வெள்ளி, 13 ஏப்ரல், 2012

கர்ப்பிணி மனைவி எரித்து கொலை காதலித்து திருமணம்


ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த எலக்காயலபல்லி கிராமத்தை சேர்ந்தவர் மது (26). இவரும், சந்தப்பேட்டை கொத்தூர் பகுதியை சேர்ந்த பிரியா (21) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஒன்றரை வயதில் ஜஸ்வந்த் என்ற குழந்தை இருந்தது. பிரியா, தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இவர்கள் திருமணத்துக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த இருவீட்டு பெற்றோரும் குழந்தை பிறந்த பிறகு ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து பிரியாவின் பெற்றோர் ரூ.1 லட்சம், 6 சவரன் நகைகளை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த வாரம் போலீஸ் வேலைக்கு மது விண்ணப்பித்துள்ளார். அப்போது ‘எனக்கு வேலை விஷயமாக ரூ.1 லட்சம் வேண்டி உள்ளது. உனது வீட்டுக்கு சென்று பணம் வாங்கி வா’ என பிரியாவிடம் கேட்டாராம்.


இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மதுவுக்கு ஆதரவாக அவரது பெற்றோரும் பணம் கேட்டு பிரியாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, இதுதொடர்பாக வீட்டில் பெரிய சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று பிரியாவின் பெற்றோரை தொடர்பு கொண்டு பேசிய மது, பிரியா மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாகவும் அவருடன் ஜஸ்வந்த்தும் எரிந்து இறந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெலுமூருக்கு விரைந்தனர். அங்கு பிரியா, ஜஸ்வந்த் கருகிய நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்து கதறி அழுதனர்.

ஆனால் வீட்டில் யாரும் இல்லை. இதுகுறித்து தெலுமூர் காவல் நிலையத்தில் பிரியாவின் தந்தை புகார் செய்தார். அதில் ‘எனது மகளையும், பேரனையும் மதுவும், அவரது பெற்றோரும் சேர்ந்து எரித்துக் கொன்று விட்டு, தலைமறைவாகி விட்டனர்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவான மது மற்றும் அவரது பெற்றோரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக