திங்கள், 9 ஏப்ரல், 2012

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் மக்கள் புதுமை படைப்பார்கள???

புதுக்கோட்டை தொகுதிக்கு நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து, இங்கு வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடனான உறவு, உள்ளாட்சித் தேர்தலுடன் முறிந்த பிறகு, புதுக்கோட்டையை வளைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இடைத்தேர்தல் அறிவிப்பு வந்தவுடன், "கோட்டை' புதுக்கோட்டைக்கு இடம்பெயர்வதில் ஆச்சர்யம் இருக்காது.
ஓரணியில் எதிராளிகள்: புதுக்கோட்டையில், அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சங்கரன்கோவில் பாணியில் எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், "அ.தி.மு.க.,வின் பலத்தை அசைத்து பார்க்க வேண்டும் என்பதற்காக, எதிரிகள் ஓரணியில் திரண்டு தேர்தலை சந்திக்க முயற்சிக்கலாம். அப்படி ஒரு சூழ்நிலை உருவானால் அதை முறியடிக்க, அ.தி.மு.க., தொண்டர்கள் தயாராக வேண்டும்' என்றார்.
பஸ் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு அறிவிப்புக்கு பின் வந்த, சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதால், அ.தி.மு.க., பெருமிதத்துடன் உள்ளது. அனைத்து அமைச்சர்களும், அரசு சம்பளத்தை வாங்கிக் கொண்டு, ஒரு மாதமாக சங்கரன்கோவிலில் முகாமிட்டு கட்சிப் பணியாற்றி, இந்த இலகுவான வெற்றியை பெற்றுள்ளனர். இதற்காக, சென்னை தலைமைச் செயலகமே, சங்கரன் கோவிலில் இடம்பெயர்ந்து இருந்தது.
எதிர்பார்ப்பு:இந்த கூத்து முடிந்து இரண்டு மாதம் கூட ஆகவில்லை. மீண்டும், "கோட்டை' புதுக்கோட்டைக்கு இடம்பெயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வை எதிர்த்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுமா, அல்லது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, அ.தி.மு.க.,வை ஆட்டிப் பார்க்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை, பொது வேட்பாளராக அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடுங்கோபம்:தமிழகம் முழுவதும் மின்வெட்டு பிரச்னையை சகஜமாக ஏற்றுக் கொள்ள பழகிவிட்ட மக்களுக்கு, மின்வெட்டை விட மின் கட்டண உயர்வு பேரிடியாக தாக்கியுள்ளது. இதனால், மக்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.இந்த சூழ்நிலையில், புதுக்கோட்டை இடைத்தேர்தல் மக்களுக்கு எதிர்ப்பை காட்டுவதற்கு ஒரு கருவியாக இருக்கும் என்ற பாணியில், அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து, ஆளுங்கட்சிக்கு நெருக்கடியை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தான் அமைச்சர் பன்னீர்செல்வம், புதுக்கோட்டை செயல்வீரர்கள் கூட்டத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் சொல்வது போல், நடந்தாலும் நடக்கலாம்.அப்படிவந்தால், புதுக்கோட்டை மக்கள், பணத்துக்கு விலை போகாமல், தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றுவார்களேயானால், ஆளுங்கட்சிக்கு சரியான பாடம் கற்பிக்க முடியும் என்பது, அரசியல் வல்லுனர்களின் கருத்து.

- நமது சிறப்பு நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக