வெள்ளி, 20 ஏப்ரல், 2012

100 பெட்டிஷன்' போட்டு வழக்கை இழுத்தடிக்கும் ஜெ-நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரும் ஆச்சாரியா


Jayalalitha and BV Acharya


பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடிக்கும் பல்வேறு நீதிமன்றங்களில் 100க்கும் அதிகமான மனுக்களை தாக்கல் செய்து நீதி நிலைநாட்டப்படுவதை சீர்குலைக்க முயலும் முதல்வர் ஜெயலலிதா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறும், இந்த வழக்கில் சசிகலாவின் ஜாமீனை ரத்து செய்யுமாறும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா கோரிக்கை விடுத்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்டுள்ள வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி மல்லிககார்ஜுனய்யா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சுதாகரன் ஆஜராகியிருந்தனர். இளவரசி ஆஜராகவில்லை. அவருக்கு நீரிழிவு நோய் இருப்பதால் அவர் மயக்கமடைந்துள்ளார். எனவே அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர்கள் பி.குமார், மணிசங்கர், அசோகன், கந்தசாமி, செந்தில் ஆஜராகினர். அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, துணை வழக்கறிஞர் சந்தேஷ் சௌட்டா ஆகியோர் ஆஜராயினர்.

நீதிபதியின் கேள்விகளுக்கு விளக்கமான பதில் அளிப்பதற்கு எனது கட்சிக்காரருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ஆவணங்களின் நகல்களை படிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இதற்கு அரசுத் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது பேசிய ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார், சொத்துக் குவிப்பு வழங்கு பல ஆண்டுகளாக நடந்து வருவதால் எங்கள் தரப்பில் உள்ளவர்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும், அதற்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறிய பதில்கள் எதுவும் நினைவில் இல்லை. இதனால் நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு தெரியாது, ஞாபகமில்லை என்ற பதிலைக் கூறவேண்டியுள்ளது. ஆவணங்களைப் பார்க்க நீதிமன்றம் அனுமதித்தால் எங்களுக்கு இந்தப் பிரச்சனை ஏற்படாது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆவணங்களை காட்ட வேண்டியது நீதிமன்றத்தின் கடமை. இது போன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்த பல்வேறு வழக்குகளில் ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

ஜெயலலிதா மீது அவமதிப்பு நடவடிக்கை தேவை-அரசு வழக்கறிஞர்:

இதையடுத்து வாதிட்ட அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா,
இவர்களுக்கு இதே வேலையாகி விட்டது. சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்வது, இங்கு தள்ளுபடியான பின், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் சென்று வழக்கின் விசாரணையை தாமதப்படுத்துவது என்பது இவர்களுக்கு வழக்கமாகிவிட்டது.

இந்த வழக்கில் தொடர்ந்து பல நீதிமன்றங்களில் மனுக்களை தாக்கல் செய்து வழக்கு விசாரணையை இழுத்தடித்து, நீதி நிலைநாட்டப்படுவதையே சீர்குலைக்க முயலும் ஜெயலலிதா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து சிறப்பு நீதிமன்றம் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு கோரிக்கை வைக்க வேண்டும்.

ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் இதுவரை வழக்கை இழுத்தடிக்க மட்டும் 100 மனுக்களை பல்வேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்துள்ளனர். இது நீதிமன்றத்தை அவமதிக்கும் கிரிமினல் நடவடிக்கையாகும்.

இதனால் சட்ட விதி 15(2)-ன் கீழ் ஜெயலலிதா, சசிகலா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு இந்த நீதிமன்றம் கோரிக்கை வைக்க வேண்டும்.

சசிகலா ஜாமீனை ரத்து செய்யலாம்:

மேலும் இவர்கள் ஜாமீனில் இருப்பதால் தான் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வழக்கை இழுத்தடித்து வருகின்றனர்.

இந்த வழக்கு 15 ஆண்டுகளாக நடந்து வருகிறது. சென்னை உயர் நீதிமன்றம், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், கர்நாடகா உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என, மாறி மாறி மனுக்களை போட்டு, வழக்கு விசாரணையை தடுத்து வருகின்றனர். இந்தச் செயல், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்து, அவமதிப்பதாக உள்ளது. பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்து, இந்திய சட்டவிதி, 971ன் பிரிவை பயன்படுத்தி, குற்றம் சாட்டப்பட்ட சசிகலாவின் ஜாமீனை ரத்து செய்து, வாக்குமூலம் பெறவும் சட்டத்தில் இடமுள்ளது.

தற்போது தாக்கல் செய்த மனுவை நிராகரித்து, சட்ட விதி, 313ன் படி, சசிகலாவிடம் கேள்வி கேட்பதை தொடர வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தினமும் விசாரணை நடத்தி வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.

இதனையடுத்து நீதிபதி மல்லிகார்ஜுனையா, ஆவணங்களைப் பார்க்க அனுமதிக்கக் கோரிய ஜெயலலிதா, சசிகலாவின் மனுக்கள் மீதான உத்தரவை ஏப்ரல் 21ம் தேதி (நாளை) தெரிவிப்பதாகக் கூறி, வழக்கை ஒத்திவைத்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக