வியாழன், 12 ஏப்ரல், 2012

300 ஆண்டாக தண்ணீரில் விளக்கு எரியும் அதிசயம்

ராசிபுரம் அருகே, 300 ஆண்டுகளுக்கும் மேல் கொண்டாடப்படும் பச்சைத்தண்ணி மாரியம்மன் கோவில் திருவிழாவில், தண்ணீரில் விளக்கு எரியும் நிகழ்ச்சி, பக்தர்களை பரவசப்படுத்தி வருகிறது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தட்டான்குட்டையில், பிரசித்தி பெற்ற பச்சைத்தண்ணி மாரியம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழைமையான இக்கோவிலில்,
ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டு விழா, கடந்த 8ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு, அன்று இரவு 10 மணிக்கு ஸ்வாமிக்கு பூச்சாட்டுதல் மற்றும் காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து, மறுநாள் காலை 9 மணிக்கு சக்தி அழைத்தல், மாலை 4 மணிக்கு அலகு குத்துதல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 10 மணிக்கு கரகம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு, கோவில் கிணற்றில் பூசாரி புனித நீராடி, சிறிய குடத்தில் தண்ணீர் எடுத்து வந்தார். அதை தொடர்ந்து, கோவில் முன் சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்த விளக்கில் இருந்த எண்ணெய் முழுவதையும் வடித்தார். பின்னர், கிணற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட பச்சைத் தண்ணீரை விளக்கில் ஊற்றி பற்ற வைத்தார். அப்போது, திரி கொளுந்து விட்டு எரிந்தது. இக்காட்சியை, சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கண்டு பரவசப்பட்டனர். தொடர்ந்து, ஒன்றரை மணி நேரம் எரியும் விளக்கு காலை 6 மணிக்கு எரிந்து அணைந்துவிடும். இந்நிகழ்ச்சி, ஆண்டு தோறும் ஒருநாள் மட்டும் தொன்று தொட்டு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. காலை 7 மணிக்கு கிடா வெட்டு நிகழ்ச்சியும், அன்று மாலை 5 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. பச்சைத்தண்ணி மாரியம்மன் ஸ்வாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்திருந்தனர்.

இது குறித்து கோவில் பூசாரிகள் வெங்கட், நடேசன் ஆகியோர் கூறியதாவது: பச்சைத்தண்ணி மாரியம்மன் கோவில் திருவிழா, 300 ஆண்டுகளுக்கு மேலாக கொண்டாடப்பட்டு வருகிறது. எங்கள் முன்னோர்கள் காலத்தில், ஒரு முறை கோவில் விளக்கில் இருந்து எண்ணெய் தீர்ந்துவிடும் நிலையில் இருந்தது. அப்போது ஊர் தர்மகர்த்தாவிடம் சென்று, விளக்குக்கு எண்ணெய் வாங்க பணம் கேட்டனர். அதற்கு அந்த தர்மகர்த்தா, "என்னிடம் காசு இல்லை எனக்கூறியதுடன், சக்தி உள்ள ஸ்வாமி மாரியம்மன் தானே; தண்ணீர் ஊற்றி பற்றவை எரியும்' என, விரக்தியில் கூறினார். அதை தொடர்ந்து, பூசாரிகள் தண்ணீர் ஊற்றி பற்றவைத்தனர். அப்போது தீ சுடர் விட்டு எரிந்ததை கண்டு ஆச்சரியப்பட்டனர். அன்று முதல் ஸ்வாமி பச்சைத்தண்ணி மாரியம்மன் என அழைக்கப்படுகிறது. ஸ்வாமிக்கு ஆண்டு தோறும் கோவில் திருவிழாவின் போது, தண்ணீர் ஊற்றி பற்றவைத்து வழிபாடு நடத்துவது, தொன்று தொட்டு நடந்து வருகிறது. அதன் கிளை கோவில், சேலம் ஐந்து ரோட்டிலும், மும்பையிலும் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்
 
madurai virumaandi - San Jose, CA,யூ.எஸ்.ஏ
ஆஹா, இது மூலிகை பெட்ரோலை விட சூப்பரா இருக்கே... ராசிபுரத்திலே எண்ணைக் கிணறு தோண்டினா சுத்தமான மண்ணெண்ணெய் அல்லது ஸ்பிரிட் / சாராயம் கிடைக்க வாய்ப்பு இருக்கு.. சாமியை நம்புறவன் கூட இந்த சங்கதியை நம்பமாட்டான்.. இதுக்கு கிளைகள் வேறு இருக்காம்.. பேசாமே பெட்ரோல் பங்கு மாரியம்மன்னு பேர் வச்சு தண்ணியை வித்தா பணம் சம்பாதித்து ஏழைகளுக்கு உதவலாம்... அதுக்கு மனசில்லையா, வைரத் தேர் கட்டி அதிலே அம்மனை வச்சி அழகு பாக்கலாமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக