக்க முடிகிறதென்றால், அந்தக் காலக்கட்டத்தில் இந்தத் திரைப்படத்துக்கு எத்தனை வரவேற்பு இருந்திருக்கும் என்பதை எண்ணும் போது மலைப்பாக இருக்கிறது. ரசிகர்கள் தரும் ஒவ்வொரு காசுக்கும் உண்மையாக உழைத்திருக்கிறார்கள் அன்றைய கலைஞர்கள்!
ஒரு பழைய சினிமாவைப் பார்த்து ரசித்து பதிவும் செய்திருக்கிறானே “பைத்தியக்காரன்..” என பட்டம் கொடுத்து விடாதீர்கள். மக்களின் சிந்தனை, வேட்கை எந்த ஒரு படைப்பை நோக்கிப் பயணிக்கிறதோ அதுதான் கலை! கலை என்பது மக்களுக்கானதே!

-சி.என்.ராமகிருஷ்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக