சனி, 10 மார்ச், 2012

சங்கரன்கோவில் யாருக்கு?- களநிலவரம் Opinion

திருநெல்வேலி: தமிழக அரசியல் கட்சிகளின் "திராணியை" தீர்மானிக்கக் கூடியதாக சங்கரன்கோவில் தொகுதியில் விசைத்தறியாளர்கள் அதிகம் இருப்பதால் மின்வெட்டு விவகாரம்தான் முதன்மையான பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது.
சங்கரன்கோவில் தொகுதி
விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த சங்கரன்கோவில் தொகுதி முதன் முதலாக இடைத்தேர்தலை சந்திக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1957ல் நடந்த முதல் பேரவைத் தேர்தலில் தொடங்கி கடந்த 2011 தேர்தல் வரை 13 பேரவைத் தேர்தல்களை சங்கரன்கோவில் தொகுதி சந்தித்துள்ளது.
காங்கிரஸ்
1957ல் தனி தொகுதியில் இரட்டை உறுப்பினர்கள் என்பதால் காங்கிரசை சேர்ந்த ஊர்காவலன், சுப்பையா முதலியார் ஆகிய இரண்டு பேரும் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்கள்.
1962 தேர்தலில் காங்கிரசை சேர்ந்த மஜித் வெற்றி அமைச்சராக பொறுப்பேற்றார்.
திமுக
அதன் பிறகு 1967, 1971, 1977 ஆகிய மூன்று சட்டசபை தேர்தல்களிலும் திமுக வெற்றி வாகை சூடியது.
அதிமுக கோட்டை
1980ல் அதி்முக சார்பாக போட்டியிட்ட துரைராஜ் வெற்றி பெற்று அதி்முகவுக்கு சங்கரன்கோவில் தொகுதியில் முதல் தொடக்கத்தை ஏற்படுத்தினார். அன்று முதல் 2011 வரை நடந்த தேர்தல்களில் 8 தேர்தல்களில் 7-ல் அதிமுகவே வென்று வருகிறது. 1989 தேர்தலில் மட்டும் திமுகவை சேர்ந்த தங்கவேலு வெற்றி பெற்றார்.

அதிமுகவை சேர்ந்த மரணம் அடைந்த முன்னாள் அமைச்சர் கருப்பசாமி 1996, 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக 4 முறை வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தற்போது இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

மிகவும் வறட்சியான கிராமங்கள் அதி்கமுள்ள தொகுதி என்பதால் சங்கரன்கோவில் தொகுதியில் பெரிதாக எந்த வளர்ச்சி திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. முன்பு குடிநீருக்காக கிணறுகளை தேடி அலைந்த காலம் மாறி இன்று குழாய் மூலம் குடிநீர் வருகிறது. இதனால் தான் இங்கு மக்கள் ஓரளவு நிம்மதியாக உள்ளனர்.

சங்கரன்கோவில் தொகுதி எஸ்டி, எஸ்சி பிரிவினருக்கான தனி தொகுதி என்பதால் தாழ்த்தப்பட்டவர்களின் வாக்குகளை அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பங்கு போடும் நிலை தான் உள்ளது. மற்ற சமுதாய அமைப்புகளின் வாக்கை எந்த வேட்பாளர் அதிகமாக வாங்குகிறாரோ அவருக்கே வெற்றிக் கனி கிடைக்கும்.

2011-ல் நடந்தது என்ன?

2011-ம் ஆண்டு பேரவைத் தேர்தல் முடிவுகள்:


மொத்த வாக்காளர்கள் 2,05,840

ஆண் 1,02,795, பெண் 1,03,045,

கருப்பசாமி (அதி்முக) - 72297, உமா மகேஸ்வரி (தி்முக) - 61902. சாரதா (பாஜக) - 1862, குமார் (பிஎஸ்பி) - 815,

அன்றும் இன்றும்

கடந்த தேர்தலில் அதிமுக அணியில் இடதுசாரிகள், தேமுதிக, புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை ஓரணியில் நின்றன.

இம்முறை நிலைமையோ தலைகீழாகிவிட்டது!

அதிமுக அணியில் சமத்துவ மக்கள் கட்சியும் புதிய தமிழகமும் மட்டுமே இருக்கிறது.

தேமுதிக, அதிமுகவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவுடன் களம் இறங்கியிருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ யாருக்கும் ஆதரவில்லை என்று கூறிவிட்டது.

தி்முக கூட்டணியில் கடந்த தேர்தலில் இருந்த கூட்டணி அப்படியே தொடர்கிறது.

கடந்த தேர்தலில் போட்டியிடாத மறுமலர்ச்சி தி.மு.க. இத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கி கலக்குகிறது.

இதே போல் 1862 வாக்குகளைப் பெற்று டெபாசிட் இழந்த பாரதிய ஜனதா கட்சி சற்று மனம் தளராமல் மீண்டும் போட்டியிடத் துணிந்திருக்கிறது.

2006-ம் ஆண்டு தேர்தலில் சங்கரன்கோவிலில் தனித்துப் போட்டியிட்ட தேமுதிகவின் இதே வேட்பாளர் பெற்ற வாக்குகள் 5531தான். டெபாசிட்டையும் அவர் இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கள நிலவரம்

சங்கரன்கோவில் தொகுதியில் மொத்தம் 13 பேர் களம் காணுகின்றனர்.

அதிமுக தரப்பில் 32 அமைச்சர்கள் உள்ளிட்ட 43 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு குட்டியூண்டு சங்கரன்கோவிலை 43 மண்டலங்களாக கூறுபோட்டு ஒரு மண்டலத்திற்கு சுமார் 250 பேர் என களம் இறக்கப்பட்டுள்ளனர். இதுபோல் சரத்குமார், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரும் களத்தில் இறங்கியுள்ளனர். சங்கரன்கோவில் தொகுதியை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து திராணியை நிரூபித்தாக வேண்டிய நிலைமை அதிமுகவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

திமுகவைப் பொறுத்தவரையில் இடைத்தேர்தல் நாயகன் என்று அழைக்கப்படுகிற மு.க. அழகிரியின் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், காங்கிரஸ் பிரமுகர் என முகாமிட்டு தேர்தல் பணியை மேற்கொள்கின்றனர்.

மதிமுக சார்பில் அக்கட்சியின பொது செயலாளர் வைகோவும், துணை பொது செயலாளர் மல்லை சத்தியா, பிரச்சார பீரங்கி நாஞ்சில் சம்பத், மாவட்ட செயலாளர்கள் நிஜாம், சரவணன், வேட்பாளர் சதன்திருமலைக்குமார் உள்ளிட்டவர்கள் மற்றும் இணையதள நண்பர்கள், கட்டுகோப்பான கரன்சிகளுக்கு விலை போக அன்றாட கூலி வேலைக்கு போகும் தொண்டர்கள் களத்தில் உள்ளனர்.

இவர்களுக்கும் சளைக்காமல் திராணி இருக்கிறது என்று தீக்குளித்தாக வேண்டிய தேமுதிக தனது ஒட்டுமொத்தமாக 29 எம்.எல்.ஏக்கள் பட்டாளத்தையும் இறக்கிவிட்டிருக்கிறது.

கலங்க வைக்கும் புலி

இரு திராவிட கட்சிகளையும் எதிர்த்து வைகோ சூறாவளி பிரச்சாரம் செய்து வருவது அனைத்துக் கட்சிக்காரர்களையும் கலங்கடித்துள்ளது. இதற்குக் காரணம் அவரது பிரச்சாரத்தில் உண்மையான பிரச்சனைகளை மக்கள் மத்தியில் ஆழமாகவும், அழுத்தமாகவும் பதிய வைத்து வருகிறார்.

இத்தொகுதியில் தொழில் வசதி, குடிநீர் வசதி, அடிப்படை பிரச்சனையான கழிப்பிட வசதி, சாலை வசதி, மின் வசதி, விவசாயத்திற்கான கால்வாய் வசதி என எவ்விதமான வசதிகளும் இன்றி புறக்கணிக்கப்பட்டுள்ளது ஒருருபக்கம், மறு பக்கமோ 20 ஆயிரம் விசைத்தறியாளர்கள் குடும்பங்கள் மின் வெட்டாலு்ம், கூலி உயர்வு பிரச்சனையாலும் திணறி குடும்பம் நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவையெல்லாம் வைகோவின் பிரச்சாரமாக உள்ளது.

இதையேல்லாம் விட அவர் எந்த கிராமத்திற்கு போனாலும் அங்கெல்லாம் திரண்டிருக்கும் ஜாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் சண்டையிட்டு கொள்ளாதீர்கள். கட்சிக்காக கூட சண்டையிட்டு கொள்ளாதீர்கள். அப்படி சண்டையிட்டால் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியாது. நம் லட்சியம் சிதறிவிடும். இளைய சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சி, கல்வி வளர்ச்சி பாழ்பட்டு விடும் என
பட்டென சொல்கிறார். காரணம் சங்கரன்கோவிலில் கடந்த பிப்ரவரியி்ல் இரு தரப்பினருக்கும் நடந்த திடீர் மோதலில் ஒரு வாரம் அப்பகுதி பெரும் பாதிப்பை சந்தித்ததும், அதனை எந்த கட்சியும் ஏற்று இருதரப்பு மக்களிடமும் சமாதானத்தையும், அமைதியயும் ஏற்படுத்தாததையும் கருத்தில் கொண்டும், தமிழகத்தில் சாதி கலவரம் ஏற்பட்டால் அதில் முதலில் சங்கரன்கோவிலில் எதிரொலிக்கும்
என்பதையும் அறிந்தே அவரின் பிரச்சாரம் அமைந்துள்ளது.

சங்கரன்கோவில் தொகுதியைப் பொறுத்தவரை தற்போது ஜாதிய வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்ய வேண்டும் என்பதற்காக அந்தந்த ஜாதி முன்னாள், இன்னாள்களை அந்தந்த கட்சிகள் களத்தில் இறக்கி விட்டுள்ளன. அதிமுக, திமுக, மதிமுகவுக்கு கிராமங்களில் கடும் போட்டி உள்ளது.

ஆளும் அதிமுகவுக்கு இத்தொகுதியில் மதிமுக பெரும் சவாலாக உள்ளது. 10ம் தேதிக்கு பின் வைட்டமின் பி இறக்கப்படலாம் என்ற தகவல் தொகுதி முழுவதும் இருந்தாலும் கொடுப்பதை வாங்கிக் கொண்டு ஓட்டை மாற்றி போடவும் மக்கள் தயாராகி வருகின்றனர்.

திண்டுக்கல் இடைத்தேர்தல் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இடம்பெற்றதைப் போல சங்கரன்கோவில் தொகுதிக்கும் வரலாறு கதவுகளைத் திறந்துவைத்திருக்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக