வெள்ளி, 30 மார்ச், 2012

Ilayaraja.சாட்சியோடு உறுதியாக நிரூப்பித்தார் மரி மரி நின்னே.

நான் தேவன்டா’ சிவாஜியின் பெருமை-‘கண்ணதாசன் குழந்தை மாதிரி’-  இளையராஜா மட்டும்…

நீங்கள் ஆதரிக்கும் இளையராஜா பிராமண ஆதரவாளராக தானே இருக்கிறார்? அவரை மட்டும் விமர்சிக்க மறுப்பது ஏன்
-தமிழ்மகன், திருநெல்வேலி.
இதுகுறித்து நான் ஏற்கனவே பல முறை விளக்கி இருக்கிறேன். தங்கம் வாசர்களுக்கு அதை மீண்டும் தருகிறேன்.
தமிழ்நாடு கடவுளையே கடுமையாக விமர்சித்த பூமி. அப்படியிருக்கையில் இளையராஜா மட்டும் விமர்சனங்களுக்கு விலக்கானவர் இல்லை.
99 சதவீதம் இளையராஜா நம்மோடு இசை மூலமாகத்தான் தொடர்பு கொண்டிருக்கிறார். ஒரு சதவீதமே அவரின் வார்த்தைகள் நம்மை சேர்ந்திருக்கும். 99 சதவீதத்தைப் பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்காதவர்கள்,
ஒரு சதவீதத்தை வைத்துக் கொண்டு அதையே 100 சதவீதம் விமர்சிக்கிறார்கள். “இதுதாண்டா சாக்கு’ன்னு அவரின் பிரமிக்க வைக்கிற இசை அறிவையும் சேர்த்து இளையராஜாவை முற்றிலுமாக நிராகரிக்கிறார்கள்.
தீவிர பார்ப்பன உணர்வு கொண்ட கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த சிந்து பைரவி திரைப்படத்தில் அவர் செய்த கலகம் எத்தனைப் பேருக்கு தெரியும்?
சாருமதி ராகம் நாட்டுபுறப் பாடலில் இருந்து களவாடியது என்பதைபாடறியேன்படிப்பறியேன்…’ என்ற பாடலில் சுரங்களோடு பாடி நிரூபித்ததை எத்தனை அறிஞர்கள் அறிந்திருக்கிறார்கள். அந்தப் பாடலை “மரி மரி நின்னே..’ என்று சாருமதி ராகத்தில் அமைந்த ஒரு கீர்த்தனையோடு முடித்திருப்பார் ராஜா.
சாருமதி நாட்டுப்புறப் பாடலில் இருந்து திருடியதுதான் என்பதை சாட்சியோடு உறுதியாக நிரூப்பித்திருப்பார். அந்தப் பாடலின் இன்னொரு அதிரடி சிறப்பு என்ன தெரியுமா? அந்த சாருமதி ராகம் இளையராஜா உருவாக்கியது. “மரி மரி நின்னே’ என்கிற வரி காம்போதி ராகத்தில் தியாகய்யர் எழுதியது. அதை இளையராஜா தனது அபாரமான பிரமிக்க, வைக்கிற இசை ஆற்றலால் தான் உருவாக்கிய சாருமதி ராகத்தில் இட்டு நிரப்பினார். தியாகய்யரையே மெட்டுக்கு பாட்டெழுத வைத்தார்.
அந்தப் பாடலுக்குப் பிறகு நாட்டுப்புறப் பாடல்கள் மீது ஒரு மதிப்பும், திரை இசை மீது ஒரு மரியாதையையும், கர்நாடக இசை குறித்த ஒரு கலக்கமும் உருவானது.
 “இசை ரீதியாக இது சரியாகத்தானே இருக்கிறது தப்பென்றால் நிரூபி’ என்கிற தனது ஈடு இணையற்ற இசையறிவு தந்த செருக்கால் அதை செய்து முடித்தார் இசைஞானி.
ஆனால் அவரை விமர்சிப்பவர்கள், இதுபோன்ற அவருடைய சாதனைகளை பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் சகட்டுமேனிக்கு விமர்சிக்கிறார்கள்.
கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் முதல் ஏ.ஆர்.ரகுமான் வரை உள்ள திரை இசை அமைப்பாளர்களை பார்ப்பன எதிர்ப்பாளர்களாகவோ, அல்லது பார்ப்பனியத்தை ஆதரிக்காதவர்களாகவோ இருக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. அவர்களை சிறந்த திரை இசை அமைப்பாளர்களாக மட்டும் பார்க்க தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், இளையராஜாவை மட்டும் அப்படி பார்ப்பதில்லை.
திராவிட இயக்கத்தையும் பெரியாரையும் கடுமையாக எதிர்த்து ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ எழுதிய பார்ப்பன மோகியான கண்ணதாசனை அதையெல்லாம் தாண்டி, ‘அவர் ஒரு குழந்தை மாதிரி’ என்றும், இசை அமைப்பாளர்களின் திறமையால் (மெட்டுகளால்) உயிர் பெற்று இருக்கும் அவருடைய அர்த்தமற்ற திரைப்பாடல்களுக்காக, ‘கண்ணதாசன்னா கண்ணதாசன்தான்’னு கொண்டாடுகிற முற்போக்காளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களும் இளையராஜாவை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
பார்ப்பன ஆதரவாளரும், சுயஜாதி அபிமானமும் கொண்ட, ‘நான் தேவன்டா’ என்று வசனம் பேசியவரும், தனது கடைசி காலங்களில் ஜாதி சங்க மாநாடுகளில் கலந்து கொண்ட சிவாஜி கணேசனை அதையெல்லாம் தவிர்த்து, ‘மிகச் சிறந்த கலைஞர்’ என்று அவர் திறமையைத் தனித்துப் பார்க்க தெரிந்திருக்கிறவர்கள்தான், சுயஜாதி அபிப்பிராயம் சுத்தமாக இல்லாத இளையராஜாவை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக